Wednesday, 14 June 2017

கர்ணன் செய்யாத தானம் எது?

கர்ணன் செய்யாத தானம் எது?
'தானம் தவம் இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்'
என்று தானத்தின் மேன்மையைப் பற்றி வள்ளுவர் நமக்குத் தெளிவாக உணர்த்துகிறார். பொதுவாக தானம் மூன்று வகைப்படும் அவை தலைப்படுதானம், இடைப்படுதானம், கடைப்படுதானம். மேலும், தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் கொடுக்கப்படுபவையாக 42 வகையான தானங்கள் உண்டு. அனைத்து தானங்களையும் விட உயர்ந்ததாகவும், சிறப்பானதாகவும் போற்றப்படுவது 'அன்னதானம்' மட்டுமே.
தானத்தில் மற்ற தானங்களைவிட அன்னதானத்துக்கு மட்டும் என்ன தனிச்சிறப்பு?
எந்த ஒரு பொருளையும் மற்றவர்களுக்குத் தானம் செய்யும்போது, பெறுபவர்களுக்கு மனநிறைவு இருக்கவே இருக்காது. இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்றே சொல்வார்கள். ஆனால், போதும் என்ற மனநிறைவை பெறுபவருக்குத் தரும் தானம் அன்னதானம் மட்டுமே.
அன்னதானத்தின் சிறப்பை கர்ணன் உணர்ந்த மகாபாரதக் கதையைப் பற்றிப் பார்ப்போம்.
மகாபாரதத்தில் கௌரவர்களுடன் இருந்தபோதும் அனைவராலும் விரும்பப்படுபவனாகத் திகழ்ந்தவன் கர்ணன். அதற்குக் காரணம் அவன் செய்த தான, தர்மம். யார் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாதவன். இப்போதும், நாம் கொடையின் சிறப்பைப் பற்றி கூறும்போது கர்ணனைத்தான் குறிப்பிடுகிறோம். அந்த அளவிற்குத் தானம் செய்வதில் சிறந்து விளங்கியவன் கர்ணன்.
மகாபாரதப் போரில் மடிந்த கர்ணன் நேராகச் சொர்க்கத்திற்குச் செல்கிறான். அங்கே அவனுக்கு அனைத்து விதமான வசதிகளும் கிடைக்கின்றன. ஆனால் பசி மட்டும் வாட்டி எடுக்கின்றது.
'சொர்க்கத்தில் பசியே எடுக்காது என்று சொல்வார்கள். ஆனால், நமக்கு மட்டும் பசி வாட்டி எடுக்கிறதே?' என்று சிந்தித்துக் கொண்டிருக்கும்போது நாரத மகரிஷி தோன்றுகிறார்.
சரி தன் சந்தேகத்தை நாரதரிடம் கேட்கலாம் என்று முடிவுசெய்கிறான் கர்ணன்.
''நாரதரே, சொர்க்கத்தில் பசி போன்ற உணர்வுகள் தோன்றாது என்று கேள்விப்பட்டுளேன், ஆனால் எனக்கு மட்டும் பசி வாட்டி எடுக்கிறதே ஏன்? " என்று கேட்கிறான்.
அதற்கு நாரதர் "உன் பசி போக ஒருவழி இருக்கிறது. உன் ஆட்காட்டி விரலை உன் வாயில் வைத்துக்கொள் உனக்குப் பசிக்காது" என்கிறார்.
அதன்படி கர்ணன் தன் ஆட்காட்டி விரலை வாயில் வைத்ததும் பசி நீங்கிவிடுகிறது. ஆனால், விரலை எடுத்தால் மீண்டும் பசி வந்து வாட்டுகிறது.
அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள மீண்டும் நாரத மகரிஷியை நினைக்கிறான் கர்ணன். நாரத மகரிஷியும் கர்ணனுக்கு எதிரில் தோன்றுகிறார்.
அவரிடம் "நாரதரே நீங்கள் சொன்னதுபோல் என் ஆட்காட்டி விரலை வாயினுள் வைக்கும்போது எனக்குப் பசி அடங்கிவிடுகிறது. ஆனால், என் விரலை வாயிலிருந்து எடுத்துவிட்டால் எனக்கு மீண்டும் பசிக்கிறதே என்ன காரணமாக இருக்கும்?" என்கிறான் வருத்தத்தோடு.
நாரதர் "கர்ணா உன் வாழ்க்கையில் அத்தனை தானங்களையும் செய்த நீ, அன்னதானத்தை மட்டும் செய்ததில்லை. அதனால்தான் இங்கே உனக்கு பசி ஏற்படுகிறது. ஆனால் ஒரே ஒருமுறை அன்னசத்திரம் எங்கே இருக்கிறது என்று கேட்ட ஒருவருக்கு உன் ஆட்காட்டி விரலால் வழிகாட்டியுள்ளாய். அதனால் உன் ஆட்காட்டி விரல் மட்டுமே அன்னதானப் பலன் பெற்றது" என்கிறார்
'அன்னதானத்திற்கு வழிதான் காட்டினோம் அதற்கே இவ்வளவு புண்ணியம் என்றால் அன்னதானம் எவ்வளவு உன்னதமானது!' என்பதை உணர்ந்தான் கர்ணன்.
'மீண்டும் ஒரு பிறவி எடுக்கவேண்டும். அப்போது தானத்தில் சிறந்த அன்னதானத்தை அளப்பரிய வகையில் செய்யவேண்டும்' என்று பரம்பொருளிடம் வேண்டிக்கொள்கிறான்.
அன்னதானத்தின் மேன்மைகள்:
அன்னதானம் செய்பவரை வெயில் வருத்தாது.
வறுமை ஒருபோதும் தீண்டாது.
இறையருள் எப்போதும் கிடைக்கும்.
மனதில் மகிழ்ச்சி நிலைக்கும்.
என்று வள்ளலார் கூறுகிறார்.
அன்னதானம், செய்பவர் மட்டுமல்லாமல் அவர் சந்ததியினருக்கும் நன்மை தரக்கூடியது.
'அன்னம் வழங்குபவர் சுகமாக வாழ்வார்' என்று சாஸ்திரங்கள் அதன் சிறப்பைப் போற்றியுள்ளன.
'உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே' என்று புறநானூறு அன்னதானத்தின் சிறப்பைப் போற்றுகிறது.
'அன்னம் இட்ட கை சின்னம் கெட்டுப் போகாது' ஒருவர் செய்த அன்னதானத்தின் பலனானது பலபிறவிகள் அவரைக் காத்துநிற்கும்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த அன்னதானத்தை நாமும் நம்மால் முடிந்த அளவிற்கு பிறருக்குச் செய்து இறைவனின் அனுக்கிரகத்தைப் பெறுவோம். நலமோடு வாழ்வோம்!

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete