Tuesday, 30 June 2015

கடவுள் ஒருவரா? அல்லது பலரா?

கடவுள் ஒருவரா? அல்லது பலரா?

இந்து மதத்தில் மட்டும் ஏன் பல்வேறு வடிவங்களில் தெய்வம் இருப்பதாக கூறப்படுகிறது? பல்வேறு வழிபாட்டு முறைகள் நடைமுறையில் உள்ளன. கடவுள் ஒருவரா? அல்லது பலரா? இது போன்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. இந்து மதத்தை அனைத்து மதங்களின் தாய் மதம் என குறிப்பிடுவர். ஏனென்றால் அனைத்து மதக்கொள்கைகளும் இந்து மதத்தில் உண்டு. இந்து மதத்தில் இல்லாத ஒரு கருத்து வேறு எந்த மதத்திலும் இருக்காது. இந்து மதம் எந்த ஒரு கருத்தையும் வலுகட்டாயமாக யார் மீதும் தினிப்பதில்லை. இந்து மதத்தில் கடுமையான சட்ட திட்டங்கள் எதுவுமில்லை. இந்து மதம் அனைவரையும் சுதந்திர ஜீவிகளாக பாவிக்கிறது. அவரவரவர் கடைபிடிப்பதற்கு ஏதுவாக மதக்கொள்கைகளில் பல விருப்பத்தேர்வுகளை கொண்டுள்ளது.
ஆதி சங்கரர் இந்து மதத்தை ஷண்மதமாக (ஆறு மதம்) குறிப்பிடுகிறார். சைவம், சாக்தம், வைஷ்ணவம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம் என்பவை அந்த ஆறு மதங்களாகும். அவரவர் விரும்பும் மதத்தை கடைபிடிக்க அவர்களுக்கு சுதந்திரம் உண்டு. அத்வைத கொள்களை உலகில் பரப்பிய ஆதிசங்கரர் ஆறு மதங்களை அங்கீகரித்ததற்கு ஒரு காரணம் இல்லாமல் இருக்காது.
பசிக்காகத்தான் எல்லோரும் சாப்பிடுகிறார்கள். பசியை போக்குவதுதான் சாப்பிடுவதின் நோக்கம் என்றாலும். எல்லோரும் ஒரே வகையான உணவை உண்பதில்லை. மேற்கத்தியவரின் உணவு பழக்கம் வேறு,கிழக்கத்தியவரின் உணவு பழக்கவழக்கம் வேறு. வட இந்தியரின் உணவு பழக்கம் வேறு,தென் இந்தியரின் உணவு பழக்கம் வேறு. இந்த சூழ்நிலையில் அரசாங்கம் நம் நாட்டில் உள்ள அனைவரும் சப்பாத்தியை தவிர வேறு எந்த உணவையும் சாப்பிடக்கூடாது என ஒரு சட்டம் இயற்றினால் தென்னிந்தியர்களின் நிலைமை என்னவாகும் என்பதை யோசித்துப்பாருங்கள். குடும்பத்தோடு உணவு விடுதிகளுக்கு செல்லும்போது,அங்கே ஒவ்வொருவரும் தனக்கு பிடித்த உணவு வகையை மட்டும் சாப்பிடுவதைக்காண்கிறோம். நாம் ஆடை அணியும் விசயத்தில் கூட நாம் விரும்பிய வண்ணத்திலேயே ஆடை அணிகிறோம்.
ஒரு சுற்றுலா செல்வது என்றால் கூட நாம் விரும்பிய இடத்திற்கு சென்று வருகிறோம். சிலரை நமக்கு பிடிக்கிறது,சிலரை பிடிக்கவில்லை . இதற்கு காரண காரியமெல்லம் நமக்கு தெரியாது. படுக்கும் விதத்தில் கூட ஒருவர் வலமாக படுக்க விரும்புகிறார். இன்னொருவர் இடமாக படுக்க விரும்புகிறார். ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே ஒரு தனிப்பட்ட விருப்பம் என்ற ஒன்று இருக்கிறது. எனவே எந்த ஒரு விசயத்தையும் மனிதன் இயல்பாக உணர்ந்தால் மட்டுமே அந்த விசயத்தை அவன் மனம் சுலபமாக ஏற்றுக்கொள்ளும்.
சோறு, பொங்கல், இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், பணியாரம், கொழுக்கட்டை , முறுக்கு என இவ்வணைத்து பதார்த்தங்களும் அரிசி என்னும் ஒரே மூலப்பொருளிலிருந்துதான் சமைக்கப்படுகிறது. இவ்வணைத்து பதார்த்தங்களும் பசியை போக்கவல்லவைதான். ஆனால் ஒருவருக்கு இட்லி பிடிக்கிறது,தோசை பிடிப்பதில்லை. இன்னொருவருக்கு தோசை பிடிக்கிறது,இட்லி பிடிப்பதில்லை. இதற்கு என்ன காரண காரியம் என்பதெல்லாம் அவர்களுக்கு தெரியாது. இதுபோன்றுதான் ஒரே கடவுள் வெவ்வேறு வடிவங்களில் இந்து மதத்தில் வணங்கப்படுகிறான். எனக்கு சிவனை பிடித்திருக்கிறது. இன்னொருவருக்கு விஷ்ணுவை பிடித்திருக்கிறது. இதில் என்ன பிரச்சினை?.

No comments:

Post a Comment