Thursday, 4 February 2016

பெண்கள் நாட்டின் கண்கள் மட்டுமல்ல ஒவ்வொரு வீட்டின் குலவிளக்கு. பெண்ணைக் காத்து வீட்டையும், நாட்டையும் காப்போம்.

உலக புற்றுநோய் தினம்
மார்பகப் புற்றுநோய் இந்தியாவில் பெண்களிடம் கருப்பைப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக அதிகமாக காணப்படும் ஒன்றாகும். 2001 ஆம் ஆண்டு இந்தியாவில் மொத்த பெண்களின் எண்ணிக்கையில் 503 மில்லியனில் 80 ஆயிரம் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ஒரு லட்சம் பெண்களில் 21 பேருக்கு இப்புற்றுநோய் பாதிக்கும் என்று அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.
மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் :1.மார்பகத்தில் கட்டி அல்லது அக்குளில் நெரிக்கட்டு ஏற்படுதல்.
2.மார்பக அமைப்பில் ஏற்படும் மாற்றம்.3.மார்பக காம்புகளிலிருந்து இரத்தத்துடன் கலந்து கசிவு.
4.மார்பக காம்புகள் உள்ளிழுத்துக் கொள்ளுதல்,மார்பகத் தோலில் ஏற்படும் சுருக்கம்.
மேற்கூறிய அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனே தாமதிக்காமல் மருத்துவரை அணுகி அவருடைய ஆலோசனையின் பேரில் மார்பகத்தில் உள்ள கட்டி புற்றுநோய் கட்டியா அல்லது சாதாரண கட்டியா என்பதை அறிந்து தக்க சிகிச்சையை பெறலாம்.
மார்பக புற்றுநோய் ஏற்பட காரணங்கள் :
1.சிறுவயதிலேயே பருவமடைதல் அல்லது மாதவிடாய் நிற்பதில் ஏற்படும் தாமதம்.
2.தாமதமாக குழந்தை பெற்று கொள்ளுதல்.
3.குடும்பத்தில் உறவினர்களுக்கு மார்பகப் புற்றுநோய் கண்டிருத்தல்.
மார்பகப் புற்று நோயிலிருந்து உங்களை காத்துக் கொள்ள வழிகள் : 1.கொழுப்பு சத்து மிகுந்த உணவை தவிர்க்க வேண்டும்.
2.உடல் பருமன், அதிக எடையை தவிர்க்க வேண்டும்.
3.மாதவிடாயை மாற்றக்கூடிய மாத்திரைகளை அதிகமாக பயன்படுத்தாமல் இருத்தல்.
4.உங்கள் நெருங்கி உறவினர்கள் எவரேனும் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் நீங்களும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
பரிசோதனை முறைகள் :
1.மாதமொருமுறை மார்பக சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
2.ஆண்டிற்கு ஒரு முறை மார்பகங்களை மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
3.மார்பக எக்ஸ்ரே (மெமோகிராபி) எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
பெண்கள் தாமே செய்து கொள்ள எளிதான மார்பக சுய பரிசோதனை முறை விளக்கம்
1.இடுப்பளவிற்கு துணிகளை இறக்கிவிட்டு பின்பு நின்றோஅல்லது உட்கார்ந்தோ கண்ணாடி முன் மார்பகங்களை கவனிக்கவும். கைகளை இருபுறமும் தளர்த்தி வைத்துக் கொள்ளவும். மார்பகத்தின் அமைப்பிலோ அல்லது தோற்றத்திலோ மாற்றம் உள்ளதா என்று கவனிக்கவும்.
இதே முறையில் கைகளை தலைக்குமேல் உயர்த்தி மார்பகங்களில் மாற்றம் உள்ளதா அல்லது மார்பகக் காம்புகளில் கசிவு உள்ளதா என்று கவனிக்கவும். பிறகு படுத்த நிலையில் தோள் அடியில் ஒரு மெல்லிய தலையனை வைத்து வலது கையால் இடது மார்பகத்தின் மேல் உள்ள பகுதியை பரிசோதனை செய்யவும். கைவிரல்களை சேர்த்த நிலையில் வைத்துக்கொண்டு வட்ட வடிவ முறையில் லேசாக அழுத்தி கட்டி தெரிகிறதா என்று பரிசோதனை செய்யவும். அதே முறையில் மார்பகத்தில் உள்ள கீழ் பகுதியை முறையாகப் பரிசோதிக்கவும். பின்னர் மார்பகத்தில் வெளி கீழ் பகுதியை லேசாக அழுத்தி பரிசோதனை செய்து கீழிருந்து மார்பகக்காம்பை நோக்கி வரவும். அதே முறையில் மார்பகத்தின் வெளிமேல் பகுதியிலிருந்து மார்பகக்காம்பு வரை பரிசோதனையை தொடரவும். மார்பகப் பரிசோதனைக்குப் பிறகு அக்குளில் நெரிகட்டி உள்ளதா என்று பரிசோதிக்கவும். பின்னர் இதே முறையில் இடது கையால் வலது மார்பகத்தையும்அக்குள் பகுதியையும் பரிசோதனை செய்யவும்.
குறிப்பு : பெண்கள் நாட்டின் கண்கள் மட்டுமல்ல ஒவ்வொரு வீட்டின் குலவிளக்கு.
பெண்ணைக் காத்து வீட்டையும், நாட்டையும் காப்போம்.
படத்தில் உள்ள மாடல் நடிகை கஸ்தூரி அவர்கள் மார்பக புற்றுநோய் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கோடு எடுத்துக் கொடுத்த படம். காமம் ஆக பார்க்காமல் பெண்கள் பாவம் என்று பாருங்கள்

1 comment: