Sunday, 27 March 2016

கர்மயோகம், பக்தி யோகம், இராஜ யோகம், ஞான யோகம் !!!!!!!!!!!

கர்மயோகம், பக்தி யோகம், இராஜ யோகம், ஞான யோகம் என்ற நான்கு ஆன்மீக பத்தியங்களுக்கான நான்கு அணுகுமுறைகளை ஆராய்வோம்
நவீன இந்து எழுத்துப்படிவங்களில் இந்து ஆன்மீகப் பயிற்சிகளின் சுருக்கமாக நான்கு யோகங்கள் சுட்டப்படுகின்றன: கர்மம், பக்தி, இராஜம் மற்றும் ஞானம். முதலில் ஒவ்வொன்றையும் சிறிது விளக்கியப் பின்னர் “எந்த யோகம் அல்லது யோகங்களை நான் இந்த நேரத்தில் செய்வது?” என்ற கேள்வியைக் கவனிப்போம்.
கர்ம யோகம் செயல்களின் பாதையாகும். இது என்ன செய்யக் கூடாது என்பதில் ஆரம்பிக்கின்றது. பிறகு நாம் தனக்கு மட்டுமே நன்மைச் சேர்க்கும், சுயநல ஆசைகளால் உந்தப்படும் செயல்களைத் துறக்கின்றோம். அடுத்ததாக, வாழ்க்கையில் நமக்கான கடமைகளை மனசாட்சியுடன் செய்வது நிகழ்கின்றது. கர்ம யோகத்தின் முக்கிய அம்சம், சுயநலமின்றி மற்றவர்களுக்கு நன்மை ஏற்பட செயல்படுவதாகும்.இதில் நாம் வெற்றிகாணும்பட்சத்தில், நமது வேலை வழிபாடாக உருமாற்றம் காண்கின்றது. என் பரமகுரு, ஶ்ரீலங்காவின் யோகசுவாமிகள் இந்த உத்தமத்தின் கருப்பொருளைச் சுட்டி இவ்வாறு சொன்னார், “எல்லா வேலைகளும் கடவுளை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் செய்யப்பட வேண்டும்.”
பக்தி யோகம் கடவுளிடத்து உறவு பூண்டிருப்பதும், கடவுளிடத்து அன்பு செலுத்துவதும் ஆகும். கடவுளைப் பற்றியக் கதைகளைக் கேட்பது, பக்தி பாடல்கள் பாடுவது, யாத்திரை, மந்திர உச்சரிப்பு, கோயில் மற்றும் வீட்டு பூஜை அறையில் வழிபடுவது போன்ற பயிற்சிகள் அடங்கியுள்ளன. பக்தி யோகத்தின் பலனாக மென்மேலும் நெருங்கிய உறவு கடவுளிடம் தோன்றிக்கொண்டே வருவதும், இந்த உறவு ஏற்படத் தேவையான குணங்களாகிய அன்பு, தன்னலமின்மை, தூய்மை ஆகியவற்றை வளர்த்தெடுத்தும், இறுதியில் ப்ராபதி எனப்படும் ஜீவபோதம் நசுங்கி கடவுளிடம் சரணாகதி ஆவதான ப்ராபதி எய்தப்படுகின்றது. எனது குரு, சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமிகள் கீழ்கண்ட உள்நோக்கு மிக்க விளக்கத்தை அளித்தார்: “கடவுளே அன்பு, கடவுளிடம் அன்பு செலுத்துவது ஆகமங்களில் [வெளிப்படுத்தப்பட்ட மறைகளில் ஒரு வகை] கூறப்பட்டுள்ள தூய பாதையாகும். உண்மையாகவே, கடவுளின் குரலான இந்நூட்கள் மறுபிறவியில் உழலும் சம்சாரிக்கு நிலையில்லாததை விரும்புவதை விடுத்து, மரணம்பிறப்பு இல்லாத பொருளை வழுத்தும்படி அறிவுறுத்துகின்றன. எவ்வாறு தெய்வத்தை நேசிப்பது, எங்கு, எப்படி, எந்த மந்திரங்கள் மற்றும் உருவகம் மற்றும் எந்த சுப காலங்களில் முன்னெடுக்கப்படவேண்டும் என யாவும் ஆகமங்களில் காக்கப்பட்டுள்ளன.
இராஜ யோகம் தியான வழியாகும். எட்டு நிலை வளர்ச்சிக்கிரம பயிற்சி முறை இதுவாகும். நன்னெறிக் கட்டுப்பாடுகள், சமயப் பயிற்சிகள், ஆசனம், பிராணாயமம், உள்வாங்கல், ஒருமை, தியானம் மற்றும் பேரானந்தம், அல்லது சமாதி. மனதின் விருத்திகளைக் கட்டுப்படுத்தி, ஆதலால் நமது உணர்வுநிலை தனது சுய கருநிலையில் அமிழ்ந்திருக்கச் செய்வதாகும். இந்த விருத்திகளைக் கட்டுப்படுத்துவது பயிற்சியினாலும், துறவினாலும் அடையப்படுகின்றது. எனது குரு மனதின் விருத்திகளைக் குறிப்பதற்காக உணர்வுநிலை என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்: “சாட்சியம் தான் காணும் உணர்வுநிலையுடம் ஒட்டியும் ஒன்றியும் போகும் பட்சத்தில், உணர்வுநிலையும் சாட்சியமும் ஒரே பொருளாகி விடுகின்றன. இவை இரண்டையும் பிரிக்கச் செய்வதே கலைநயமிக்க யோக மார்க்கம்.”
ஞான யோகம் அறிவுப்பாதையாகும். இது தத்துவப் படிப்பு மற்றும் உண்மை-உண்மையில்லாதது என பாகுபடுத்திப் பார்க்கும் முறையாகும். ஞானம் என்பது வெறும் ஞா என்ற உச்சரிப்பு மூலத்தைக் கொண்டிருப்பினும், இது அறிதல் எனும் பொருள்பட்டாலும் இதற்கு இன்னும் உயர்ந்த உட்பொருள் உள்ளது. இது வெறும் படிப்பறிவு மட்டுமன்றி, அனுபூதி ஆகும். இது பட்டறிவில் ஆரம்பித்து, அனுபூதி உள்அறிவில் சங்கமிக்கின்றது. மூன்று வளர்ச்சியூட்டும் பயிற்சிகளினால் ஆனது ஞான யோகம்: சிராவணம் (மறைநூட்களைப் படிப்பது); மனனம் (அதையே எண்ணுவதும் பிரதிபலித்துப் பார்ப்பதும்); நிதித்யாசனம் (ஆழமான விடாத் தியானம்). உபநிஷதங்களில் காணப்படும் நான்கு மகா வாக்கியங்கள் அடிக்கடி சுய பிரதிபலிப்புக்கு உள்ளாகின்றன: “பிரம்மம் உணர்வுநிலை”; “அதுவே நீ”; “தான் பிரம்மம்”; “நானே பிரம்மம்”. சின்மயா மிக்ஷன் ஸ்தாபகராகிய சுவாமி சின்மயானந்தா போதித்தது, “ஞான யோகத்தின் குறிக்கோள் என்னவெனில், பகுத்தறிவின் மூலமாக, உண்மையையும் உண்மையில்லாததையும் வேறுபடுத்திக் கண்டு, இறுதியில் தானே உச்ச உண்மையாக இருப்பதை இனம் காண்பதே ஆகும்.”
நான்கு அடிப்படை யோகங்களையும் சுருக்கமாக கண்ட நாம், இப்போது எவ்வாறு அவை பல தரிசனங்களில் கையாளப்படுகின்றன என்பதைப் பார்ப்போம். தற்போது நீ அடைந்திருக்கும் ஆன்மீக வளர்ச்சி நிலைக்கு ஒத்தவாறு, தேவையான யோகம் அல்லது யோகங்களைத் தேர்ந்தெடுக்க இது ஒருவேளை உதவலாம்.
முதலாவதும், மிகப் பரவலாகவும் பயன்படும் அணுகுமுறை உனது மனப்பாங்கை ஒத்தியது. தென் கலிபோர்னிய வேதாந்தக் கழகம் இந்த அனுகுமுறையைத் தனது இணைய தளத்தில் வழங்குகின்றது. “ஆன்மீக ஆர்வலர்கள் பொதுவில் நான்கு விதமாக இருக்கின்றனர். அதிக உணர்ச்சிவயம், அதிக சிந்தனா ஆற்றல், அதிக உடலாற்றல், மற்றும் தியானாற்றல் மிகுதி என்ற மனப்பாங்குகள் அவை. ஒவ்வொரு விதத்திற்கும் ஏற்றவாறு நான்கு அடிப்படை யோகங்கள் உருவகம் பெற்றுள்ளன. உணர்ச்சிவயமிக்கவர்களுக்கு பக்தி யோகம், சிந்தனா ஆற்றலுள்ளவர்களுக்கு ஞான யோகம், தேகபலமிக்கவர்களுக்கு கர்மயோகம் மற்றும் தியான ஆற்றலுள்ளவர்களுக்கு இராஜ யோகம்“.
இருப்பினும், சில வேளைகளில், சிந்தனா ஆற்றல் மிக்கவர்கள் ஞான யோகத்திலிருந்து ஒதுங்கியிருக்க அறிவுறுத்தபடுகின்றனர். அறிவிலிகளுக்கு இந்துமதம் என்ற தனது நூலில், லிண்டா ஜான்சன் இவ்வாறு விவரிக்கின்றார். “நீ அறிவுப்பூர்வி என நினைக்கின்றாயா? ஆச்சரியப்படுமாறாக, இந்து குருமார்கள் அறிவாலிகளை பக்தி மார்க்கத்தில் ஈடுபடும்படி அறிவுறுத்துகின்றனர், ஞான யோகம் அல்ல. ஏனென்றால், மிக அறிவாலிகள் தத்தம் இதயத்தைத் திறப்பதிலிருந்தே இன்னும் கூடுதலான நன்மைப் பெறுகின்றனர். ஞான யோகம் உறுதியான மறைபுலன் வளர்ந்து, கடவுளை அனுபவத்தால் அறிய வேண்டும் என்ற வேட்கை நிறைந்த மக்களுக்காக அன்றி, அறிவுப்பூர்விகளுக்கு அல்ல.”
இரண்டாவது அணுகுமுறை யாதெனின், உனது குணாதிசயத்துக்கு ஏற்ற ஒரு யோகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, இரண்டாம் பட்சமாக மற்ற மூன்று யோகங்களையும் சேர்ந்தே பயிற்சி செய்து வருவதாகும். தெய்வீக வாழ்க்கை மன்றத்தின் ஸ்தாபகராகிய சுவாமி சிவானந்தா நிலைநாட்டுவது என்னவென்றால், உண்மையான ஞானம் பெற வேண்டின், இயற்கையில் ஒரே ஒரு பாதைக்கு மட்டும் ஆர்வலர் ஒருவர் ஈர்க்கப்பட்டாலும், எல்லா பாதைகளிலும் இருக்கும் பாடங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டியது கட்டாயமாகின்றது. அவரது அமைப்பின் சுலோகம் “சேவை, அன்பு, தியானம், அறி” என கர்ம, பக்தி, ராஜ, ஞான யோகங்களை முறையே குறிக்கின்றது.
மூன்றாவது அணுகுமுறை நான்கு யோகங்களில் ஏதாவது ஒன்றே மிக உயர்ந்தது ஆகையால் அனைவராலும் பின்பற்றப் படவேண்டும் என வலியுறுத்துகின்றது. வைணவ அமைப்புக்களில் பக்தி யோகம் எல்லா பின்பற்றிகளுக்கும் உரிய பாதையாக வழங்கப்படுகின்றது. இதில், வைணவம் தன்னலம் கடந்த அன்பையும் சரணாகதியையும் முக்திக்கான முதன்மையான வழியாக குறிப்பதைக் காணலாம். மேலும் பக்தி யோகத்திற்கு தயாராகும் நோக்கில் கர்ம யோகத்தின் மூலம் ஒருவன் தன்னை தூய்மைச் செய்வது அறிவுறுத்தப்படுகின்றது. தியானத்துக்கு, அல்லது சதா ஆழ் தெய்வீக சிந்தனா மனோநிலைக்குத் தயாராகும் பொருட்டு ஒருவன் கர்ம யோகத்தில் ஈடுபட வேண்டும் என ஶ்ரீஇராமானுஜர் சொல்லியுள்ளார்.
சில வேதாந்த மரபுகள் ஞான யோகத்தை எல்லாருக்குமான பாதையாக காட்டுகின்றனர். எடுத்துக்காட்டுக்கு, ஆதி சங்கரரின் ஸ்மார்த்த மரபில், ஆரம்பக்கட்ட சாதனையாக கர்மயோகத்தைச் செய்து, தத்துவ பகுத்தறிவு ஆதாரத்தில் தியானிப்பது என விளக்கப்படும் ஞானயோகத்துக்கு ஒருவன் இட்டுச் செல்லப்படுகின்றான். சங்கரரின் விவேகச் சூடாமணியில் இந்தக் கருத்துக் காணப்படுகின்றது: “மனதைத் தூய்மைப்படுத்தவே காரியங்கள், உண்மையைக் கண்டுகொள்ள அல்ல. உண்மையை அறிவது பகுத்தறிவினால் மட்டும் ஒழிய கிஞ்சிற்றும் கோடிக்கணக்காண காரியங்களால் அல்ல.”
நான்காவது அனுகுமுறை கர்ம யோகம், பக்தி யோகம், ராஜ யோகம் என்ற பயிற்சிகள் யாவும் கடவுளிடம் ஒன்றிணைந்து இருப்பதை அறிவதற்கு அல்லது ஞானயோகத்திற்கான அத்தியாவசிய தேவைகள் எனக் கொள்கின்றது. நியூயோர்க் விஸ்வ தர்ம மண்டலத்தின் சுவாமி இராமகிருஷ்ணானந்தா எழுதியுள்ளார்: “ஞான யோகத்துள் நுழையும் முன், ஒரு மாணவன் சேவை அல்லது கர்மயோகம், கடவுளிடம் அன்பு அல்லது பக்தி யோகம், தியானம் அல்லது இராஜயோகம் ஆகியவற்றில் திளைத்தும் வளர்ந்தும் இருத்தல் முக்கியமாகின்றது. காரணம், முன்னேற்பாடுகள் இன்றித் தத்துவங்களைப் படிப்பதால் ஒருவன் தன்னை ‘உதட்டளவு வேதாந்தி’ அதாவது தனக்கு உண்மையிலேயே தெரியாத ஒன்றைப் பற்றி பேசும் ஒருவனாக உருமாற்றிக்கொள்ளும் ஆபத்து இருக்கின்றது.”
சிவானந்த யோக வேதாந்த நிலையத்தின் சுவாமி விஷ்ணுதேவனந்தா ஒத்த கருத்தை எடுத்துக் கூறியுள்ளார்: “ஞான யோகத்தை பயிற்சிக்கும் முன்னர், மற்ற யோக மார்க்கங்களின் பாடங்களை ஒருவன் ஒருங்கிணைத்திருக்க வேண்டும். தன்னலமின்மையும் கடவுளிடம் அன்பும் இல்லாமல், உடல் மற்றும் மனவலிமை இல்லாமல், தன்னை அறியும் தேடல் வெறும் சோம்பேறிக் கற்பனையாக மாறிவிடும் சாத்தியமுண்டு.”
சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமிகள் நான்காவது அணுகுமுறையில் காணப்படும் ஞானத்தைக் கண்டார். அவர் பகர்ந்தது, “கர்ம யோகமும் பக்தி யோகமும் உயர் தத்துவங்களுக்கும் பயிற்சிகளுக்கும் தேவையான தேவை.” அவர் இந்த யோகங்கள் அல்லது பாதைகள் யாவும் திரண்டு வளரும் தளங்கள் என போதித்துள்ளார். மேலும் ஒருவன் முன்னேறிச் செல்லும் போது, எது ஒன்றும் ஒதுக்கித்தள்ளப்படக் கூடாது. பக்தியைப் பற்றி, அவர் கூறியது, “நாம் ஒருபோதும் கோயில் வழிபாட்டை விஞ்சியதில்லை. அது மேன்மேலும் ஆழமாகவும், அர்த்தமுள்ளதாகவும் ஆகின்றது, நாம் இந்நான்கு ஆன்மீகப் படிகளில் முன்னேறிச் செல்லும்போது. சரியை பாதையில் [கர்ம யோகம்] தன்னலமற்ற காரியமாற்றும் நிலையில், நாம் கோயிலுக்குச் செல்வதற்கான காரணம், நாம் செல்ல வேண்டும் என்ற கட்டாயம், இது நம்மிடம் எதிர்பார்க்கப் படுகின்றது. கிரியைப் [பக்தி] பாதையில் வழிபாடு மிக்க சாதனை நிலையில், நாமே வேண்டி அங்கு செல்கின்றோம்; கடவுளிடம் இருக்கும் காதலே உந்துதலாக இருக்கின்றது. யோகப் பாதையில் நாம் கடவுளை உள்ளாராக வழிபடுகின்றோம், இதய கமலத்தில்; இருப்பினும் மனதின் அதிஉயர் உணர்வுநிலைகளில் மூழ்கியிருக்கும் யோகி கூட கோயிலை விஞ்சிவிடுவதில்லை. மண்ணுலகில் இருக்கும் கடவுளின் வீடாகிய அது -அங்கே இருக்கின்றது- யோகி மீண்டும் சாதாரண உணர்வுநிலைகளுக்கு வரும்போது. ஞானப்பாதையில் முழுதும் பயணித்தவர்களின் கோயில் வழிபாடானது மிகவும் உன்னதமானதால், அவர்களே வழிபாட்டுக்கு உரிய பொருளாகின்றனர்- வாழும், நடமாடும் கோயில்கள்.”
எந்த ஒரு யோகம் அல்லது யோகங்களைத் தேர்ந்தெடுப்பது என குழப்பமா? உனக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் இது ஒரு சிறப்பான கலந்துரையாடலாக இருக்கும். அப்படி இல்லை என்றால், பாதுகாப்பான ஓர் அணுகுமுறை கர்ம மற்றும் பக்தி யோகங்களில் தேறுவதாகும். இந்த யோகங்கள் நமது ஆணவத்துடன் மிக சீக்கிரத்தில் வேலைச் செய்து, ஆழமான அனுபவங்களுக்கு குறுக்கே இருக்கும் முக்கியமான தடைகளை நீக்குகின்றன, பெரும்பாலான நேரங்களில் இத்தடைகளைப் பலர் ஒரு பொருட்டாகக் கருதுவதே இல்லை. இப்பழக்கத்தினால் மெதுவான மனச் சுத்தியும், அதிக தன்னடக்கமும், தன்னலமின்மையும், வளர்தெழும் பக்தியும் விளைந்து, நமது எல்லாக் காரியங்களும் சீராக நம்மைக் கடவுளிடம் இட்டுச் செல்கின்றதென்ற உறுதியும் நம்முள் ஏற்படுகின்றது

No comments:

Post a Comment