Monday, 26 June 2017

வம்பு சண்டைக்கு வருபவர்களை புன்னகையோடு எதிர்கொள்............

ஒருநாள் ஸ்ரீகிருஷ்ணர், அவரது அண்ணன் பலராமர், அர்ஜுனன் ஆகிய மூவரும் ஒரு வனத்தின் வழியே சென்றனர். இரவாகிவிட்டதால் அங்கேயே தங்கிவிட்டு காலையில் செல்லலாம் என்று முடிவெடுத்தனர். வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் ஒவ்வொருவராக காவல் இருக்க முடிவு செய்தனர்.
அதன்படி, கிருஷ்ணரும், பலராமரும் தூங்கச் செல்ல அர்ஜுனன் காவல் இருந்தான். அப்போது புகை மண்டலம் சூழ்ந்து, அதிலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது. அது அர்ஜுனனை தாக்கியது.
அவன் அதனுடன் கோபமாக சண்டையிட்டான். அர்ஜுனனின் கோபம் அதிகப் படப்பட, அதன் உருவம் பூதாகரமாக மாறியது. பின் அது அர்ஜுனனை பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது.
இரண்டாம் ஜாமம் தொடங்கியது. இப்போது பலராமர் காவல் இருக்க அர்ஜுனன் தூங்கச் சென்றான். அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி பலராமரையும் தாக்கத் தொடங்கியது. பலராமரும் அதனோடு சண்டையிட்டார். பலராமரின் கோபம் அதிகப் படப்பட, அதனுடைய பலமும், உருவமும் பெரிதாகியது. பின் அது அவரையும் தாக்கிவிட்டு மறைந்து விட்டது.
மூன்றாம் ஜாமம் தொடபிகியது. ஸ்ரீகிருஷ்ணர் காவலிருக்க பலராமர் தூங்கச் சென்றார், அப்போது அப்பொல்லாத உருவம் மீண்டும் தோன்றியது.
அதைப் பார்த்த ஸ்ரீகிருஷ்ணர் கடகடவென சிரித்தார். "என் சிரிக்கிறாய்..?" எனக் கேட்டது அவ்வுருவம். "உன் தூக்கிய பற்களையும், முட்டைக் கண்களையும் கண்டுதான் என்றார். அது தன்னை கேலி செய்வதைக் கண்டு ஆத்திரத்தோடு தாக்கியது.
ஸ்ரீகிருஷ்ணர் புன்னகையோடு அதனிடம் சண்டையிட்டார். கிருஷ்ணர் சிரிக்க சிரிக்க அதன் பலமும், வடிவமும் குறைந்துக் கொண்டே வந்தது.
கடைசியில் அவ்வுருவம் சிறிய புழுவாக மாறி நெளிந்தது. கிருஷ்ணர் அதை ஒரு துணியில் முடிந்து வைத்தார்,
விடிந்தது. பலராமரும் அர்ஜுனனும் எழுந்தனர். இருவரும் இரவில் ஒரு உருவம் வந்து தாக்கியதைப் பற்றி கூறினர். அப்போது கிருஷ்ணர் தான் துணியில் முடிந்து வைத்திருந்த புழுவைக் காட்டி, "நீங்கள் சண்டை போட்ட உருவம் இதுதான்" என்றார்.
"நீங்கள் அதனுடன் சண்டையிட்டபோது மிகவும் கோபபபட்டீர்கள். அதனால் அதன் பலமும், உருவமும் அதிகரித்தது. நான் சிரித்துக் கொண்டே சண்டையிட்டதால் அதன் பலமும், உருவமும் குறைந்து அது புழுவாக மாறிவிட்டது".
"வம்பு சண்டைக்கு வருபவர்களை புன்னகையோடு எதிர்கொண்டால், அவன் புழுவுக்கு சமமாகிவிடுவான்".
கிருஷ்ணரின் இந்த உபதேசம் நமக்கும் பல சூழ்நிலைகளில் பொருந்தும். பல விஷயங்களுக்கு நாம் ரியாக்சன் செய்யாமலிருந்தாலே, அது பிரச்சனையாகாமல், பிசுபிசுத்துப் போய் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும்

2 comments: