Thursday 26 November 2015

விதுரனின் வீட்டுக்குச் சென்றார் ஸ்ரீகிருஷ்ணர்

எவர் அழைத்தும் போகாமல், விதுரனின் வீட்டுக்குச் சென்றார் ஸ்ரீகிருஷ்ணர். 'நம்ம வீட்டுக்காவது, கிருஷ்ண பரமாத்மாவாவது, வருவதாவது’ என நினைத்திருந்த விதுரன், அவரின் வருகையைக் கண்டு நிலை தடுமாறினான். இங்கும் அங்குமாக அலைந்தான். என்ன செய்வது என்று பரபரத்தான். ஏதேனும் சாப்பிடக் கொடுக்க வேண்டுமே... என்று நினைத்துக் கொண்டே, அடுப்படிக்கு ஓடினான். 'அடடா... ஒண்ணுமே இல்லையே...' என்று அல்லாடினான். கண்ணில், வாழைப்பழங்கள் தென்பட்டன. அப்படியே அள்ளியெடுத்துக் கொண்டு, கிருஷ்ணரிடம் வந்து, 'கிருஷ்ணா... இப்போது என்னிடம் இருப்பது இவை மட்டுமே! மறுக்காமல் சாப்பிட்டு, உன் பசியை ஆற்றிக் கொள்வாயாக!' என்று கெஞ்சினான். அந்தப் பழத்தை வாங்க மறுத்துவிட்டார் கண்ண பரமாத்மா!
'கண்ணன் எப்பேர்ப்பட்டவன். அவன் நம் வீட்டு வாசலை மிதித்ததே மிகப் பெரிய புண்ணியம். நம் வீட்டிலெல்லாம் சாப்பிடுவானா?' என்று யோசித்தபடியே... 'பசியாயிருக்குமே கண்ணா... அதான்... இந்தப் பழங்களை...' என்று தயங்கித் தயங்கிச் சொன்னான்.
உடனே ஸ்ரீகிருஷ்ணர், ''உன் கலக்கமே என் பசியை ஆற்றிவிட்டது விதுரா'' என்றார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அதேநேரம், 'ச்சே... வீட்டுக்கு வந்தவரை, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை இப்படியா நிற்க வைத்து உபசரிப்பது?' என்று தன்னைத் தானே நொந்து கொண்டவன்... ஓடிப் போய் ஓர் ஆசனத்தை எடுத்து வந்து அவருக்கு அருகில் வைத்து, அமரச் சொன்னான். முன்னதாக, அந்த ஆசனத்தைத் தடவித் தடவிப் பார்த்துக் கொண்டே இருந்தான்.
'என்னடா இது? நம் வீட்டுக்கு ஒருவர் வந்துவிட்டால், அவரை நாற்காலி அல்லது சோபாவில் உட்காரச் சொல்லி விடுவோம். ஆனாலும் இந்த விதுரன் ஏன் இப்படி அந்த ஆசனத்தை இவ்வளவு நேரம் தடவித் தடவிப் பார்த்தபடி இருக்கிறான்?' என்று குழப்பம் வருகிறதுதானே, நமக்கு?!
'நான் துரியோதனனின் உப்பைச் சாப்பிடுகிறவன். அவன்தான் எனக்குச் சோறு போடுகிறான். பாண்டவர்களுக்காக கண்ணன் தூது வந்தபோது, மிகப்பெரிய பள்ளம் தோண்டி, அதன் மேல் கம்பளம் விரித்து, அந்தக் கம்பளத்தின் மீது ஆசனமிட்டு கண்ணனை உட்காரச் செய்தான் துரியோதனன். ஸ்ரீகிருஷ்ணரின் பாரம் தாங்காமல், அந்த இருக்கை முறியவே... அவன் அந்தப் பள்ளத்திற்குள் விழுந்தான். அங்கிருந்த வீரர்கள் அவனைச் சிறைப்பிடிப்பதற்காக நின்றிருக்க... அப்போது கண்ணபிரானின் திருவடியானது பூமியைத் தொட்டபடி இருக்க, அவன் திருமுடியோ... அந்த ஆகாயத்தைத் தொட்டபடி விஸ்வரூபமெடுத்து நிற்க, அந்த வீரர்கள் திகைத்துப் போனார்கள். திண்டாடினார்கள். தலைதெறிக்க அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்’ என்று மிக அழகாக விவரிக்கிறார் வேதவியாசர்.
சரி... அந்த ஆசனத்தை ஏன் தடவித் தடவிப் பார்த்தபடியே இருந்தான் விதுரன்?!
துரியோதனனின் சாப்பாட்டில் வளர்ந்த நாம், அவனைப் போலவே சிந்தனை கொண்டு, சுயநினைவின்றி, பகவான் ஸ்ரீகிருஷ்ணரை அவமானப்படுத்தும் வகையில் ஏதேனும் பள்ளம் தோண்டி வைத்திருக்கிறோமோ... அந்த ஆசனத்தில் ஊசியைச் செருகி வைத்து, இம்சிக்கச் செய்திருக்கிறோமோ... துரியோதனின் சாப்பாட்டை சாப்பிட்ட எனக்கு, அவன் புத்தியானது நம்மையும் அறியாமல் வந்திருக்குமோ... எனப் பதைபதைத்தானாம் விதுரன்.
'விதுரா... கவலை எதற்கு? என் பசியை ஆற்றிவிட்டாய் நீ. நான் வந்ததும் என்ன செய்வது, என்ன தருவது என்று தெரியாமல் கலங்கித் தவித்தாயே... அந்த உன் கலக்கமே என் பசியைப் போக்கிவிட்டது. அதனால்தான் நீ பழம் தந்ததும் வேண்டாம், பசியாறிவிட்டேன் என்று சொன்னேன்'' என்றார் ஸ்ரீகிருஷ்ணர்.
எவ்வளவு பெரிய ஞானி விதுரன்! ஆனால் அந்த ஞானியின் கலக்கத்தைக் கண்டு ரசித்தான் கண்ணபிரான்.
ஞானிகளிடம் தெளிவு இருப்பதை பகவான் விரும்புவதே இல்லை. எவனொருவன், ஒரு விஷயத்தைக் கண்டு கலங்கித் தவிக்கிறானோ அவனே ஞானி. அப்படி ஞானியாகத் திகழ்பவரையே மதிக்கிறான்; அருள்கிறான்; அரவணைக்கிறான்; ஆட்கொள்கிறான் ஸ்ரீகண்ண பரமாத்மா என அற்புதமாக விளக்குகிறார் வேதவியாசர்.
உலக விஷயங்களில் தெளிவாக இருங்கள்; பகவத் காரியத்தில் கொஞ்சம் கலங்கி, குழம்பியபடியே இருங்கள். குழப்பங்களுக்குத்தான் விடை கிடைக்கும்; கலங்கியபடி இருப்பவர்களுக்குத்தான் கடவுளின் பேரருள் கிடைக்கும்!

No comments:

Post a Comment