Wednesday, 1 June 2016

கடவுள் வழிபாடு முக்கியம்

கடவுள் வழிபாடு முக்கியம் என்பதை உணர்த்தும் கதை
இறைவனை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா, இல்லையா என்பது விஷயம் அல்ல. அவன் ஏற்றுக்கொள்ளும் நிலையில் உங்கள் செயல்பாடு இருக்கிறதா என்பதே முக்கியம்.
சுதனும், மதனும் நண்பர்கள். சுதன் கடவுள் மேல் அளவற்ற அன்பு கொண்டவன். மதன் கடவுள் மேல் துளியும் நம்பிக்கை இல்லாதவன். தவிர மனம் போன போக்கில் செல்லும் தவறான ஒரு வாழ்க்கை வாழ்பவன். நண்பனை திருத்த சுதன் எவ்வளவோ முயன்றும் பயனில்லை. ஒரு நாள் இருவரும் கோவிலுக்கு சென்றனர். சுதன் கோவிலுக்கு உள்ளே சென்று கடவுளை மனமார வேண்டினான். மதன் கோவிலுக்கு வெளியே காத்திருப்பதாக கூறி வெளியே நின்று கொண்டு, காலால் மணலை தள்ளி விளையாடிக் கொண்டிருக்கின்றான்.
சுதன் ஆலய தரிசனத்தை முடித்துவிட்டு திரும்பும்போது, எதிர்பாராதவிதமாக கோவில் மணியில் தலையை இடித்துக்கொண்டான். இதில் அவனுக்கு நெற்றியில் அடிபட்டு, சிறிய ரத்த காயத்துடன் திரும்பினான்.
அதே நேரம் வெளியே மணலில் விளையாடிக் கொண்டிருந்த மதனுக்கு, மணலில் இருந்து ஒரு ஐநூறு ரூபாய் கிடைத்தது. ரத்த காயத்துடன் திரும்பிய நண்பனை பார்த்து சிரித்தான் மதன்.
‘பார்த்தாயா! கடவுளே கதி என இருக்கும் உனக்கு ரத்த காயம்; எந்த நம்பிக்கையும் இல்லாத எனக்கு 500 ரூபாய் நோட்டு! இதிலிருந்தே தெரியவில்லை கடவுள் இருக்கிறார் என்று சொல்வதெல்லாம் பொய்!’ என சொல்லி சிரித்தான்.
சுதன் பதில் சொல்ல தெரியாது விழித்தான். வாழ்வில் பலருக்கும் இதுபோன்ற சம்பவம் நடப்பதுண்டு. ஆனால் எல்லாவற்றுக்கும் இறைவனின் பார்வையில் ஒரு காரண காரியம் இருக்கவே செய்யும்.
பூலோகத்தில் நடந்த இந்த காட்சியை கயிலாயத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பார்வதிதேவி இறைவனிடம், மதனின் கேலியை சுட்டிக் காட்டி விளக்கம் கேட்கிறாள்.
சிவபெருமான், ‘பார்வதி! கர்ம வினைப்படி, இப்பொழுது சுதனுக்கு பெரும் துன்பம் வர வேண்டிய நேரம். ஆனால் அவன் இறைவனே கதி என நல்வழியில் வாழ்ந்ததால், அவனுக்கு வர இருந்த பெரிய துன்பம் சிறிய காயத்துடன் போயிற்று!.
மதனுக்கோ அவன் விதிப்படி மிக மிக அதிர்ஷ்டமான நேரம் இது. பெரிய புதையலே கிடைக்க வேண்டிய தருணம். ஆனால் அவன் நல்வழியில் வாழாததால் வெறும் ஐநூறு ரூபாயோடு அவன் அதிர்ஷ்டம் முடிந்து போனது’ என்று கூறினார்.
இங்கே ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். மதன் நல்ல வழியில் வாழாததால் அவனுக்கு கிடைக்கவிருந்த மாபெரும் அதிர்ஷ்டம் கைநழுவிப்போனதாக இறைவன் கூறுகிறாரே தவிர, என்னை வழி படாததால் என்று கூறவில்லை. இறைவனை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா, இல்லையா என்பது விஷயம் அல்ல. அவன் ஏற்றுக்கொள்ளும் நிலையில் உங்கள் செயல்பாடு இருக்கிறதா என்பதே முக்கியம்

1 comment: