Monday, 7 December 2015

ஸ்ரீமத் பாகவதம் எழுதப்பட்ட வரலாறு

ஸ்ரீமத் பாகவதம் எழுதப்பட்ட வரலாறு

மூன்றாவது யுகமாகிய துவாபர யுகத்தில், தந்தை பராசரருக்கும், தாயார் சத்யவதிக்கும் மகனாக பிறந்தவர் ஸ்ரீ வியாசர். கலியுகம் தோன்றி விட்டத்தால், இனி மனிதர்கள் பெற்றோர்களுக்கு அதிகம் மதிப்பு அளிக்காதவர்களாகவும், உடலில் பலமற்றவர்களாகவும், புத்தி கூர்மையற்றவர்களாகவும், குறைந்த வயதுடயவர்களாகவும் காணப்படுவார்கள் என்பதை தன் தீர்க்க தரிசனத்தால் உணர்ந்தார். இதைனை கருத்தில் கொண்டு அவர் வேதங்களை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என நான்கு பிரிவுகளாக பிரித்து, ரிக் வேதத்தை பைல முனிவருக்கும், சாம வேதம் ஜைமினி முனிவருக்கும், யஜுர் வேதம் வைசம்பாயனர் முனிவருக்கும், அதர்வண வேதத்தை சுமந்து முனிவருக்கும், இராமாயணம் மற்றும் அவர் எழுதிய மகாபாரதத்தை ரோம ஹர்ஷனர் என்ற முனிவருக்கும் சொல்லி கொடுத்தார்.

இவ்வளவு நன்மைகளை அவர் பூலோக உயிரினத்துக்கு செய்தும், ஒருநாள் காலையில் சரஸ்வதி நதியில் குளித்துவிட்டு நதிக்கரையில் தனியாக அமர்ந்திருந்த போது, அவர் மனதில் அமைதியற்று காணப்பட்டார். இதனால், அவரிடம் ஏதோ குறையுள்ளதாக மனம் வருந்தி, சிந்தனையில் அமர்ந்திருந்த போது, நாரத மகிரிஷி அங்கு வந்தார்.

நாரதர், "மகரிஷியே ! தாங்கள் மகாபாரதத்தை நன்றாக இயற்றியுள்ளீர்கள். மனிதன் வாழ்கையில் உணர வேண்டியதையும், அடைய வேண்டியதையும் அதில் சொல்லியுள்ளீர்கள். பிரம்மத்தை பற்றியும் விவரித்துள்ளீர்கள் . அப்படி இருந்தும் மன அமைதியில்லாமல் இருப்பது போல் தோன்றுகிறது." என்று கூற

இதை கேட்ட வியாச மகிரிஷி, " நீங்கள் கூறுவதெல்லாம் உண்மையே. தாங்கள் பிரம்மாவிடமிருந்து நேரிடையாக தோன்றியவர். எல்லா உண்மைகளும் தெரிந்தவர், ஆகையால் என்னிடம் என்ன குறை உள்ளது என்று கூறுங்கள்" என்று வேண்டினார்.

அதற்கு நாரதர், "நீங்கள் பகவானின் பெருமைகளை நிறைவாக கூறவில்லை. நீங்கள் மக்கள் தேடவேண்டிய தர்மத்துக்கு கொடுத்த முக்கியத்துவம், வாசுதேவனுக்கு கொடுக்கவில்லை. அலங்காரமான வார்த்தைகள் மனிதனுக்கு வேண்டுமானால் இன்பமளிக்கலாம், இறைவனின் பக்தர்கள் அவைகளால் கவர படுவதில்லை" என்றார்.

மேலும், "இறைவனை அடைய வழிகாட்டாத அறிவு மனித ஆன்மாவுக்கு சுகமளிக்காது. பலனில் ஆசையால் ஒருவன் கர்மம் செய்வதால், நிச்சயம் அந்த கர்மத்தில் குறை இருக்கும். அப்படிப்பட்ட கர்மம் துன்பத்துக்கு காரணமாகிறது. ஆகையால், முனிவரே, மனம் தளராமல் உறுதியுடன் திருமாலின் புகழை பாடுங்கள். மனித குலம் மேன்மையடைய வழிகாட்டுங்கள்."

"மனிதன் சாதரணமாகவே கொடூர எண்ணங்கள் கொண்டவன். அவனை, மதத்தின் பெயரால் கொடூர செயல்கள் அவர்கள் செய்வதை எழுதியுள்ளீர்கள் (மகாபாரதத்தில்). தவறாக புரிந்து கொள்ளகூடிய மனிதர்கள், அந்த உபதேசங்களை சரியாக புரிந்துகொள்ளாமல், அவைகள் புனித செயல்கள் என்று எண்ணி, மேலும் தவறுகள் செய்வார்கள். அப்படிப்பட்டவர்கள், தவறுகளை தடுக்கும் நல்லுரைகள், உபதேசங்கள் கேட்க மறுப்பார்கள். மிகுந்த ஞானம் உடையவர்களால் மட்டுமே இறைவனின் தன்மையும், பெருமையும் உணர முடியும். ஆகையால், திருமாலின் புகழை எழுதுங்கள்."

மேலும், "உலகிலுள்ள உயிர்கள், முக்குணங்களால் கட்டுப்பட்டவை. அவைகளிடம், ஆன்மீக உணர்வு குறைவாகவே காணப்படும், இந்திரிய சுகங்களுக்கு கட்டுப்பட்டு, ஆசைபட்டு, எல்லா உயிர்களும் கடந்தகால செயல்களின் பலனால் துன்பத்தில் வாழ்கின்றன. இறைவன் திருமாலின் அடியவர்கள் மீண்டும் பிறப்பதில்லை. இந்த பிரபஞ்சமே இறைவனின் வடிவம். நீ இறைவனின் அம்சம், உலகை நல்வழியில் செலுத்தவே, வழிகாட்டவே நீ பிறந்துள்ளாய், ஆகையால், இறைவனின் முழு அவதார மகிமைகளையும் பெருமைகளையும் எழுது. கண்ணனே உனக்கு வழிகாட்டுவார். ஞானத்தை உணர்த்துவான், துன்பத்திலிருந்து விடுபட வேறு வழி கிடையாது" என்று கூறினார்.

இதை புரிந்துகொண்ட வியாச மகிரிஷி, ஸ்ரீமத் பாகவதத்தை எழுதினார். இது 18,000 ஸ்லோகங்களையும், 12 அத்தியாயங்களையும் கொண்டது. இதில், பிரபஞ்சம் எப்படி உண்டானது (சர்க்கம்), உயிர்கள் எப்படி விரிவடைந்தன (விசர்க்கம்), எப்படி நிலைத்து நிற்கின்றன (ஸ்திதி), இறைவனின் கருணை (போஷனா), வெவ்வேறு மனுக்களால் எப்படி காப்பாற்றப்பட்டது (மன்வந்தரம்), உயிர்களிடம் எப்படி பற்று உண்டாகின்றது (உட்னிஸ்), விஷ்ணுவின் அவதாரங்கள் (ஈசகாதாஸ்), உலகினின்று விடுபடுதல் (நிரோதா), பின்பு முக்தி, உற்பத்தி, இருத்தல், மறைதலுக்கான காரணமான (ஆஸ்ரயா), பிரம்மத்துக்கும் உலகிலுள்ள உயிர்களுக்குமுள்ள தொடர்பு, கடைசியில் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம், பின்பு அவர் வைகுண்டம் செல்லுதல், கலியுகத்தின் ஆரம்பம் வரை நன்கு விளக்கப்படுகின்றன.

ஸ்ரீமத் பாகவதம், நான்கு வேதங்கள் மற்றும் உபநிஷத்துகளின் சாரமாக, பக்தியையும் ஞானத்தையும் விளக்குவதாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment