Tuesday 30 June 2015

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

“கும்பம்” என்னும் சமஸ்கிருத சொல்லுக்கு “குடம்” என்றும், “அபிஷேகம்” என்னும் சமஸ்கிருத சொல்லுக்கு “நீராட்டு” அல்லது “முழுக்கு”என்றும் பொருளாகும். “கும்பாபிஷேகம்” என்றால் “குடநீராட்டு” அல்லது “குடமுழுக்கு” என்று பொருளாகும். பொதுவாக கும்பாபிஷேகம் கீழ்கண்ட நான்கு சூழ்நிலைகளில் செய்யப்படுகிறது.
1. புதிதாக கட்டிய கோவில்களுக்கு செய்யப்படும் கும்பாபிஷேகம்- இது ஆவர்த்தம் எனப்படும்.
2. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கோவில் சிலைகளை மறுபடியும் நிறுவும்போது செய்யப்படும் கும்பாபிஷேகம் – இது அனுவர்த்தம் எனப்படும்.
3. பழுதடைந்த கோவில்களை புதுப்பித்து ,தெய்வச்சிலைகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றி செய்யப்படும் கும்பாபிஷேகம் – இது புனஸ்வர்த்தம் எனப்படும்.
4. திருட்டுப்போன சிலைகளை மீண்டும் நிறுவும்போது செய்யப்படும் கும்பாபிஷேகம் – இது அந்தரிதம் எனப்படும்.
இறைவனை ஜோதிமயமானவன் எனக்குறிப்பிடுவர். ஒரு கல்லை மற்றொரு கல்லுடன் உரசும்போது அதில் நெருப்பு தோன்றுவதைக்காணலாம். இறைவன் ஜோதிமயமானவன் என்பதை குறிப்பிடும் விதமாக தெய்வ உருவங்கள் கருங்கற்களில் வடிக்கப்படுகின்றன.
கல்லில் வடிக்கப்பட்ட சிலையானது, கும்பாபிஷேகத்திற்கு முன் வெறும் கல்லாகவே கருதப்படுகிறது. கும்பாபிஷேக நிகழ்வின்போதுதான் தெய்வ சிலைகளுக்கு ஜலாதிவாசம் (தண்ணீருக்குள் போட்டு வைப்பது),தான்யாதிவாசம்(தான்யத்திற்குள் புதைத்துவைப்பது) செய்யப்பட்டு,கோவிலில் அமைக்கப்பட்ட பீடத்தில்,மந்திர சக்தியூட்டப்பட்ட யந்திர தகட்டின் மேல் நிறுவப்படுகிறது. இவ்வாறு நிறுவப்பட்ட தெய்வ சிலைகளை நீராட்டுவதற்கு 1 குண்டம்,5 குண்டம்,9 குண்டம்,17 குண்டம்,25 குண்டம்,33 குண்டம் என அமைத்து யாகங்கள் செய்து ஜோதி வளர்த்து அந்த ஜோதியை கும்பத்திற்கு கொண்டு போய் பின்னர் கும்பத்திலிருந்து பிம்பத்திற்கு(சிலைக்கு) கொண்டு போகும் கும்பாபிஷேக விழாவிற்கு பின் தெய்வ சிலைகள் இறைவன் வாழுமிடமாக கருதப்படுகிறது.
கும்பாபிஷேகத்தின்போது தெய்வ சிலைகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தப்படும். இவ்வாறு சாத்தப்படும் அஷ்டபந்தன மருந்து 12 வருடங்கள் வரைதான் பழுதடையாமல் இருக்கும். இதனால் 12 வருடங்களுக்கு ஒரு முறை கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.
கும்பாபிஷேகத்தின்போது கும்ப தீர்த்தத்தில் இறைவனை ஆவாஹனம் செய்து,யாகத்தின் மூலம் மந்திரம் ஜெபித்து சக்தியை உருவேற்றி அந்த கும்ப தீர்த்தத்தை தெய்வ சிலை மீதும்,கோபுர கலசத்தின் மீதும் அபிஷேகம் செய்வர்.

No comments:

Post a Comment