Sunday 6 December 2015

சுக்லயஜுர் வேதம் - ஒரு சிறு விளக்கம்

சுக்லயஜுர் வேதம் - ஒரு சிறு விளக்கம்

இறைவனுடைய உள்ளிழுக்கும் காற்றாகவும், வெளிவிடும் காற்றாகவும் விளங்குவது வேதம். பகவானுக்கும் சுவாசம் உண்டு என்கிறது வேதம். வேதங்கள் எண்ணிறந்தவை என்றாலும், ரிஷிகள் சிலவற்றைத்தான் நமக்குப் கிரகித்து கொடுத்திருக்கிறார்கள். நம்முடைய நலனுக்கும், உலக நலனுக்கும் இதுவே போதும். ஏனென்றால், அத்தனை வேதங்களையும் நாம் தெரிந்துகொண்டு பிரம்மா மாதிரிப் பிரபஞ்சங்களை சிருஷ்டிக்க வேண்டுமா என்ன? சிருஷ்டியாகிவிட்ட இந்த உலகம் நன்றாக இருக்கச் செய்வதற்கான அளவுக்கு நமக்கு வேதங்கள் தெரிந்தாலே போதும். இப்படி ரிஷிகள் நமக்குத் தந்த வேதங்கள் தான் ருக், யஜுர், சாமம், அதர்வணம் என்று எல்லாருமே அறிவார்கள். இதைத்தவிர சுக்ல யஜுர் வேதம் என்றுமொரு வேதம் உண்டு. இந்த வேதத்தை யாக்ஞவல்கியர் என்ற மகான் சூரிய பகவானிடமிருந்து கற்று உலகிற்கு அளித்தார். யாக்ஞவல்கியர் இந்த வேதத்தைக் கற்ற வரலாறு மிகவும் சுவையானது.

வைசம்பாயனர் என்ற ரிஷி, வியாசரிடம் கற்ற யஜுர் வேதத்தை தன் சிஷ்யரான யாக்ஞவல்கியருக்கும் கற்றுக்கொடுத்தார். ஒருநாள் வைசம்பாயனர் அதிகாலையில் நீராடிவிட்டு, ஆசிரமத்தை நோக்கிவந்தார். வரும் வழியில், வேதத்தை கற்றுணர்ந்த பிரம்மச்சாரி சிறுவன் ஒருவன் படுத்துக் கொண்டிருந்தான். அதையறியாமல், ஏதொ சிந்தனையில் வந்த வைசம்பாயனர் அந்த சிறுவனின் வயிற்றில் காலை வைத்துவிட்டார். இதில் அந்த சிறுவன் துடிதுடித்து இறந்துபோனான். அதனால் வைசம்பாயனருக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது.

இதனால் வருத்தமுற்ற அவர், சோகத்துடன் ஆசிரமத்தில் அமர்ந்திருந்தார். ஆச்சாரியர் முகம் வாட்டமாக இருப்பதைக் கண்ட சீடர்கள் பணிவோடு காரணம் கேட்டனர், அவரும் நடந்த விவரங்களைச் சொன்னார். இதையறிந்த சீடர்கள், எல்லாருமாக சேர்ந்து ஏதாவது பிராயச்சித்தம் அனுஷ்டித்தால் அந்த பாவம் போகும், என்று எண்ணி குருவிடம் கூற, அவரும் அதை ஏற்று கொண்டார். அப்போது அவர்களுள் ஒருவரான யாக்ஞவல்கியர், குருவே, உங்கள் தோஷத்தை நிவர்த்திசெய்ய இத்தனை பேர் எதற்கு? நான் ஒருவனே பிராயச்சித்தம் செய்து சிரமத்தைப் போக்கிவிடுவேன் என்றார்.

இதனால், கோபமுற்ற வைசம்பாயனர், நீ எல்லாரையும் சாமானியர்கள் என்று மதித்து, நீ உன்னை உயர்ந்தவனென்று காட்டிக்கொள்கிறாய். அது உன் அகங்காரத்தைக் காட்டுகிறது. இவ்வளவு அகங்காரமுடைய சீடன் எனக்குத் தேவையில்லை. நீ ஆசிரமத்தைவிட்டு வெளியே போ! என்று கோபத்தோடு சொன்னார். இதை கேட்ட யாக்ஞவல்கியர், குருவே நான் தங்கள் மேல் உள்ள அன்பினாலும், மதிப்பினாலும் தான் சொன்னேன், இவர்களைக் குறைத்துக் கூறுவதற்காக நான் பேசவில்லை. அப்படி நீங்கள் நினைப்பதும் ஏற்றதல்ல. என் எண்ணத்தைப் புரிந்துகொள்ளாமல் என்னை போகச் சொல்கிறீர்கள். உங்களுடைய ஆச்சாரியத்துவம் எனக்கு வேண்டியதில்லை என்றார். உடனே, வைசம்பாயனர், என்னுடைய ஆச்சார்யத்துவம் வேண்டியதில்லையானால், என்னிடம் கற்ற வேதத்தை முழுக்க கக்கிவிட்டுப் போ என்றார்.

யாக்ஞவல்கியரும் சளைக்கவில்லை. கற்ற வேதங்களை எல்லாம் மொத்தமாக ஒரு மாமிசக் கோளமாகக் கக்கிவிட்டு கோபத்தோடு வெளியேறிவிட்டார். மகான்களின் தவவலிமையால் இப்படி எல்லாமே சாத்தியமாகும். வேதவித்தை கேட்பாரில்லாமல் ஒரே மாமிசக் கோளமாகக் கிடந்தது. வைசம்பாயனர் வேதம் இப்படி இருப்பதைக் கண்டு மனம் வருந்தி, மற்ற சீடர்களை அழைத்து அவர்களை தித்திரா என்ற பறவைகளாக மாறி கிழே கிடக்கும் மாமிசத்தை உண்ணும்படி சொன்னார். அவர்களும் குரு சொன்னபடி செய்தார்கள். இவ்வாறு வேதவித்தைகள் கக்கப்பட்டு மறுபடியும் கொள்ளப்பட்டு தரித்தது. அதனால் இதற்கு கிருஷ்ண யஜுர் வேத தைத்ரீய சம்ஹிதை என்று பெயர். தித்திரா என்ற பறவையின் பெயரால் தைத்ரீயம் என்ற உபநிடதம் உள்ளது.

பின்னர், வேதமிழந்த யாக்ஞவல்கியர் கங்கை நதி தீரம் சென்று நீராடி ஸ்ரீமந்நாராயணனைக் குறித்து பலவாறாக ஸ்தோத்திரம் செய்தார். பிறகு காயத்ரி தேவியை தியானித்து பல நாட்கள் தவமிருந்தார். அவரது தவத்திற்கிரங்கிய காயத்ரி தேவி, மகனே, நீ வேண்டிய வரமென்ன என்று அன்புடன் கேட்டாள். அவளை வணங்கிய யாக்ஞவல்கியர், தாயே, ஸ்ரீவைசம்பாயனர் என்னிடம் கற்ற வித்தைகளைக் கொடு என்று கேட்டார். மறுக்க வழியில்லாமல் கொடுத்துவிட்டேன். இப்பொழுது எனக்கு யஜுர் வேதம் வேண்டும். நீங்களே குருவாக இருந்து வேதத்தை எனக்கு உபதேசிக்க வேண்டும் என்றார்.

அதைக்கேட்ட காயத்ரி தேவி, முன்னொரு காலத்தில், நைமித்திக பிரளயம் ஏற்படப் போகிறதென்று அறிந்த பிரம்மதேவர் விஷ்ணு லோகம் சென்று, வரப்போகும் பிரளயத்தில் வேதத்தை பாதுகாக்க விஷ்ணுவிடம் யோசனை கேட்டார். அதைக்கேட்ட விஷ்ணு, கவலை வேண்டாம். வேதத்தின் ஒரு பகுதியாக யஜுர் வேதத்தை சூரிய பகவானிடத்தில் வைப்போம் என்று சொன்னார். அதன்படியே இந்த வேதமானது- அயாதயாமம் என்பது சூரியனிடம் வைக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீ சூரிய பகவானைக் குறித்து தவமிருப்பாயாக. நீ வேத வியாசரிடம் வேத அத்யயனம் செய்திருக்கிறாய். அந்த பிரகஸ்பதியே உனக்கு அட்சராப்யாசம் செய்துவைத்திருக்கிறார். எனது கடாட்சத்தால் உன் விருப்பம் நிறைவேறும் என்று அருள்புரிந்து மறைந்தாள்.

அது முதல் யாக்ஞவல்கியர் சூரிய பகவானைக் குறித்துத் தவமிருந்தார். சூரியன் ஒரு குதிரை வடிவில் அவர்முன் தோன்றினான். (அதனால் தான் நாம் முறைப்படி சந்தியா வந்தனம் செய்து, முறைப்படி முத்திரையிட்டு, சூரியனைப் பார்த்துவிட்டு கண்களை மூடினால் குதிரை ரூபம் கண்ணுக்குள் தெரியும்). சூரியதேவன் யாக்ஞவல்கியரிடம், உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். யாக்ஞவல்கியர், என் ஆச்சாரியர் வைசம்பாயனர் என்னை அனுப்பிவிட்டார். அவருக்குத் தெரியாத வேதம் எனக்கு வேண்டும் என்றார். யாக்ஞவல்கியரின் தவத்திற்கு மெச்சிய சூரியன், குருவுக்கு என்ன தெரியாதோ அந்த வேதத்தை சீடருக்கு உபதேசம் செய்துவிட்டார். அப்படி சூரியன் உபதேசம் செய்ததுதான் சுக்லயஜுர் வேதம்.

No comments:

Post a Comment