Sunday 10 April 2016

நல்லொழுக்கம்



மகாபாரதம் சொல்லும் நல்லொழுக்கம்
***********************
மகாபாரதத்தின் சாந்தி பர்வத்தில், பீஷ்மர் ‘நல்லொழுக்கம்’ என்றால் என்ன என்பதைப் பற்றி சொல்லும் ஒரு கதை அமைந்துள்ளது.
ஒரு காலத்தில் ஓர் அடர்ந்த வனத்தில் ஜஜாலி எனும் துறவி வாழ்ந்து வந்தார். அந்த துறவி மிகவும் எளிமையான ஒரு வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்து வந்தார். நெடுங்காலமாக தவமிருந்து நிறைய ஆன்மீக அறிவைப் பெற்றார். ஆயினும் இதனால் அவர் தற்பெருமை கொள்ள ஆரம்பித்தார்.
”இந்த உலகத்திலே நான் தான் சிறந்த ஞானி. என்னுடைய தவோபலத்தால் நான் அளவற்ற ஆன்மீக அறிவைப் பெற்றுவிட்டேன். என்னைவிட சிறந்தவன் யாருமே இல்லை” என சத்தமாக சூளுரைத்தார்.
திடீரென்று அசரீரியாக ஒரு குரல் கேட்டது. அந்த குரல், “அவ்வாறு தற்பெருமை கொள்ளலாகாது, ஜஜாலி. ஊருக்குள் துலாதரன் எனும் வணிகன் இருக்கிறான். அறிவிலும் செயலிலும் உம்மை விட சிறந்தவன் அவன். எனினும் அவன் கூட இவ்வாறு தற்பெருமை கொண்டதில்லை.” என்றது.
ஜஜாலி வியப்படைந்தார். துலாதரன் என்பவர் யார்? அவர் தம்மை விட சிறந்தவனாக இருப்பது எப்படி? என ஆராய்ந்து அறிந்து கொள்ள ஆவல் கொண்டார். உடனே ஜஜாலி ஊருக்குள் சென்று துலாதரனைப் பற்றி விசாரித்தார். நெடுநேர தேடலுக்குப் பின்னர், வாரணாசியின் சந்தை ஒன்றில் அவரைக் கண்டார்.
துலாதரன் ஜஜாலியைக் கண்டவுடன் பணிவுடன் எழுந்து கைக்கூப்பி வணங்கினார். “துறவியாரே, உங்களின் வருகையால் நான் மிகவும் அகமகிழ்கிறேன்.”என்று சொன்னார்.
ஜஜாலியும் தன் வருகைக்கான காரணத்தைக் கூறினார். வனத்தில் அசரீரியாக எழுந்த குரல் சொன்னதையும் துலாதரனிடம் கூறினார். துலாதரனும் புன்னகைத்தபடி“துறவியாரே, தங்களைப் பற்றியும் தங்களின் வாழ்க்கையைப் பற்றியும் நான் நன்கு அறிந்திருக்கிறேன். உங்களின் துறவற வாழ்க்கை எனக்கொரு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது” என சொன்னார். துலாதரனும் சில நேரம் பேசினார். அவரின் அறிவாற்றல் மிகுந்த பேச்சு ஜஜாலியை வியப்பில் ஆழ்த்தியது.
ஒரு வணிகனுக்கு இவ்வளவு ஞானமா? எப்பொழுதும் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஒருவன் எவ்வாறு இவ்வளவு ஞானத்தைப் பெற்றிருப்பான்? என்று சிந்திக்கலானார். “துலாதரா, உமக்கு எவ்வாறு இவ்வளவு ஞானம் கிடைத்தது?” என கேட்டார்.
“துறவியாரே, நான் ஒரு வணிகன் தான். அன்றாடம் பண்டங்களை வாங்குதல் மற்றும் விற்றல் என செய்துவருகிறேன். ஆனால் என்னுடைய ஒவ்வொரு செயல்களிலும் எந்தவொரு உயிரும் துன்புறுத்தப்படுவதில்லை. என்னால் இயன்றவரை மற்றவர்களுக்கு நன்மைகள் செய்கிறேன். தவறியும் மற்றவர்களுக்கு கேடு விளைவிக்க நினைத்ததில்லை. யாரிடமும் கடுமையாக நடந்து கொண்டதில்லை. நான் யாரையும் இதுவரை வெறுத்து ஒதுக்கியதுமில்லை.” என துலாதரன் கூறினார்.
“இதுவே, நல்லொழுக்கம் என சான்றோர்கள் கூறுவது. இதனாலே ஒருவன் பக்குவநிலை அடைந்து ஞானமடைகின்றான். இதைவிட புண்ணிய செயல் பிரிதில்லை.” எனவும் துலாதரன் தொடர்ந்தார். பிறகு துலாதரன் நிறைய நல்ல விஷயங்களை எடுத்துக் கூறினார்.
”துறவியாரே, அங்கே பாருங்கள். ஓர் இளங்கன்று தன் தாயிடம் எவ்வளவு பாசமாக இருக்கின்றது. அதுபோல தான் நாமும் நம் தாயிடம் பாசமாக இருந்திருப்போம். பாசமும் நேசமும் மிருகங்களுக்கும் உண்டு. அவ்வாறு உணர்ச்சிகள் நிறைந்த உயிர்களைக் கொல்லுவதும் அவற்றின் உடம்பை தின்பதும் குற்றம். எல்லா உயிர்களிடமும் அன்பாக இருக்கவேண்டியது தானே மனிதர்களின் கடமை.” என கொல்லாமை தத்துவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அவர் நெடுநேரம் உணர்த்தினார். துலாதரனின் அகன்ற அறிவாற்றலும் பக்குவநிலையும் ஜஜாலியின் மனக்கண்ணைத் திறந்தன.
ஜஜாலியின் ஆணவமும் தற்பெருமையும் ஒழிந்துபோக அவர் துலாதரனை கைக்கூப்பி வணங்கினார்.

1 comment: