Monday, 26 June 2017

வாயை மூடிக்கொண்டிருந்தாலே செலவுகள் குறையும்!

மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன்.
"அரிதான இந்த மீனைத் தாங்கள் வாங்குவது பொருத்தமாக இருக்கும்" என்றான்.
மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுத்தார்.
மன்னரின் மைத்துனர் கொதித்துவிட்டார்.
"அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா? அதைத் திருப்பி வாங்குங்கள்!" என்றார்
"முடிந்த வியாபாரத்தை மாற்றுவது அழகல்ல!" என்றார் மன்னர்
"சரி! அவனைக் கூப்பிட்டு, இந்த மீன் ஆணா? பெண்ணா? என்று கேளுங்கள்!
ஆண் மீன் என்றால் பெண் மீன்தான் வேண்டும் என்று சொல்லுங்கள்!
பெண் மீன் என்றால் ஆண் மீன்தான் வேண்டும் என்று கேளுங்கள்!"
எப்படியும் அவனிடமிருந்து காசைத் திரும்பப் பெறவேண்டும் என்று நினைத்தார் மைத்துனர்.
மீனவனை அழைத்தார்கள்.
"இந்த மீன் ஆணா? பெண்ணா?" என்ற கேள்வியை மைத்துனர் கேட்டார்.
மீனவன், "இது ஆணும் இல்லை; பெண்ணும் இல்லை; இரண்டின் குணங்களையும் கொண்ட அரிய வகை மீன்! அதனால் தான் இதை மன்னருக்குக் கொண்டுவந்தேன்" என்றார்.
இந்தப் பதில் மன்னருக்கு நெகிழ்ச்சியைத் தந்தது.
மேலும் ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்தார்.
மைத்துனருக்கு எரிச்சல் ஏற்பட்டது.
மன்னர் கொடுத்த காசிலிருந்து, ஒரு தங்கக் காசு கீழே உருண்டு ஓடியது; அவன் அதைத் தேடிப்போய் எடுத்தான்.
மைத்துனர் கோவத்தின் உச்சிக்கே போனார்.
"பேராசைக்காரன்! கீழே விழுந்த காசையாவது போகட்டுமே! என்று விட்டானா? பாருங்கள்!" என்று மன்னரிடம் குறைகூறினார்.
அவன் நிதானமாகத் திரும்பி, "நான் பேராசையில் அதை எடுக்கவில்லை! அந்த நாணயத்தில் மன்னரின் உருவம் இருக்கிறது. யாராவது அதைத் தெரியாமல் மிதித்துவிட்டால் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது!" என்றார்.
இதனால் இன்னும் மன்னரின் மனம் நெகிழ்ந்துபோனது. மேலும் ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்தார்.
சிலசமயம் வாயை மூடிக்கொண்டிருந்தாலே செலவுகள் குறையும்! - இதுதான் இந்தக் கதையின் நீதி..

1 comment: