Wednesday, 8 July 2015

ராகம், விராகம், வீதராகம்

ராகம், விராகம், வீதராகம்
ராகம், விராகம், வீதராகம் இவற்றில் என்ன பேதம்?
'ராகம்' என்பதன் பொருள் ஒரு விஷயத்தின் மேல் இச்சை.
'விராகம் ' என்பதன் பொருள் அந்த இச்சைக்கு எதிரான நிலை.
ஒருவன் செல்வத்தின் மேல் இச்சையினால் செல்வம் சேர்க்கிறான். இது ராகம்.
மற்றொருவன் செல்வத்தை உதைத்துத் தள்ளிவிட்டு ஓடுகிறான். இது விராகம்.
ஆனால் இருவரது எண்ணமும் செல்வத்தைச் சுற்றியே ஓடுகிறது.
சேகரிப்பவனும் செல்வத்தைப் பற்றியே எண்ணுகிறான்.
விட்டு விட்டுச் செல்பவனும் செல்வத்தைப் பற்றியே எண்ணுகிறான்.
ஒருவன் சேகரித்து இன்பம் அடைகிறான். 'இத்தனை செல்வம் இருக்கிறது!' இதனால் அவனது டம்பம் பெருமை பூர்த்தி அடைகிறது, நிறைவடைகிறது.
மற்றவன் நான் எத்தனை செல்வத்தை விட்டேன் என்று தனது பெருமையுணர்வைப் பூர்த்தி செய்து கொள்கிறான்.
செல்வம் பெற்றவர்களும் என்னிடம் ஏராளமாக இருக்கிறது என்று பெருமையடைகிறார்கள்,
விட்டு விட்டவர்களும் ஏராளமாக விட்டு விட்டேன் என்று பெருமைபடுகிறார்கள் 
என்று அறிந்து நீங்கள் அதிசயிக்கலாம்.
சாதுக்களும் சந்நியாசிகளும் யார் எத்தனை உபவாசம் இருந்தனர் என்று கணக்கிடுகிறார்கள்.
ஏனெனில் தியாகத்திற்கும் கணக்கு ஏற்படுகிறது. போகத்திற்கும் கணக்கு இருக்கிறது.
இச்சையும் கணக்கிடுகிறது. இச்சையின்மையும் கணக்கிடுகிறது.
ஏனெனில் இருவருடைய நோக்கும் ஒன்றே.
இருவருடைய துவக்கப் புள்ளியும் ஒன்றே.
இருவரும் ஒன்றையே பற்றிக் கொண்டிருக்கின்றனர்.
'வீதராகம் ' என்பது விரக்தி--விராகம் அல்ல.
வீதராகம் என்பது இச்சை--விரக்தி இரண்டினின்றும் விடுதலையடைவது.
சித்தத்தின் இச்சையும் இல்லை, விரக்தியுமில்லை 
என்ற நிலையே வீதராகம்.
செல்வம் இருந்தாலும் அவனுக்கு அது ஒரு பொருட்டாக இருப்பதில்லை.

No comments:

Post a Comment