Wednesday 19 July 2017

தர்மம்

தர்மம்
பாண்டவர்களின் பன்னிரண்டு ஆண்டுகால வனவாசம் முடியும் காலம். அப்போது ஒருநாள் வனத்தில் கடுமையாக அலைந்து திரிந்த பாண்டவர்களுக்கு கடும் வறட்சி ஏற்பட்டது. குடிக்க தண்ணீர் வேண்டியிருந்தது. அருகில் எங்காவது ஓடையோ, குளமோ தென்பட்டால் நீர் கொண்டுவர வயதில் இளையவனான சகாதேவனை அனுப்பினார் தருமபுத்திரர். தண்ணீர் பிடிக்கச் சென்ற சகாதேவன் நெடுநேரமாகியும் வராது போகவே, நகுலனை அனுப்பினார். நகுலனும் நெடுநேரமாகியும் வரவில்லை. இப்படியே அர்ஜுனன், பீமன் ஆகியோரை அனுப்பி யும் எவருமே திரும்பிவரவில்லை.
மாலை நேரம். தம்பிகள் திரும்பவில்லையே என்கிற ஆதங்கத்தில் பதட்டத்தோடு தருமர் தேடிச்செல்ல, வழியில் ஒரு குளம் தென்பட்டது. குளக்கரையில் பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் என நால்வரும் இறந்துகிடந்தனர்.
அதைக்கண்டு திகைத்துப்போன தருமபுத்திரர், “”யார் செய்த அடாத செயல் இது!” என்று ஓலமிட்டார்.
அப்போது ஓர் அசரீரி எழுந்தது. “”தர்மபுத்தி ரரே! நானொரு யக்ஷன்.
இக்குளம் எனக்குச் சொந்தமானது. யார் தண்ணீர் எடுக்க வந்தாலும் அல்லது தனது தாகத்தைத் தீர்த்துக்கொள்ள வந்தாலும் நான் சில கேள்விகளைக் கேட்பேன்.
அதற்கு தக்க பதில் கூறினால் மட்டுமே தண்ணீர் கிடைக்கும்; தவறாக பதில் சொன்னால் மரணம்தான்…” என்றான் யக்ஷன்.
அப்போதுதான் தன் சகோதரர்கள் தவறான பதில் கூறி, மாண்டது புரிந்தது தர்மருக்கு!
“”நான் விடையளிக் கிறேன்” என்றார் தர்மர்.
யக்ஷன் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தான்.
“”எது தினமும் சூரியனை உதிக்கச் செய்வது?”
“”பிரம்மம்.”
“”மனிதன் எதில் நிலைத்து நிற்கிறான்?”
“”சத்தியத்தில்.”
“”மனிதன் எதனால் சிறப்படைகிறான்?”
“”மன உறுதியால்.”
“”மனிதன் எதனால் எப்போதும் துணை யுள்ளவனாகிறான்?”
“”தைரியமே மனிதனுக்குத் துணை.”
“”எந்த சாஸ்திரம் படித்து மனிதன் புத்திமானாகிறான்?”
“”இது சாஸ்திரத்தால் அல்ல; பெரியோர்களைப் பொறுத்தே.”
“”பூமியைவிட பொறுமைமிக்கவர் யார்?”
“”தாய்.”
“”ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தவர் யார்?”
“”தந்தை.”
“”காற்றைவிட வேகமாகச் செல்வது எது?”
“”மனம்.”
“”புல்லைவிட அற்பமானது எது?”
“”கவலை.”
“”மனிதனுக்கு தெய்வத்திடமிருந்து கிடைத்த நன்மை எது?”
“”மனைவி.”
“”தேசாந்திரம் போகிறவனுக்கு யார் துணை?”
“”வித்தை.”
“”சாகப் போகிறவனுக்கு யார் துணை?”
“”தர்மம். அதுதான் அவன்கூட பயணம் செல்லும்…”
“”பாத்திரங்களில் எது பெரிது?”
“”அனைத்தையும் தன்னுள்ளே அடக்கிக்கொள்ளும் பூமி.”
“”எது சுகம்?”
“”சுகம் நல்லொழுக்கத்தில் நிலைபெறுகிறது.”
“”மனிதன் எதைவிட்டால் துயரமில்லை?”
“”கோபத்தை.”
“”எதை இழந்தால் மனிதன் தனவானாகிறான்?”
“”ஆசையை…”
“”மகிழ்ச்சியுடன் வாழ்பவர் யார்?”
“”கடன் வாங்காதவர்.”
“”வேகம் மிக்கது எது?”
“”நதி.”
“”வெற்றிக்கு அடிப்படை எது?”
“”விடாமுயற்சி.”
“”உலகில் மிகச்சிறந்த தர்மம் எது?”
“”கொல்லாமை.”
“”உலகெங்கும் நிறைந்து நிற்பது எது?”
“”அஞ்ஞானம்.”
“”முக்திக்குரிய வழி எது?”
“”பற்றினை முற்றும் விலக்குதல்.”
“”முக்திக்குத் தடையாக இருப்பது எது?”
“”"நான்’ என்னும் ஆணவம்.”
“”எது ஞானம்?”
“”மெய்ப்பொருளை அறிதல்.”
“”எப்போதும் நிறைவேறாதது எது?”
“”பேராசை.”
“”எது வியப்பானது?”
“”நாள்தோறும் பலர் இறப்பதைக் கண்டும், தான் என்றென்றும் வாழ்ந்திருப்போம் என்று மனிதன் நினைக்கிறானே, அதுதான்.”
“”பிராமணன், உயர்வானவன் என்பது குலத்தினாலா? ஒழுக்கத்தினாலா? கற்ற பல சாஸ்திரங்களினாலா?”
“”ஒழுக்கத்தினால் மட்டுமே உயர்ந்தவனாகிறான். நான்கு வேதங்கள் கற்றவனாயிருந்தாலும், கெட்டநடத்தை உள்ளவன் பிராமணன் அல்ல; இழிந்தவனே…”
“”அற்புதம் தர்மபுத்திரரே… உமது பதில்கள் அபாரம். ஆனால் இறந்த உன் சகோதரர்களில் ஒருவனை மட்டும் நான் உயிர்ப்பிக்கிறேன். உமக்கு யார் வேண்டும்?”
“”நகுலன்…” சற்றும் யோசியாமல் பதிலளித்தார் தர்மர்.
அப்போது யக்ஷன் தர்மனுக்கு காட்சிதந்து, “”நகுலனா? புஜபல பராக்கிரமசாலி பீமனையோ, அழகனும் திறமையுள்ளவனுமான அர்ஜுனனையோ, ஜோதிடத்தில் மட்டுமின்றி சகல சாஸ்திரங்களையும் அறிந்த சகாதேவனையோ கேட்காமல் நகுலனை ஏன் கேட்டீர்? நகுலனைத் தவிர மற்ற மூவரும் உமக்குத் துணையில்லையா?”
“”யக்ஷனே, தருமமே மனிதனைப் பாதுகாக்கிறது. பீமனோ அர்ஜுனனோ அல்ல. தருமத்தைப் புறக்கணித்தால் அது மனிதனைக் கொல்லும். நான் நகுலனை மட்டும் உயிர்ப்பிக்க வேண்டிய காரணம் உள்ளது. என் தந்தைக்கு குந்தி, மாத்ரி என்று இரண்டு மனைவியர். குந்திக்கு மகனாக நானும், பீமனும், அர்ஜுனனும் பிறந்தோம். மாத்ரிக்கு, நகுலன், சகாதேவன் ஆகியோர் பிறந்தனர். கடைசி காலத்தில் குந்திக்கு இறுதிச் சடங்கை செய்ய நான் இருக்கிறேன். ஆனால் மாத்ரிக்கு இறுதிச் சடங்கு செய்ய அவள் முதல் மகன் வேண்டாமா? அதனால் தான் நகுலனை உயிர்ப்பிக்குமாறு கேட்டேன்…”
“”பாரபட்சமற்ற தர்மனே! உன் பதில் எனக்கு திருப்தியளித்துவிட்டது. தன் அன்பிற் குரிய சொந்தத் தம்பிகளை உயிர்ப்பிக்குமாறு கேட்காமல், சிற்றன்னையின் மைந்தனை உயிர்ப்பிக்குமாறு கேட்டாயே- நீயல்லவோ தர்மதேவன்…” என்று சொல்லி அனைவருக்கும் உயிர் கொடுத்தான் அந்த யக்ஷன்.
ஐவரும் அந்த யக்ஷனை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கியபோது, யக்ஷன் எமதர்மராஜனாக நின்றிருந்தான். வியப்புடன் நின்றிருந்த பஞ்சபாண்டவர்களைப் பார்த்து எமதர்மன் சொன்னான்:
“”தர்மபுத்திரரே… நான் எமன்தான். ஆனால் எந்தெந்த உயிர்களை எப்படி எடுத்துச் செல்வது? அதில் பாவி யார்- புண்ணியன் யார் என்பதை சரியாக செய்துவந்ததால் என்னை எமதர்மராஜன் என்பர். தர்மத்தின்படி நடந்துவரும் என்னைப்போல் பெயர் பெற்ற உன்னை சோதிக்கவே நான் யக்ஷனாக மாறி வந்தேன். என் பெயர் இருக்கும்வரை நீயும் தர்மமாகவே வாழ்வாய்…” என்று வாழ்த்திவிட்டு எமன் மறைந்தான்.
பெற்ற தாய்- தந்தையை, பெரியோர்களை, மகிழ்விப்பவனே உலகில் தர்மனாகிறான்.

2 comments: