Tuesday 8 December 2015

மகாபாரதத்தில் யட்சனின் கேள்விகளும் 🌼தருமர் அளித்த விடைகளும் .........

மகாபாரதத்தில் யட்சனின் கேள்விகளும்
🌼தருமர் அளித்த விடைகளும் .........
🌼12 ஆண்டுகால வனவாசம் கிட்டத்தட்ட முடிந்து பாண்டவர்கள் ஓராண்டு மறைந்த வாசம் செய்ய வேண்டிய காலம் நெருங்கி விட்டது.
🌼ஒரு நாள் காட்டில் அலைந்து கொண்டிருந்த சமயம் எல்லோருக்கும் தாகம் ஏற்பட, தருமர் நகுலனை அருகில் ஏதேனும் நீர்நிலை தென்படுகிறதா என்பதைப் பார்த்து வரும்படி ஏவுகிறார்.
🌼 நகுலனும் அவ்வாறே செல்ல ஒரு பொய்கையைப் பார்க்கிறான். முதலில் தன் தாகம் தணித்து சகோதரர்களுக்கும் தண்ணீர் எடுக்கும் நோக்கத்துடன் பொய்கைக்குள் இறங்குகிறான். அப்போது "சாகசம் செய்யாதே நகுலா, எனது கேள்விகளுக்கு பதிலளிக்கவும்" என்று ஒரு அசரீரி கேட்கிறது. அதை அலட்சியம் செய்து தண்ணீரை அருந்த, அவன் நினைவிழந்து கரையில் வீழ்கிறான்.
🌼நகுலனைக் காணாததால் சகாதேவனை தருமர் அனுப்ப அவனுக்கும் அப்பொய்கையருகில் அதே கதிதான். அதே போல அருச்சுனன் மற்றும் பீமனும் மயக்கமடைகின்றனர். இப்போது தருமரே செல்கிறார்.
🌼அவரிடமும் அந்த அசரீரி எச்சரிக்கை செய்ய, அவரும் கேள்விகளுக்கு பதிலளிக்க சம்மதிக்கிறார்.
🌼யட்சன்: எந்த மனிதன் துணை உள்ளவனாகிறான்?
🌼தருமர்: தைரியமுள்ள மனிதன் துணை உள்ளவனாகிறான்.
🌼யட்சன்: மனிதன் எவ்வாறு புத்திமானாகிறான்?
🌼தருமர்: பெரியோர்களை அண்டுவதால் மனிதன் புத்திமானாகிறான்.
🌼யட்சன்: பயிரிடுபவர்களுக்கு எது சிறந்தது?
🌼பதில்: பயிரிடுபவர்களுக்கு மழை சிறந்தது.
🌼யட்சன்: செல்வமுள்ளவனாக இருந்தாலும், அறிவாளியாக இருந்தாலும் எந்த மனிதன் வாழும்போதே உயிரற்றவனாக இருக்கிறான்?
🌼தருமர்: தேவதைகள், விருந்தாளிகள், வேலைக்காரர்கள், முன்னோர்கள் - இவர்களுக்கு மரியாதையுடன் உணவு தராதவன்.
🌼யட்சன்: தாங்கும் சக்தியில் பூமியை விட அதிக சக்தி வாய்ந்தது எது?
🌼தருமர்: ஒரு தாயின் மனம்.
🌼யட்சன்: ஒரு மனிதனுக்கு ஆகாயத்தை விட உயர்ந்தது எது?
🌼தருமர்: அவனுடைய தந்தை.
🌼யட்சன்: காற்றைக் காட்டிலும் வேகமானது எது?
🌼தருமர்: மனிதனின் மனம்.
🌼யட்சன்: புல்லைவிட அலட்சியமாக கருதிவிடத் தக்கது எது?
🌼தருமர்: கவலை.
🌼யட்சன்: தூங்கும்போது கண்களை
மூடாமல் இருப்பது எது?
🌼தெருமர்: மீன்.
🌼யட்சன்: பிறந்தும் அசைவற்று இருப்பது எது?
🌼தருமர்: முட்டை.
🌼யட்சன்: தன்னுடைய வேகத்தினாலேயே வளர்வது எது?
🌼தருமர்: நதி.
🌼யட்சன்: தன் ஊரை விட்டுப் போகிறவனுக்கு நண்பன் யார்?
🌼தருமர்: அவன் பெற்ற கல்வி.
🌼யட்சன்: வீட்டில் இருப்பவனுக்கு தோழமை தருவது யார்?
🌼தருமர்: அவன் மனைவி.
🌼யட்சன்: நோயாளிக்கு நண்பன் யார்?
🌼தருமர்: நல்ல வைத்தியன்.
🌼யட்சன்: சாகப்போகிற நிலையில் இருப்பவனுக்கு யார் உற்ற தோழன்?
🌼தருமர்: அவன் செய்கிற தருமம்.
🌼யட்சன்:புகழ் எதில் நிலை பெற்றிருக்கிறது?
🌼தருமர்: ஒரு மனிதன் செய்யும் தானத்தில் புகழ் நிலை பெறுகிறது.
🌼யட்சன்: மனிதனின் சுகம் எதனால் நிலைபெறுகிறது?
🌼பதில்: நல்லொழுக்கத்தின் மூலமாக.
🌼யட்சன்: சொர்க்கத்தன்மை எதன் மூலம் நிலைபெறுகிறது?
🌼தருமர்: சத்தியத்தைக் காப்பாற்றுவதன் மூலமாக.
🌼யட்சன்: ஒரு மனிதன் பெறக்கூடிய லாபங்களுள் எது சிறந்தது?
🌼தருமர்: நோயின்மை.
🌼யட்சன்: ஒரு மனிதன் பெறக்கூடிய சுகங்களில் உயர்ந்தது எது?
🌼தருமர்: மனத்திருப்தி.
🌼யட்சன்: சிறந்த தருமம் எது?
🌼தருமர்: அஹிம்சை
🌼யட்சன்: எதை விடுவதன் மூலம் மனிதன் மற்றவர்களுடைய அன்புக்கு பாத்திரமாகிறான்?
🌼தருமர்: கர்வத்தை விட்ட மனிதன் மற்றவற்களது அன்பைப் பெறுகிறான்.
🌼யட்சன்: எதை விடுவதன் மூலம் மனிதன் துன்பத்தைத் தவிர்க்கிறான்?
🌼தருமர்: கோபத்தை விட்ட மனிதனுக்குத் துன்பம் நேராது.
🌼யட்சன்: எதை விடுகிற மனிதன் பொருள் உள்ளவன் எனப்படுகிறான்?
🌼தருமர்: தர்ம விரோதமான ஆசைகளை விடுகிற மனிதனே, உண்மையில் பொருள் உள்ளவனாகிறான்.
🌼யட்சன்: பிராமணர்களுக்குப் பொருள் கொடுப்பது எதற்காக?
🌼தருமர்: தர்மத்திற்காக.
🌼யட்சன்: நடன மற்றும் நாடகக்காரர்களுக்குப் பொருள் கொடுப்பதால் என்ன பயன்?
🌼தருமர்: அவர்களுக்குச் செல்வம் கொடுப்பதால் பொருள் கிட்டும் என்பதே பலன்.
🌼யட்சன்: வேலைக்காரர்களுக்கு எதற்காகப் பொருள் கொடுக்க வேண்டும்?
🌼தருமர்: அவர்களை வசப்படுத்துவதற்காக.
🌼யட்சன்: அரசர்களுக்குக் கொடுப்பது எதற்காக?
🌼தருமர்: அவர்களிடமிருந்து பயமின்றி வாழ்வதற்காக.
🌼யட்சன்: மனிதனால் வெல்ல முடியாத பகைவன் யார்?
🌼தருமர்: கோபம்.
🌼யட்சன்: முடிவே இல்லாத வியாதி எது?
🌼தருமர்: பேராசை.
🌼யட்சன்: எவன் சாது?
🌼தருமர்: எல்லாப் பிராணிகளிடத்திலும் அன்புடன் இருப்பவன்.
🌼யட்சன்: எது தைரியம்?
🌼தருமர்: இந்திரியங்களை அடக்குவதே தைரியம்
🌼யட்சன்: எந்த மனிதன் பண்டிதனாகிறான்?
🌼தருமர்: தர்மங்களை அறிந்து கடைபிடிப்பவனே பண்டிதன்.
🌼யட்சன்: எவன் நாஸ்திகன், எவன் மூர்க்கன்?
🌼தருமர்: நாஸ்திகனே மூர்க்கன்.
🌼யட்சன்: எது டம்பம்?
🌼தருமர்: தான் செய்யும் தர்மத்தை ஊரறியச் செய்வது டம்பம்.
🌼யட்சன்: ஒன்றுக்கொன்று எதிரிடையான வழி முறைகள் கொண்ட அறம், பொருள், இன்பம் - ஆகியவை ஓரிடத்தில் சேர்வது என்பது எப்படி நடக்கும்?
🌼தருமர்: அறமும், மனைவியும் இணைந்து செயல்படும்போது, அந்த இல்லத்தில் அறம், பொருள், இன்பம் மூன்றும் சேர்ந்து விடுகின்றன.
🌼யட்சன்: எந்த மனிதன் அழிவற்ற நரகத்தை அடைவான்?
🌼தருமர்: தானம் கொடுப்பதாகக் கூறிவிட்டு பிறகு இல்லை என்று சொல்பவன்; வேதம், தர்ம வழிச் செயல்கள், முன்னோர்களுக்கான சடங்குகள் இவற்றில் பொய் கூறுபவன்; செல்வம் இருந்தும் பிறர்க்குக் கொடாதவன் - ஆகியோர் அழிவற்ற நரகத்தை அடைவார்கள்.
🌼யட்சன்: பிறப்பு, வேதம் ஓதுதல், தர்ம சாஸ்திரங்களைப் பற்றிய அறிவு, ஒழுக்கம் - இவற்றில் எதன் மூலம் பிராமணத்துவம் உண்டாகிறது?
🌼தருமர்: பிராமணத்துவம் உண்டாவதற்குக் காரணம் பிறப்போ, தர்ம சாஸ்திர அறிவோ, வேதம் ஓதுதலோ அல்ல. ஒழுக்கம்தான் பிராமணத்துவத்திற்குக் காரணம். ஒழுக்கமற்றவன் எவனாக இருந்தாலும் அவன் பாழானவனே! கல்வியும், சாஸ்திர அறிவும் மட்டுமே பயனளிப்பவை என்று நினைத்து, அதை மட்டும் பற்றி நிற்பவர்கள் மூடர்களே! தான் கற்ற சாத்திரப்படி நடப்பவனே பண்டிதன். ஒழுக்கத்துடன் நடந்து கொண்டு, யாகத்தில் பற்றுள்ளனவனாக, இந்திரியங்களை அடக்கியவன் எவனோ அவனே பிராமணன்.
🌼யட்சன்: இனிமையாகப் பேசுகிறவன் எதைப் பெறுகிறான்?
🌼தருமர்: மற்றவர்களின் அன்பைப் பெறுகிறான்.
🌼யட்சன்: ஆலோசித்த பிறகே காரியத்தைச் செய்பவன் எதை அடைகிறான்?
🌼தருமர்: வெற்றியை ஆடைகிறான்.
🌼யட்சன்: தர்மத்தில் பற்றுள்ளனவனுக்கு என்ன கிட்டுகிறது?
🌼தருமர்: அவனுக்கு நல்ல கதி கிடைக்கிறது.
🌼யட்சன்: எவன் சந்தோஷத்தை அடைகிறான்?
🌼தருமர்: கடனில்லாதனாகவும், பிழைப்பதற்காக ஊரை விட்டு ஊர் செல்ல வேண்டிய நிலையில் இல்லாதவனாகவும், தனக்கு வேண்டிய சிறிதளவு உணவாகிலும் வீட்டிலேயே கிடைக்கப் பெறுகிறவனாகவும் எவன் இருக்கிறானோ அவன் சந்தோஷமடைகிறான்.
🌼யட்சன்: எது தினந்தோறும் நடக்கும் நிகழ்ச்சி?
🌼தருமர்: உயிரினங்கள் எமலோகம் சென்று கொண்டே இருப்பது.
🌼யட்சன்: எது ஆச்சரியம்?
🌼தருமர்: உயிரினங்கள் தினந்தோறும் எமலோகம் சென்று கொண்டேயிருப்பதைப் பார்த்தும்கூட, மனிதர்கள் தங்களுக்கு மரணமில்லாதது போல் நினைத்ட்துக் கொண்டு நல்ல கதியை அடைய முயற்சிக்காமலேயே வாழ்நாளைக் கழித்து விடுகிறார்களே - அதுதான் ஆச்சரியம்.
🌼யட்சன்: எவன் புருஷன்?
🌼தருமர்: விருப்பு - வெறுப்பு; சுகம் - துக்கம்; நடந்தது - நடக்க இருப்பது; ஆகிய இரட்டை நிலைகள் எவனுக்கு சரி சமமாக இருக்கின்றனவோ, அவனே புருஷன் எனக் கூறப்படுகிறான்.
🌼யட்சன்: எவன் செல்வம் மிகுந்தவன்?
🌼தருமர்: ஆசையற்று, அமைதியான மனமும் பெற்று, தெளிவான அறிவும் கொண்டு, எல்லாப் பொருள்களையும் சமமாகப் பார்க்கும் மனிதன் எவனோ, அவனே செல்வம் நிறைந்தவன்.
🌼இப்படி கூறிய பதில்களால் திருப்தியுற்ற யட்சன் "யுதிஷ்டிரா! உன் பதில்கள் தெளிவாக உள்ளன. அதற்குப் பரிசாக உன் தம்பிமார்களில் ஒருவரை மட்டும் உயிர்ப்பிக்கிறேன். அவன் யார் என்பது உனது விருப்பத்தைப் பொறுத்தது" என்றான்.
🌼தருமர், "நெடிய ஆச்சாமரம் போல வீழ்ந்து கிடக்கும் அழகன் நகுலன் உயிர்பெறட்டும்" எனக் கூறினார்.
🌼யட்சன் ஆச்சரியமடைந்து, பீமன் அருச்சுனன் ஆகியோரை விட்டு விட்டாயே, உனது அரசைப் பெற அவர்கள் முயற்சி இன்றியமையாததல்லவா"? எனக் கேட்டான்.
🌼தருமர், "யட்சனே, தருமம்தான் முக்கியம். அதற்குத்தான் இறுதி வெற்றி பீமனோ அருச்சுனனனோ அதற்கு முன்னால் ஒன்றுமில்லை. எனது தாயார் குந்தியின் புதல்வனாகிய நான் உயிருடன் உள்ளேன். எனது சிறிய அன்னை மாத்ரியின் பிள்ளை ஒருவனும் பிழைப்பதே தருமம் என" உறுதியாக மறுமொழி கூறினார்.
🌼தருமரது இந்த சொற்களினால் மகிழ்ந்த யட்சன் எல்லோரையுமே உயிர்ப்பித்தான்.
🌼 பிறகு தந்தான் தரும தேவதை என்றும், தனது அம்சமாகிய யுதிஷ்டிரனை பார்த்து சோதிக்கவே வந்ததாகவும் கூறி ஆசியளித்து மறைந்தான்🌼

No comments:

Post a Comment