சூரியபகவான் தென் திசையிலிருந்து தனது ரதத்தை வடதிசை நோக்கி திருப்பி தனது பயணத்தை துவக்கும் காலமே ரதசப்தமி எனப்படுகிறது.
சாஸ்திர ரீதியாக உத்திராயண காலம் என்பது ரதசப்தமி அன்று தான் துவங்குகிறது. மகாபாராத கதாநாயகன் பீஷ்மர் தனது உடலில் இருந்து உயிரை நீக்குவதற்கு இந்த ரதசப்தமி நாளைத் தான் எதிர்பார்த்துக் காத்திருந்து மறுநாள் அஷ்டமி அன்று உயிர் நீத்தார்.
உலகத்தின் உயிராகச் சூரியதேவன் விளங்குகிறார். வேதகாலம் முதலே சூரியனைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. ரிக்வேதம் சூரியனை மூன்றுவித அக்னியில் ஒன்றாக விவரிக்கிறது. யஜுர்வேதம் சகல உலகங்களையும் ஒளிபெறச் செய்பவன் என்று போற்றுகிறது. அதர்வண வேதம் சூரியனை வழிபட்டவர்கள் இதயநோயிலிருந்து விடுபடுவர் என்று வழிகாட்டுகிறது.
மிகப்பழங்காலத்தில் சூரியவழிபாடு வடமாநிலங்களில் பரவி இருந்த புராணங்களில் சூரியனுடைய ரூபலட்சணம் பலவிதங்களில் வர்ணிக்கப்படுகிறது. சிவ ஆகமங்களில் சூரிய மண்டலத்தின் நடுவே சிவபெருமான் உறைந்திருப்பதாக கூறுகின்றன. அதனால் தான் சிவபெருமானுக்கு சிவசூரியன் என்றொரு திருநாமம் உண்டு. சூரியன் சிவனின் அஷ்டமூர்த்தங்களில் ஒருவராகவும், வலது கண்ணாகவும் இருக்கிறார்.
உத்தராயண புண்ணியகாலமான தை முதல் ஆனிவரையிலான காலத்தில் மட்டுமே சூரியனுக்குரிய சப்தமி விரதத்தை தொடங்கவேண்டும். வளர்பிறை சப்தமியில்இவ்விரதத்தை மேற்கொள்வர். குறைந்தபட்சம் தொடர்ந்து ஏழு சப்தமி நாட்களுக்கு விரதத்தைத் தொடர வேண்டும். சூரியதிசை, சூரியபுத்தி நடப்பவர்கள் இவ்விரதத்தை மேற்கொண்டால் நன்மை உண்டாகும். பாவங்களைப் போக்கி புண்ணிய பலன்தரும் விரதம்.
சப்தமி விரதம் மேற்கொள்பவர்கள் சூரியனின் வெம்மையிலிருந்து தப்பிக்க உதவும் செருப்பு, குடைகளைத் தானம் கொடுப்பது நல்லது. சூரியனுக்குரிய ஸ்தோத்திரங்கள், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற துதிகளைப் பாராயணம் செய்யலாம். இதனால், ஆரோக்கியமும் தீர்க்க ஆயுளும் உண்டாகும்.உலகநாடுகளில் சூரியவழிபாடுநம் நாட்டில் மட்டுமின்றி உலகம் எங்கிலும் சூரியவழிபாடு பலகாலமாக இருந்து வந்துள்ளது.
3000 ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தியர்கள் சூரியனை வழிபட்டு வந்துள்ளனர். அந்நாட்டை ஆண்ட பாரோ வம்சத்துஅரசர்கள் தங்களை சூரியன் வழி வந்தவர்களாக கருதினர். அங்கும் உழவுத்தொழில் சிறக்க சூரியனை மக்கள் வழிபட்டனர். பாரசீகர்களின் வேதநூலான ஜெந்த் அவெஸ்தாவில் மித்ரன் என்ற பெயரில் சூரியன் குறிக்கப்படுகிறார். மித்ரன் என்ற பெயர் சூரியனுக்கு உண்டு. மாகர்கள் எனப்படும் பாரசீகர்கள் சூரிய ஆராதனைக்காக இந்தியா வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
கிரேக்கர்கள் சூரியனை அபொல்லோ என்ற பெயரிலும், ரோமானியர்கள் ஹைபீரியன் என்னும் பெயரில் வழிபட்டனர். தென்அமெரிக்காவிலுள்ள பெருநாட்டில் இன்காஸ் இனத்தவர்களிடமும் சூரியவழிபாடு இருந்தது.
ரதசப்தமியன்று எருக்க இலைகளை சிரசின்மேல் வைத்துக்கொண்டு, கிழக்கு நோக்கி நின்று நீராட வேண்டும்.ரதசப்தமி திருநாளில் சூரியனின் கிரணங்கள் எருக்க இலைகள் மூலம் ஈர்க்கப்பட்டு, உடலில் ஊடுருவிச் சென்று, வியாதிகளைப் போக்கி குணம் தருகின்றனவாம்.
அதேபோல், இந்த தினத்தில் ஆறு அல்லது குளத்தில் நீராடுவது சிறப்பு! ரதசப்தமியன்று வீட்டு வாசலை மெழுகி, தேர்க்கோலம் போட்டு அலங்கரிக்க வேண்டும். பிறகு, சூரிய பகவானுக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பூஜிக்க வேண்டும். இந்தப் புண்ணிய தினத்தில், வீட்டு பூஜையறையிலும் சூரிய ரதம் போன்று கோலம் வரைந்து, உரிய ஸ்லோகங்கள் கூறி சூரியனை வழிபடுவதால், சகல நலன்களும் உண்டாகும்.
No comments:
Post a Comment