Tuesday, 29 December 2015

கொத்தமல்லி,புதினா,வெந்தயக் கீரை

கொத்தமல்லி
நாட்டுக் கொத்தமல்லி விதையைத் தரையில் சிறிது தேய்த்து, ஒருநாள் ஊறவைத்த பிறகு மண்ணில் தூவி, விதைகள் தெரியாதபடி மண்ணால் மறைக்க வேண்டும். 10 நாட்கள் தண்ணீர் தெளித்துவந்தால், கொத்தமல்லி நன்கு வளரும். தேவைப்படும்போது, தழையை மட்டும் கிள்ளிக்கொள்ளலாம். அவை மீண்டும் வளர்ந்துவிடும்.
பலன்கள்: கொத்தமல்லியை சாறு எடுத்தோ, கஷாயமாக்கியோ குடித்தால், நச்சு நீக்கும்; டானிக்காகச் செயல்படும்; கல்லீரல் சுத்தமாகும்; கல்லீரல் பலப்படும். கொத்தமல்லிக்கு, பூஞ்சைத் தொற்றுக்களைக்கூட குணமாக்கும் வல்லமை உண்டு. கொத்தமல்லி இலைகளை அரைத்து, தேனுடன் கலந்து பூசினால், சருமத் தொற்றுக்கள் குணமாகும்.
---
புதினா
கடையில் வாங்கிய புதினா கட்டுகளிலிருந்து இலையைப் பயன்படுத்துவோம். தூக்கிஎறியப்படும் அந்தப் புதினா தண்டுகளை நட்டுவைக்கலாம். இதற்கு நேரடி சூரியஒளி தேவை இல்லை. சன் ஷேடு கிடைத்தாலே போதும்.
பலன்கள்: புதினாவில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கிறது. நார் சத்துக்கள் நிறைந்துள்ளன. வாய் துர்நாற்றம் இருக்காது. பசி எடுக்காதவர்களுக்கும் பசி எடுக்கும். புதினா டீ சுறுசுறுப்பையும் புத்துணர்ச்சியையும் அளிக்கும்.
----
வெந்தயக் கீரை
வீட்டில் இருக்கும் வெந்தயத்தை ஊறவைத்து, மறுநாள் மண்ணில் புதைத்து, சிறிது தண்ணீர் தெளிக்கவும். வெந்தயக்கீரை இரு வாரங்களுக்குள்ளேயே வளர்ந்துவிடும். இதை ஜன்னல் ஓரங்களில் வளர்க்கலாம். நாள்தோறும் தண்ணீரைத் தெளித்து வந்தாலே, நன்கு வளரும்.
பலன்கள்: வெந்தயக்கீரை உடலுக்குக் குளிர்ச்சி தரும். அல்சர் பிரச்னையைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மோருடன் வெந்தயக் கீரை சாற்றைக் கலந்து குடிக்க, தொண்டை முதல் குடல் வரை பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment