Wednesday, 7 June 2017

!!"ஆசாரம்_பார்க்கிறவன்_காசிக்கு_போனானாம்.. காசிக்கு_போனாலும்_கருமம்_தொலையிலயாம்..."!!
ஆசாரம் பார்க்கிறவன் காசிக்கு போன கதை :
"ஒரு ஊரில் ஒரு ஆசாமி இருந்தான். அவன் ரொம்பவும் சுத்தம் பார்க்கிற ஆளு. அவனுக்கு எதை கண்டாலும் அருவெறுப்பா இருந்தது. ஒரு சமயம் நம்ம ஆளு ஒரு கல்யாண வீட்டுக்கு போயிருந்தான். கல்யாணம் முடிஞ்சு சாப்பாடு பந்தி ஆரம்பமாச்சு.. நம்ம ஆளு ஒரு ஓரமா போய் உக்கார்ந்துகிட்டான், சாப்பாடு பிரமாதமா இருந்துச்சு. இவனுக்கு பக்கத்து இலையில் உக்கார்ந்திருந்த ஆசாமி பால் பாயசத்தை உறிஞ்சி உறிஞ்சி குடிச்சிட்டுருந்தான். அப்போ எச்சில் நம்ம ஆளு மேலே தெரிச்சிட்டுது . நம்ம ஆளுதான் ரொம்பவும் சுத்தம் பார்க்கிற ஆளாச்சே. இந்த கருமத்தை காசியில் போய்தான் தொலைக்கணும்னு நினைச்சிகிட்டு மறுநாளே காசிக்கு கிளம்பி போனான். அந்த காலத்தில் இப்போ மாதிரி பஸ், ரயில் வசதி எல்லாம் கிடையாதே. வசதி இருக்கிறவங்க வண்டி கட்டிக்கிட்டு போவாங்க. வசதி இல்லாதவங்க கால் நடையாவே போவாங்க..
போய் சேரவே பல நாள் ஆகும். பகல் முழுக்க நடப்பாங்க, இரவு நேரத்தில் ஏதாவது சத்திரத்திலோ அல்லது யார் வீட்டு திண்ணையிலோ படுத்து தூங்கி விட்டு மறுநாள் பயணத்தை தொடங்குவாங்க. இப்படி மத்தவங்க தங்கறதுக்கு வசதியாகவே அந்த காலத்தில் பெரிய திண்ணைகள் வைத்து வீடு கட்டினாங்க. திண்ணையில் வந்து தங்குறவங்களுக்கு சாப்பாடோ, அல்லது நீர்மோரோ அல்லது தங்கள் சக்திக்கு முடிஞ்ச ஏதோ ஒன்றை அவங்களுக்கு சாப்பிட கொடுப்பாங்க.
நம்ம ஆளு பகல் முழுக்க நடந்து, இரவில் ஒரு வீட்டு திண்ணையில் வந்து
சுருண்டு படுத்தான்.
 அந்த வீட்டு ஆள் வந்து "ஐய்யா, உங்களை பார்த்தால் ரொம்ப தூரம் நடந்து களைச்சு போனவரா தெரியுது. வாங்கையா. வந்து சாப்பாடு சாப்பிட்டுட்டு படுங்க" என்றார்.
நம்ம ஆளுக்கு நல்ல பசிதான். ஆனால் ஆசாரம் தடுத்தது. கடைசியில் வயிறுதான் ஜெயித்துசு. நம்ம ஆளு சாப்பிட சம்மதிக்கவும், அந்த ஆளு தன்னோட மனைவியை கூப்பிட்டு இவனுக்கு சாப்பாடு போட சொன்னார்.
கைகால் சுத்தம் பண்ணிவிட்டு சாப்பிட உட்கார்ந்த நம்ம ஆளு "அம்மா எனக்கு இலையில் சாப்பிட்டுதான் பழக்கம். அதனாலே இலையில் பரிமாறனும்"னு
சொல்ல, கொஞ்சம் யோசித்த அந்த அம்மா "சரி",ன்னு சொல்லி ஒரு இலையை கொண்டு வந்து போட்டு சாப்பாடு பரிமாரினாங்க. சும்மா சொல்லக்கூடாது. சாப்பாடு அருமையா இருந்துச்சு. நம்ம ஆளு நல்லா திருப்தியா சாப்பிட்டான். சாப்பிட்டு முடிச்சு இலை எடுக்கும்போது அந்த அம்மா ஓடி வந்து "ஐய்யா, நான் எடுக்கிறேன்"னு சொல்லி ரொம்ப பயபத்திரமா எடுத்துட்டு போனாங்க. இதை பார்த்த நம்ம ஆளு " தூர வீசி எறிய போற இலையை என்னத்துக்கு இவ்வளவு பத்திரமா எடுத்துட்டு போறீங்க"ன்னு கேட்க, அந்த அம்மா "இந்த ஊரில் வாழை இலை கிடைக்கிறது குதிரைக்கொம்புதான். என்னோட மாமனாரும் உங்களைபோல வாழை இலையில் சாப்பிடற ஆள். அவருக்காக ஒரேஒரு வாழை இலை வாங்கி வச்சிருக்கோம். அவர் சாப்பிட்டதும் அதை கழுவி பத்திரமா எடுத்து வச்சிருவோம்.நீங்க வந்து வாழை இலையில்தான் சாப்பிடுவேன்னு சொன்னதும் இலை இல்லைன்னு சொல்லவும் மனசு வரலே. உங்களை பட்டினியா போடவும் மனசு வரலே. அதான் என்னோட மாமனார் சாப்பிடுற இலையில் உங்களுக்கு சாப்பாடு போட்டுட்டு இப்போ பத்திரமா எடுத்து வைக்கிறேன்"னு சொல்லவும் இவனுக்கு சாப்பிட்ட சாப்பாடெல்லாம் தொண்டையிலே சிக்கிகிட்ட மாதிரி ஆகி போச்சு.
சரி. இந்த கருமத்தையும் காசியிலே போய் தொலைசிடுவோம்னு நினைச்சிகிட்டு படுத்து தூங்கினான். மறுநாள் எழும்பி நடக்க ஆரம்பித்தான். அன்றைக்கு பகலெல்லாம் நடந்துவிட்டு ராத்திரி ஒரு வீட்டு திண்ணையில் தங்கினான். அந்த வீட்டம்மா இவனை பார்த்ததும் "ஐயா சாப்பாடு சூடா இருக்கு. வந்து ஒரு வாய் சாப்பிட்டுட்டு படுங்க " என்றதும் நம்ம ஆள் முன்னெச்சரிக்கையா வாழை இலை வேண்டாம்னு சொல்லிட்டு, "தினமும் புழங்காத மண் பாத்திரம் இருந்தால் அதில் சாப்பாடு போடுங்க " என்றான்.
அந்த அம்மா ஒரு அறைக்குள் போய் ரொம்ப நேரம் தேடி துருவி ஒரு மண் பாத்திரத்தை கொண்டு வந்து அதில் இவனுக்கு சாப்பாடு வைத்தாள்.
திருப்தியா சாப்பிட்ட இவன் மண் பாத்திரத்தை கிணற்றடிக்கு கொண்டு போய் கழுவ ஆரம்பித்தான். கை தவறி கீழே விழுந்து மண் பாத்திரம் உடைஞ்சு போச்சுது . இதை பார்த்ததும் அந்த வீட்டில் இருந்த ஒரு கிழவி குய்யோ முறையோன்னு கத்த ஆரம்பிச்சிட்டுது .
"என் புருஷன் சாக கிடந்த கடைசி காலத்தில் இந்த பாத்திரத்தில்தான் அவர்
கை கழுவி வாய் கொப்பளிப்பார். என்னோட கடைசி காலத்துக்கு இது உதவும்னு பத்திரமா வச்சிருந்தேன். அதை இந்த பாவி இப்படி போட்டு உடைசிட்டானே"ன்னு அலறுச்சுது .
நம்ம ஆளுக்கு ஒரு மாதிரி ஆயிட்டுது . இருந்தாலும் இருக்கவே இருக்கு காசி. அங்கே போய் இந்த கருமத்தையும் தொலைச்சிடுவோம்"ன்னு நினைச்சிகிட்டு படுத்தான்.
மறுநாள் எழும்பி நடக்க ஆரம்பிச்சான். அன்னிக்கு ராத்திரி ஒரு வீட்டு திண்ணையில் தங்கினான். அந்த வீட்டிலிருந்த பாட்டி இவனை சாப்பிட சொன்னாள்.
இவன் முன்னெச்சரிக்கையா "இலை, பாத்திரம் எதுவும் வேண்டாம். நான் கையை நீட்டறேன். நீங்க கரண்டியாலே எடுத்து போடுங்க"ன்னு சொன்னதும் அந்த பாட்டியும் அதுமாதிரி செய்ய, வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு திண்ணையில் வந்து உட்கார்ந்தான். அங்கிருந்த ஒரு மாடபிறையில் வெத்திலை பாக்கு இருந்துச்சுது . பாட்டி நமக்குதான் வச்சிருக்கு போலிருக்கு என்று நினைச்சு இவன் பாக்கை எடுத்து வாயில் போட்டு கடித்தான். இவன் கடிச்சதும் பாக்கு உடை படுற சத்தம் வீட்டு உள்ளே இருந்த பாட்டிக்கு கேட்டது. பாட்டி குடுகுடுன்னு ஓடி வந்து "என்ன"ன்னு விசாரித்தாள்.
"ஒன்னுமில்லே. இங்கிருந்த பாக்கை எடுத்து வாயில் போட்டு கடிச்சேன். அந்த சத்தம்தான்"ன்னு நம்ம ஆளு சொல்ல,
"பரவாயில்லை. உங்க பல்லு ரொம்பவும் பலமாத்தான் இருக்கு. நானும் இந்த பாக்கை பத்து நாளா வாயிலே போட்டு கடிக்க முடியாமே எடுத்து எடுத்து வச்சிடுதேன். நீங்க ஒரே கடியிலே கடிச்சு வச்சிங்கன்னா நீங்க பலசாலிதான்"ன்னு பாராட்டு பத்திரம் வாசிச்சா.
நம்ம ஆளு ரொம்பவும் நொந்து போயிட்டான். "போதும்டா சாமி காசிக்கு போன லட்சணம்"ன்னு முடிவு பண்ணிட்டு மறுநாள் தன்னோட ஊருக்கு திரும்ப ஆரம்பிச்சிட்டான். இதுதான் ஆசாரம் பார்த்தவன் காசிக்கு போன கதை "

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete