Friday, 27 November 2015

பதினான்கு உலகங்கள் எவை?

புராணங்களின் படி உலகம் தோன்றியது எப்படி?
ஸ்ரீ குருவாயுரப்பனை வணங்கி இதை நான் சொல்கிறேன். முன்னர் மஹாப்ரளயம் உண்டானபோது ஸத்வ, ரஜோ, தமஸ் குணங்கள் சமமாக இருந்தன. அப்போது மாயையும் இறைவனிடம் ஒடுங்கியே இருந்தது. அச்சமயம் ஸ்தூலமாகவும் சூட்சுமமாகவும் காணப்பட்டது. இந்தப் ப்ரபஞ்சமே இல்லை. அப்போது பிறப்பும், இறப்பும், பகலும், இரவும் ஆகிய எதுவும் இல்லை. இறைவன் மட்டுமே சச்சிதானந்தத் திருமேனியுடன் தனியாக இருந்தார்.
ப்ரளயத்திற்கு முன்னால்இறைவன் அவனது உன்னதமான ஆனந்தமான லீலையில் இருந்தார். அப்போது மூன்று குணங்கள், காலம், கர்மங்கள், அனைத்து உயிர்கள், காரியமான ப்ரபஞ்சம் ஆகிய அனைத்துமே மறைவாக இருந்தன. அவை அனைத்தும் இருந்ததாக வேதங்களும் கூறுகின்றன. அப்படி அவை இருந்ததால் தான் ஆகாய மலர் போன்று மீண்டும் அது தோன்றியது. (ஆகாய மலர் - கற்பனையான பொருள்).
மேலே கூறிய சச்சிதானந்த நிலையானது இரண்டு பரார்த்தம் வரை நீடித்தது (இரு பரார்த்த காலம் - ப்ரம்மனின் ஆயுள்) அந்தக் காலம் முடிந்த பின்னர் அவர் ஸ்ருஷ்டி செய்ய விரும்பினார் (இது வேதங்களில் - தத்ஜக்ஷத பஹுஸ்யாம் - நான் பலவாக மாறுவேன் என்று உள்ளது). அதற்கான அவன் பார்வையைக் கண்டு மாயை கலங்கியது. அந்த மாயையில் இருந்து காலம் என்னும் சக்தியும், கர்மங்களும், கர்மங்களுக்கு ஏற்ற சுபாவங்களும் தோன்றி அவை மாயைக்கு உதவியாக இருந்தன.
பகவான் மாயைக்கு அருகாமையில் இருந்தாலும், அதனுடன் கலவாத ரூபத்துடன் இருந்ததால் அவரை பலரும் ஸாக்ஷீ (பார்க்கக் கூடியவன்) என்று கூறுகின்றனர். அந்த மாயையின் பிரதிபிம்பமாக, ஆனால் வேறுபட்டதாகத் தோன்றும் ஜீவனும் அவனே ஆகிறான். காலம், கர்மம், சுபாவம் என்று பலவாக அவனால் ஏவப்பட்ட அந்த மாயையே விளங்குகின்றது. அது புத்தி தத்துவம் எனப்படும் மஹத் தத்துவத்தை உண்டாக்கியது
.
மஹத் தத்துவம் என்பது மூன்று குணங்கள் சேர்ந்ததாக இருந்தாலும், அது ஸத்வ குணத்தையும் அதிகமாக உருவெடுக்கச் செய்து மனிதர்களிடத்தில் (மனித தோன்றலுக்கு பின்) நான் என்ற அறிவை உண்டாக்குகிறது. மேலும் அதே மஹத் தத்துவம், தமோ குணத்தை அதிகரித்து மனிதனிடம் நான் பெரியவன். போன்ற மமதையை (அஹங்காரம்) வளர்க்கின்றது.
மேலே கூறிய அஹங்காரம் என்பது மூன்று குணங்களாக உருவெடுத்தது. அவை - ஸத்வம், ராஜஸம் மற்றும் தாமஸம் ஆகும். இவற்றுள் முதலாவதாக உள்ள ஸத்வ குணத்தில் இருந்து திசைகள், வாயு, சூரியன், வருணன், அச்வினிகள், அக்னிதேவன், இந்திரன், விஷ்ணுமித்ரன், ப்ரஜாபதி, சந்திரன், ப்ரும்மா, ருத்ரன், க்ஷேத்ரக்ஞன் ஆகிய தேவதைகள் தோன்றினர்.
பகவானது ஆணைக்கு இணங்க ஸாத்விக அஹங்காரம் என்பது மனம், புத்தி, அஹங்காரம் என்பவை இணைந்த சித்தம் ஸத்வ குணத்திலிருந்து தோன்றியது. ராஜஸ அஹங்காரம் என்பது பத்து இந்த்ரியங்களை உண்டாக்கியது. எஞ்சியுள்ள தாமஸ அஹங்காரம் என்பது ஆகாயத்தின் சூட்சுமமாக உள்ள சப்தத்தை உண்டாக்கியது. அந்த சப்தமே "ஓம்".
இந்த, ஓசையில் இருந்து ஆகாயமும், ஆகாயத்தில் இருந்து ஸபர்ஸ (தொடு) உணர்ச்சியும், ஸ்பர்ஸத்தில் இருந்து வாயுவும், வாயுவில் இருந்து ரூபமும், ரூபத்தில் இருந்து அக்னியும் உண்டானது. அக்னியில் இருந்து ரஸ்மும், ரஸத்தில் இருந்து நீரும், நீரில் இருந்து மணமும், மணத்தில் இருந்து பூமியும் உண்டானது. இப்படியாக வரிசையாக பஞ்ச பூதங்களை இறைவன் தாமஸ அஹங்காரத்தில் இருந்து தோற்றுவித்தான்.
இப்படித் தோன்றிய பஞ்ச பூதங்கள் ஐந்தும், பஞ்ச இந்தியங்களும் தனித்தனியாக இருந்தன. ஆகவே அவற்றால் எந்த ஸ்ருஷ்டியையும் செய்ய இயலவில்லை. அப்போது தேவர்கள் மற்றும் தேவதைகள் பலவிதமான ஸ்தோத்திரங்கள் மூலம் இறைவனையும், அவன் திருக்கல்யாண குணங்களையும் துதித்தனர் . உடனே இறைவன் மஹத்தத்துவங்களில் புகுந்து கிரியா (உண்டாக்கும்) சக்தியை அளித்தார். அதன் மூலம் பொன் போன்ற ப்ரம்மாண்டம் உருவானது.
இப்படி உருவான அண்டமானது, இறைவனால் ஏற்கனவே உருவாக்கிய நீரில் ஆயிரம் வருடம் இருந்தது. பின்னர், இறைவன் அதனைப் பிளந்தார். அப்போது பதினான்கு லோகங்களின் ரூபம் கொண்டு விராட் புருஷன் என்ற உருவத்தை அவர் தரித்தார். பல ஆயிரக்கணக்கான கைகள், கால்கள் தலைகள் போன்றவற்றுடன் அனைத்து உயிர்களுமாக இறைவன் தோற்றமளித்தான். அதனால் தான் அனைத்து உயிர்களுமே இறை அம்சம் பொருந்தியதாக சொல்கிறது இந்து தர்மம். இறைவனில் இருந்து பிரிந்து பின்னர் இறைவனிடமே சேருகிறது. அதுவே மோக்ஷம்.
இந்த பதினான்கு உலகங்கள் எவை என்பதை பார்ப்போம், உலகங்களாக உருவெடுத்த இறைவனின்,
உள்ளங் கால்கள் பாதாள லோகம்,
காலடியின் மேல் பாகம் ரசாதலம்,
கணுக் கால்கள் மகாதலம்,
முழங்கால்கள் தலாதலம்,
முட்டுகள் சுதலம்,
தொடைகளின் கீழ், மேல் பாகங்கள் விதலம் மற்றும் அதலம் என்று இரண்டாகவும்,
இடுப்பு பூலோகம்,
நாபி ஆகாசம்,
மார்பு சுவர்க்க லோகம் (இந்திர லோகம்),
கழுத்து மஹர் லோகம்,
முகம் ஜனர் லோகம்,
நெற்றி தபோ லோகம்,
தலை சத்ய லோகம்.
இவ்விதம் பதினான்கு உலகங்களையும் சரீரமாக உடையவன் பகவான். ஆகவே அவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான் என்று சொல்லப்படுகிறது. மேலும், இந்த ஈரெழு பதினான்கு , உலகங்களையும் பார்த்தால், நாம் இருப்பது பூலோகம், இதற்க்கு கீழே எழும், மேலே ஆறும் உள்ளது. இதை தான் இன்று விஞ்ஞானிகளும், நாம் இருக்கும் பால்வெளி மண்டலம் போல் இன்னும் பல உள்ளன என்று தெரிய தொடங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment