Tuesday, 12 July 2016

பித்ரு தோஷம் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள கருடப்புராணம் கூறும் எளிய வழிமுறைகள்

நமது குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள கருடப் புராணம் மிக எளிமையான வழிமுறைகளை தெளிவாக எடுத்துரைத்துள்ளது.
ஒருவர் இறந்த பின்பு அவருக்குரிய பித்ரு கடன்களை முறைப்படி செய்யாதவர்கள் குடும்பத்தில் மனக் கஷ்டம், பணக்கஷ்டம் போன்றவை இருந்து கொண்டே இருக்கும்.
இறந்தவர் ஆன்மா சாந்தியடைய நமது முன்னோர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டனர், இறந்தவுடன் இறந்தவருக்கு செய்ய வேண்டிய பிண்டம் இடுதல், இறந்தவரின் திதி தோறும் அவருக்குரிய கடமைகளை செய்தல், போன்றவற்றை செய்யாமல் இருக்கும் போது இறந்தவரின் ஆன்மா பசி, தாகம் போன்றவற்றால் அவதிப்படும், அப்படி அந்த ஆத்மா அவதிப்படும்போது, அந்த அவதியின் கொடூரங்கள் அவரது சந்ததியினரையும் விட்டு வைக்காது, அவர்களையும் பாதிப்படைய வைக்கும். இதைத்தான் பித்ரு தோஷம் என்று கூறுவார்கள்.
ஒருவன் நல்லவனாகவும், தெய்வ பக்தி மிகுந்தவனாக இருந்து இறந்தால், இறந்தவருக்கு பித்ரு கடன்களை சரியாக செய்யாவிட்டாலும் இறந்தவரின் குடும்பத்திற்கு பித்ரு தோஷம் கண்டிப்பாக ஏற்படும். ஆனால் அதன் தாக்கம் சற்று குறைவாக இருக்கும், காரணம், பித்ருக்களுக்கு இறைவனின் ஆசி இருப்பதால் தோஷத்தின் தீவிரம் சற்று குறைவாக இருக்கும்.
ஆனால் ஒருவன் மிக கொடூரமானவனாகவும், அடுத்தவர் மனைவி, அடுத்தவர் சொத்து போன்றவற்றை அபகரித்து, லஞ்சம், திருட்டு போன்ற கொடூரத்தில் ஈடுபடுவானாயின் அவன் இறந்த பிறகு அவனுக்குரிய பித்ரு காரியங்களை அவன் குடும்பம் செய்யாமல் விட்டுவிட்டால் இறந்தவனின் குடும்பத்தினருக்கு மிகப் பெரிய தீங்கு விளையும், இறந்தவனுக்கு இறைவனின் ஆசி இல்லாமல், நரக வேதனையில், பசி, தாகம் போன்றவற்றால் அவதிப்பட்டு அல்லல் படுவான் அப்படிப்பட்டன் படும் வேதனையின் தாக்கம் மிகுந்த வீரியம் மிகுந்ததாக இருக்கும். அந்த தாக்கம் அவனது குடும்பம், மற்றும் சந்ததியினரையும் மிகவும் கொடூரமாக தாக்கும்.
பித்ரு தோஷம் உள்ளவன் வீட்டில் அதிகம் நடைபெறும் செயல்களைப் பார்ப்போம்.
தான் செய்யும் செயல்களில் அதிகமாக பாவம் உண்டாக்கும் செயலையும், லஞ்சம், லாவணியம் போன்ற கெடுதல் தரக்கூடிய செயல்கள் அதிகம் நடைபெறும்.
குழந்தைகள் பிறந்து பிறந்து இறப்பார்கள்.
சுற்றத்தாரோடு ஒற்றுமையில்லாமல் மனம் வேறுபட்டு வாழ்வதற்கும், குடும்பத்தில் நிம்மதி இன்றி கடைசியில் வெறுமையே ஏற்படும்.
பசுக்களை போஷிக்க முடியாமற் போகும்.
நல்ல நண்பனோடு விரோதிக்க நேர்ந்து நல்ல நட்புகள் ஏற்டாமல் போகும்.
ஹரி பக்தி செய்ய முடியாமல் வாழ்நாள் வீணாவதற்கும் ஜெப ஓமங்களைச் செய்ய முடியாமல் போகும்,
தந்தை தாயாரை இகல்வதும், அவர்களை மதிக்காமல் அவமதிக்கும் செயல்கள் நடைபெறும்.
பணம் மற்றும் சொத்து, பொன் பொருள், பெண் போன்ற காரணங்களால் அயலாரை கொல்ல முயற்சிக்கும் செயலுக்கு மனம் உந்தப்படும்.
இழிந்தோர் செய்யும் தொழிலைச் செய்து பிழைக்க நேரிடும்.
அதர்மங்களையே செய்ய தூண்டும் எண்ணம் மனம் முழுவதும் எழும்.
பிதுர் கர்மங்களை விக்கினத்தால் தடைபட்டு குறைபட்டு போகும்,
புத்திரன் பகைவனைப் போல மாறும் சூழல் ஏற்படும்.
மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாமல் நெடுநாட்கள் பிரிந்து வாழும் நிலை ஏற்படும்.
மேற்கண்ட கெடுதல் தரக்கூடிய செயல் உங்களுக்கு (உங்கள் இல்லத்தில்) அதிகம் நடைபெறுகிறதா, இவை எல்லாம் பிரேத ஜென்மத்தை அடைந்தவனால் ஏற்பட்ட விளைவுகளால் தான் என்பதை கருடப் புராணம் கூறுகிறது.
இதுபோன்ற பிரச்சனை தீரவேண்டுமெனில் பித்ரு கடன்களை ஒழுங்காகவும், கடமை தவறாமலும் செய்யுங்கள், பித்ரு கடன் என்ன என்பதை கேட்டு அறிந்து அதன்படி உங்கள் பித்ருகளை திருப்தி படுத்தினாலே மேற்கண்ட கெடுதல்களில் இருந்து எளிதாக நீங்கள் தப்பிக்கலாம்.

No comments:

Post a Comment