Tuesday, 11 July 2017

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’

‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்று சொல்வார்கள். இதை சிலர் தவறாக புதன் கிழமை என்று அர்த்தம் செய்து கொண்டி ருக்கிறார்கள். அதாவது,
இந்த இடத்தில் பொன் என்பது தன, புத்திரகாரகனான குருவைக் குறிக்கும். குருவிற்கு, தனம் எனும் பணத்தையும், புத்திரயோகம் என்னும் குழந்தை செல்வத்தையும் தரக்கூடிய ஆற்றல் உள்ளது. ஆனால், பொன்னவன் என்று அழைக்கப்படும் குருவின் அருளுடன், புதனின் பலமும் சேருவது மிக அவசியம்.
ஏனென்றால் ஒருவர் எவ்வளவுதான் பொன், பொருள், செல்வம் ஈட்டினாலும் அதை சரியான வகையில் தக்க வைத்து ஒன்றுக்கு பத்தாக பெருக்கி, அந்தப் பணத்தை சரியான வகையில் முதலீடு செய்து கணக்கு, வழக்கு பார்க்க, புதனின் பலம் அவசியம் தேவை.
அதேபோல் குழந்தை செல்வத்தை தருபவர் புத்திரகாரகனான குரு. என்றாலும் அந்தக் கருவை உற்பத்தி செய்வதற்கு உறுதுணையாகவும், ஆரோக்கியமான தாம்பத்திய உறவுக்கு முக்கிய அம்சமான நரம்பு மண்டலத்தை ஆள்பவர் புதன். இவருடைய பரிபூரண அருள் இருந்தால்தான் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதை வைத்துதான் பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்காது என்ற சொல் வழக்கு உண்டானது.
புதனின் அருட்கொடை இது போன்றே எல்லா விஷயங்களுக்கும் தேவைப்படுகிறது. மூளை, நரம்பு மண்டலங்களின் செயலாற்றல் இல்லாமல் மனிதனால் எதுவும் செய்ய முடியாது. ‘எல்லாமே புதன்தான் என்றால் மற்ற கிரகங்களுக்கு வேலை இல்லையா?’ என்று கேட்கத் தோன்றும். ஆம், உண்மைதான். எல்லா கிரகங்களின் காரகத்திலும் புதனின் ஊடுருவல் இருக்கும். உதாரணத்திற்கு சினிமாத்துறைக்கு முக்கிய கிரகம் சுக்கிரன்.
ஆனால், புதனின் அருள் இருந்தால்தான் டைரக்ஷன், நடிப்பு, வசன உச்சரிப்பு, நகைச்சுவை, பலகுரலில் பேசும் திறமை என்று எல்லாம் வெளிப்படும். இதைப் போன்றே எல்லா துறைகளிலும் புதனின் பங்கு மிக முக்கியமானதாகும். சேரும் இடம், பார்க்கும் இடம், இருக்கின்ற ராசிக்கு தக்கவாறு, புதன் ஜாதகரை மாற்றிவிடுவார்.

No comments:

Post a Comment