Saturday, 10 December 2016

*சிவன் சொத்து குல நாசம் – இதன் உண்மையான அர்த்தம் என்ன?*

*சிவன் சொத்து குல நாசம் – இதன் உண்மையான அர்த்தம் என்ன?*
சிவனின் சொத்தாக, அவர் அருளிய மூல வித்தாக கருதப் படுவது சித்த மார்க்கம். அத்தகைய மார்க்கத்தைப் பின் பற்றியவர்கள் சித்தர்கள்.
ஒருவர் சித்தராக வேண்டும் என்றால் அதற்கென்று சில விதிமுறைகள் இருக்கிறது.
நினைப்பவர் எல்லாம் சித்தர் ஆகி விட முடியாது.
நரை, திரை, முப்பு என்று நம்மிடம் கேட்டுக்கொண்டிருக்காமல் பால்ய, இளமை, முதுமை என மரணத்தை நோக்கி தானாக நகர்ந்து கொண்டிருக்கும் காயத்தை (உடலை) தன்வயப்படுத்தி நிறுத்த வேண்டும். சதா காலமும் சுக்கிலத்தை, அதாவது நாத விந்தை கட்ட வேண்டும்.
ஆணவம், கன்மம், மாயை என்கிற மும்மலத்தை அறுக்க வேண்டும். அனைத்து பந்தங்கள் மீதும் பாசம் வைத்திருக்கும் தன்மையை நீக்க வேண்டும். அத்தகையவனே சித்தி அடைந்தவன்.
இதில் மிகவும் முக்கியமானது, யோக பயிற்சியின் முலம் குண்டலினியை எழச் செய்வதாகும். அதாவது, ஆண் ஆனவன், தனது விந்தை பூமியை நோக்கி விழச் செய்யாமல், அதை பிரம்மச்சரியத்தால் கட்டி, உச்சந்தலையை நோக்கி உயர்த்தி, உள் நாக்கில் அமிர்தத் துளிகளாய் விழ வைக்க வேண்டும்.
அதன் பின்னரே அவனுக்கு அஷ்டமா சித்திகள் கிடைக்கும்.
இவ்வாறு விந்துவை ஒருவன் மேல் நோக்கி எழுப்பினால் அவனால் இல்லறத்தில் ஈடுபட்டு குழந்தை பாக்கியம் பெற முடியாது. அவனது வம்சம் அவனுடனேயே அழிந்து விடும்.
இதனால்தான் சிவன் சொத்து குல நாசம் என்று சொன்னார்கள்.
நம்மில் பலருக்கு நமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய இந்து சமயம் சார்ந்த நடைமுறைகள் தெரியவில்லை; எதற்கெடுத்தாலும் இதைச் செய்யக்கூடாது; அதைச் செய்யக்கூடாது என்று சொல்ல மட்டுமே தெரிந்திருக்கிறது.
உதாரணமாக, சிவன் சொத்து குல நாசம் என்பது பழமொழி மட்டுமல்ல; அனுபவ மொழியும் கூட! இதை இந்த வேகமான கம்யூட்டர் யுகத்தில் எப்படி அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள் தெரியுமா? சிவாலயத்துக்கு செல்கிறோம்; சிவனை வழிபடுகிறோம்; பூசாரி விபூதி கொடுக்கிறார். அதை வீட்டுக்குக் கொண்டு வராமல் அங்கேயே போட்டுவிட்டு வந்துவிடுகிறோம்; ஏன் என்று கேட்டால், *சிவன் சொத்து குல நாசம்;* சிவனின் அம்சமான விபூதியை வீட்டுக்குக் கொண்டுவந்தால், நமது குலத்தை நாசமாக்கிவிடுமாம்; எப்படி அர்த்தப்படுத்திக் கொள்கிறோம்.
நிஜத்தில் சிவாலயத்தில் தரப்படும் விபூதி, குங்குமத்தை ஒவ்வொரு நாளும் நமது வீட்டுக்குக் கொண்டு வந்து பூஜையறையில் வைக்க வேண்டும்; இப்படி சேமித்து வைத்துக்கொண்டே இருந்தால், சிவனது அருட்பாதுகாப்பு நமக்கும், நமது குடும்பத்தாருக்கும் கிடைக்கும்.
இன்னும் சிலர் குதர்க்கமாகக் கேட்கிறார்கள்: சிவன் சொத்துதானே குல நாசம்! பெருமாள் சொத்து? என்று! சிவன் சொத்து மட்டுமல்ல; பெருமாள், விநாயகர், முருகர், காளி, அங்காள பரமேஸ்வரி என எந்த இந்துக்கடவுளின் சொத்தையும் திருடினால் திருடியவனின் குலமே சர்வ நாசமாகி விடும் என்பது உண்மை.

No comments:

Post a Comment