Monday 26 June 2017

!!*மகா பெரியவாள்*!!

!!*மகா பெரியவாள்*!!
கேட்டதும் கிடைக்கும் சன்னதி
ஒரு சுமங்கலி தன் மகனை அழைத்துக் கொண்டு மகானிடம் வந்து “இவனுடைய வாயில் புண் இருக்கு…எத்தனையோ மருந்து கொடுத்தும் போகலே. பெரியவாதான் காப்பாத்தணும்” என்று வந்து நின்றாள்.
உடனே ஸ்ரீ பெரியவா அங்கிருந்தவர்களைப் பார்த்து “தேங்காய் பூ கிடைக்குமா” என்றார்.
பலபேருக்கு அப்படி ஒரு பூ இருப்பதாக தெரியவில்லை. தேங்காய் பூ பற்றி தெரிந்தவர்களுக்கோ அது கேட்டவுடனே கிடைக்கும் வஸ்து அல்ல என்பது தெரியும். ஏதாவது ஒரு தேங்காயில் அபூர்வமாக தென்படக்கூடியதாயிற்றே இப்படி திடுதிடுப்பென்று கேட்டால் கிடைக்காத பொருளாயிற்றே என்று செய்வதறியாமல் நின்றனர்.
இப்படி ஸ்ரீ பெரியவா தேங்காய் பூ கிடைக்குமா என்று கேட்டு நிறுத்திய உடனேயே காக்கிநாடாவிலிருந்து சிந்தாமணி கணபதி என்ற பண்டிதர் பக்தி பரவசத்தோடு ‘சந்திரசேகர பாஹிமாம்’ என்று பாடிக்கொண்டே வந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்.
மேலும் தான் கொண்டுவந்த முப்பது தேங்காய்களை ஸ்ரீ பெரியவா முன்னே வைத்தார். எப்போதும் எல்லோரும் செய்வது போல தேங்காய்களை அப்படியே சமர்பிக்காமல் எல்லா தேங்காய்களை ஸ்ரீ பெரியவா முன்னாலேயே உடைத்து உடைத்து தட்டில் வைத்தார்.
என்ன அதிசயம்….அவற்றுள் நாலு மூடி தேங்காய்களுள் அரை எலுமிச்சை அளவில் தேங்காய் பூ என்ற கட்டி இருந்தது. அவைகளை அந்த மாதுவிடம் கொடுக்கச் சொல்லி “வெயிலில் உலர்த்தி தினமும் கொஞ்சமாக சாப்பிடச் சொல்லு” என்றார்.
பையனுக்கோ அவசரம். அதை உடனே அப்படியே வாயில் போட்டுக் கொண்டான். பெரியவா மற்ற பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக் கொண்டிருக்க ஒரு மணி நேரம் ஆனது. பையன் திரும்பி வந்தான். சுற்றியிருந்தவர்களுக்கெல்லாம் பையனுக்கு என்ன ஆனதோ என்று திகீரென்றது.
“பாதி புண் சரியாயிடுத்து” என்றான் பையன்!
இப்பேற்பட்ட ஆனந்த அனுபவங்களை அள்ளித் தந்து, தன் அபார கருணையால் ஆட்கொண்டருளும் ஸ்ரீ மகா பெரியவாளிடம் நாம் கொளும் பூர்ண சரணாகதம் நமக்கு சகல நன்மைகளையும், சர்வ மங்களங்களையும் அருளும் என்பது திண்ணம்.

No comments:

Post a Comment