Monday, 1 June 2015

ஜாதகத்தில் வெளிநாட்டுப் பயணம்

ஜாதகத்தில் வெளிநாட்டுப் பயணம் மற்றும் வெளிநாட்டில் வசிப்பது போன்றவற்றை குறிப்பிடுபவை 9,12ம் இடங்கள்தான். இந்த இடங்கள் சர ராசிகளான மேசம், கடகம், துலாம், மகரம் போன்ற ராசிகளில் அமைந்தாலோ ஜல ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் போன்ற ராசிகளில் அமைந்தாலோ வெளி நாட்டிற்கு செல்லும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படும்.
இவற்றுள் கடக ராசிக்கு வெளிநாட்டு யோகத்தைக் கொடுப்பதற்கான பலம் அதிகம் இருக்கிறது. காரணம் இது, சர ராசியாகவும், ஜல ராசியாகவும் இரட்டிப்புத் தகுதி பெறுகிறது.
12 லக்னங்களில் ரிஷப, சிம்ம, விருச்சிக, கும்ப லக்னக்காரர்களுக்கு மற்ற லக்னத்தில் பிறந்தவர்களை விட வெளிநாடு செல்லும் யோகம்/வாய்ப்பு அதிகம் ஏற்படும். காரணம் இந்த லக்னங்களுக்கு 9 மற்றும் 12 இடம் ஆகிய 2 இடங்களும் சர ராசியாகவோ அல்லது ஜல ராசியாகவோ வரும்.
உதாரணமாக ரிஷப லக்னகாரர்களுக்கு மகரம் 9ம் இடமாகவும், மேசம் 12ம் இடமாகவும், சிம்ம லக்ன காரர்களுக்கு மேசம் 9ம் இடமாகவும், கடகம் 12ம் இடமாகவும் அமையும். விருச்சிக லக்னகாரர்களுக்கு கடகம் 9ம் துலாம் 12ம் இடமாகவும் அமையும். கும்ப லக்னகாரர்களுக்கு துலாம் 9ம் இடமாகவும், மகரம் 12ம் இடமாகவும் அமையும்.
9,12ம் இடம் இவற்றில் ஒரு வீடு மட்டும் சர அல்லது ஜல ராசியில் அமைந்தால் சற்று குறைந்த அளவேனும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். இவற்றில் 9,12 வீடுகளில் ஒன்று கூட சர ராசியாகவோ/ஜல ராசியாகவோ இல்லாவிட்டால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு குறைந்தே காணப்படும். வாய்ப்பு குறைவு என்பதை அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள். காரணம் வாய்ப்பே இல்லை என்று சொல்லவில்லை.
ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளாலும் வெளிநாட்டுப் பயணம் ஏற்படலாம். அந்த கிரக நிலைகளை வைத்து என்ன காரணத்திற்காக வெளிநாடு செல்ல வேண்டி வரும் என்பதையும் தெரிந்துக் கொள்ளலாம்.
உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் 4ம் அதிபதி 9ல் இருந்து அந்த 9ம் இடம் சர ராசியாகவோ ஜல ராசியாகவோ இருந்து 12ம் அதிபதியுடன் சம்பந்தமானால் (பரிவர்த்தனை, சேர்க்கை, பார்வை இவற்றில் ஏதாவது ஒன்று) மேல் படிப்பிற்காக அவர் வெளிநாடு செல்வார் என்று முடிவெடுக்கலாம். (4 இடம், தொடக்க/இடைநிலைப் படிப்பிற்கான இடம் என்றும், 9ம் இடம் மேல் நிலை, பல்கலைக் கழக படிப்பைக் குறிப்பிடும் என்று சொல்லப் படுகிறது).
வேறொருவர் ஜாதகத்தில் 4ம் அதிபதி 12ல் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்படிப் பட்டவர் பிறந்த நாட்டில் இருப்பதை விட வெளி நாட்டில் இருப்பதையே அதிகம் விரும்புவார். வெளி நாட்டில் இருப்பது சொந்த நாட்டில் இருப்பதைப் போன்றே நினைத்துக் கொள்வார். ஆனாலும் சொந்த நாட்டின் கலாச்சாரத்தையே பின் பற்றுபவர்களாக இருப்பார்கள்.
தசாம்சத்தில் 5,9,12ம் அதிபதிகளின் தொடர்பு தொழில் செய்து பொருளீட்டுவதற்காக வெளிநாட்டிற்கு போவதைக் குறிக்கும். இந்த மூவரும் ஒருவருக்கொருவர் சம்பந்தப் பட்டிருந்தால், பெரும்பாலும் நிரந்தரமாகவே வெளிநாட்டில் தங்கி விடுவார்கள். யாராவது இருவர் மட்டும் சம்பந்தப் பட்டிருந்தால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சொந்த நாட்டிற்கு திரும்பி விடும் வாய்ப்புகள் அதிகம்.
இதில் தர்ம கர்மாதிபதி யோகம் இருந்து 12ம் அதிபதி/வீட்டோடு தொடர்பிருந்தால் வெளிநாட்டில் பெரும் பதவி வகிப்பது, உயரிய விருதுகள் வாங்குவது போன்றவை நடக்கும். 10ம்,12ம் அதிபதிகள் சம்பந்தமும் (தசாம்சத்தில்) இதே போன்ற நிலையைத் தோற்றுவிக்கும். அயல் நாட்டு அரசதந்திரிகளுக்கு பெரும்பாலும் இத்தகைய கிரக நிலை இருக்கும்.
இங்கே நன்றாக கவனிக்கத் தக்கது என்னவெனில், சர ராசிகள் அதிகமாக வெளிநாட்டுப் பயணத்தைத் தரகூடியது. அடுத்து உபய ராசிகள் ஓரளவுக்கு வெளி நாட்டுப் பயணத்தை தர கூடியன என்றாலும் அவை ஒரு குறுகிய காலத்திற்கு உட்பட்டதாகவே இருக்கும். அதாவது, ஒன்று/இரண்டு வாரம் உல்லாசப் பயணம் போவது இந்த categoryயில் வரும்.
ஒரு பொதுவான அம்சமாக சொல்லப்படுவது குரு 9ல் இருந்தால் அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் ஏற்படும் என்று. அதனால்தான் ஓடினவனுக்கு 9ல் குரு என்று சொல்லி வைத்தார்களோ என்னவோ.
Timing of Events
----------------------
அதாவது எப்போது வெளிநாட்டுப் பயணம் ஏற்படும். ஏனென்றால் ஒரு சிலரைத் தவிர யாரும் எல்லா நேரத்திலும் வெளிநாட்டிற்கு போய்க் கொண்டிருக்கப் போவதில்லை. ஆகையால் எந்த கிரகத்தின் தசா புத்தி அந்தரங்களில் வெளி நாட்டுப் பயணம் ஏற்படும் என்று பார்ப்பது முக்கியம்.
1) 9ம், 12ம் அதிபதிகளின் அல்லது அவர்களோடு சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசா புத்தி அந்தர காலங்கள்.
2) சந்திரனோடு சம்பந்தப் பட்டுள்ள கிரகத்தின் தசா, புத்தி, அந்தரம். (சந்திரன் ஜலக் கிரகம். அத்துடன் ஜல ராசியும், சர ராசியுமான கடகத்திற்கு அதிபதி என்பது இங்கே கவனிக்கத் தக்கது)
3) ராகு, சந்திரன், சுக்கிரன் ஆகியோர் 12ல் இருந்தால் அவர்களது தசா, புத்தி, அந்தரங்கள்
4) ஜாதகத்தில் உச்சம்/நீசம் பெற்ற கிரகங்களின் தசா புத்தி அந்தர காலங்கள்.
5) ராகு தசையில், ராகு அல்லது கேது புத்திகள்
6) குரு 12ம் இடத்து அதிபதியாக இருந்தால் சனி தசை குரு புத்தியில்
7) 9ம் அதிபதியுடன் சம்பந்தப் பட்ட கிரகத்தின் தசா, புத்தி அந்தரங்கள்.
8) பிறந்த ஜாதகத்தில் சூரியன் இருக்கும் வீட்டை சனி கோச்சாரத்தில் கடக்கும் காலம்.
9) கோச்சார குரு 9,12ம் இடத்தைப் பார்க்கும் காலங்கள் அல்லது 9,12 அதிபதிகளை பார்வையிடும் காலங்கள்

No comments:

Post a Comment