Thursday, 13 July 2017

*சீதை கொடுத்த சாபம் என்ன?*

*சீதை கொடுத்த சாபம் என்ன?*
நீங்கள் சந்தோஷமாக , நிம்மதியாக சௌபாக்கியத்தோடு இருக்கின்றீர்களா? "இல்லை" என்றால் உங்களுக்கு பித்ருக்களின் ஆசி கிடைக்கவில்லை, அல்லது அவர்களின் ஆசி கிடைக்கும்படி நீங்கள் நடந்துகொள்ளவில்லை என்று அர்த்தம்.
மறைந்த உங்கள் முன்னோர்கள் எப்போதும் உங்கள் நினைவாகவே இருப்பார்கள். அவர்களை நினைத்து, எல்லா நலனும் கிடைக்கவேண்டும் என்று நினைத்தாலே போதும் அவர்களின் ஆசி உங்களுக்குக் கிடைத்துவிடும். மறைந்த நம் முன்னோர்களின் திதி வரும் நாளில், அவர்களுக்கு நாம் சிராத்தம் கொடுக்கவேண்டும். சிரத்தையுடன் செய்யவேண்டும் என்பதால்தான் சிராத்தம் என்று சொல்லப்படுகிறது. அன்று அவர்களுக்காகப் படைக்கப்படும் உணவுகளை உண்பதற்காகப் பசியோடு காத்திருப்பார்கள். காக்கை உருவத்தில் வந்து நாம் படைத்த உணவு வகைகளை அவர்கள் உண்பார்கள் என்பது நம்பிக்கை. அன்றைய தினத்தில் சில நிமிடங்களாவது நம் முன்னோர்களை நினைத்து, பிரார்த்தனை செய்யவேண்டும். அவர்கள் நிச்சயம் நம்முடைய பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள்.
ஆண்கள் மட்டும்தான் திதி கொடுக்கவேண்டும் என்ற சமூக நியதி உண்டு. ஆனால், ராமாயணத்தில் சீதையே திதி கொடுத்திருக்கிறாள். அதுவும் தன்னுடைய மாமனார் தசரதருக்கு! தசரதருக்குத் திதி கொடுக்க ராமன் இருக்கும்போது, சீதை திதி கொடுக்கவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?
இந்தக் கேள்வியின் பின்னணியில் அமைந்திருக்கும் சம்பவம்...
ராமபிரான், மனைவி சீதா, தம்பி லட்சுமணன் மூவரும் வனவாசம் சென்ற காலம் அது. அச்சமயத்தில் கயா (பீகார்) பகுதியில் இருந்த ஒரு வனத்தின் வழியாக நடந்துகொண்டிருந்தனர். மரங்களும் மலைகளும் நிறைந்த செழிப்பான காடு. அருகில் கங்கையைப் போல பல்குணி ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அன்றைய நாள் தசரத மன்னரின் நினைவு நாள். அதிகாலை நேரமாகிவிட்டதால் பல்குணி நதிக்கரையிலேயே தந்தைக்குத் திதி கொடுத்துவிடலாம் என்று முடிவெடுத்தார் ராமர்.
தன் தம்பியை அழைத்து, "லட்சுமணா, நீ அருகில் இருக்கும் கிராமத்திற்குச் சென்று, சிராத்தத்துக்குத் தேவையான தானியங்கள், வளமான தர்ப்பைகளை எடுத்து வருவாயாக" என்று கூறினார். லட்சுமணனும் அண்ணன் சொல்லைக் கேட்டு கிராமத்திற்கு விரைந்தான். சீதை காட்டில் இருக்கும் பழங்களைப் பறித்து வந்தாள். ராமனோ ஆற்றில் நீராடிவிட்டுத் திதி செய்வதற்காக இடத்தைச் சுத்தப்படுத்தினார்.
சிராத்த நேரம் நெருங்கிவிட்டது, கிராமத்திற்குச் சென்ற லட்சுமணன் இன்னும் திரும்பவில்லையே,பித்ருக்கள் உணவிற்காகக் காத்திருப்பார்களே என்று கவலையுடன் சீதாவை ஆற்றங்கரையில் அமரவைத்துவிட்டு தன் தம்பியைத் தேடி தானும் கிராமத்திற்குச் சென்றார். நேரம் சென்றுகொண்டிருந்தது, தனியாக நின்றுகொண்டிருந்தாள் சீதா, கிராமத்திற்குச் சென்ற இருவரும் இன்னும் திரும்பவில்லையே, சிராத்தப் பொருள்களைக் கொண்டுவந்தால்தானே சமைக்க முடியும் என்று மிகவும் கலக்கத்துடன் இருந்தாள். தான் பறித்து வந்த பழத்தைச் சுத்தப்படுத்தினாள், அருகில் இருக்கும் தாழம்பூப் புதரிலிருந்து தாழம்பூவைப் பறித்து இலையில் வைத்தாள்.
இன்னும் சற்று நேரத்தில் அசுர கணம் வந்துவிடுமே, அதற்குள் தன்னுடைய மாமனாருக்கு உணவைப் படைக்காவிட்டால் பட்டினியாக இருப்பாரே என்று கலங்கினாள். வேறுவழியின்றி, இலையில் தான் பறித்து வந்த பழங்களை நைவேத்தியமாக வைத்து தன் மாமனாரை நினைத்து மனதார பிரார்த்தனை செய்தாள். அப்போது வானில் இருந்து ஒரு குரல் ஒலித்தது, "சீதையே, நீ படைத்த உணவை நான் ஏற்றுக்கொண்டேன். நலமுடன் வாழ்க" என்றது. சீதைக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. ஆயினும், 'தான் முறையாகப் பூஜை செய்யவில்லை, அறுசுவை உணவையும் படைக்கவில்லை, ராமனும் சிராத்தத்தில் பங்கெடுக்கவில்லை, அப்படியிருக்க இது எப்படி சாத்தியம்?' என்று குழம்பி, "நன்றி, நீங்கள் யார் என்பதை நான் தெரிந்துகொள்ள ஆசைப்படுகின்றேன்" என்று கூறினாள். அவள் ஆசையை நிறைவேற்ற தசரதனே எதிரில் தோன்றி, "சீதையே நான்தான் உன் மாமனார்" என்று கூறி ஆசிவழங்கி மறைந்தார்.
சீதா தேவிக்கு மிகுந்த சந்தோஷம், ஆயினும் தான் கண்ட இந்த அற்புதக்காட்சியை யாரும் நம்ப மாட்டார்களே, ராமனும் லட்சுமணனும் கூட நம்புவார்களா என்பது சந்தேகம்தான், இருப்பினும் தான் பறித்துவந்த தாழம்பூவும், பல்குணி ஆறும், அருகில் இருக்கும் பசுவும் சாட்சி சொல்லும் என்று தனக்குள்ளேயே கூறிக்கொண்டாள்.
"காட்டிலிருந்து கிராமம் தொலைவில் இருப்பதால், தானியங்கள், கனி, ஆகியற்றைக் கொண்டுவரத் தாமதம் ஆகிவிட்டது, சிராத்தம் செய்ய நேரம் குறைவாகத்தான் இருக்கின்றது, உடனே உணவைத் தயார் செய்வாயாக.." என்று சீதாவை நோக்கி ராமன் கூறினார். சீதா தயங்கியபடியே, நடந்த அனைத்தையும் கூறினாள். சீதா கனவு கண்டிருப்பாள் என்று நினைத்துக்கொண்டு சீதை கூறியதை ராமனும் லட்சுமணனும் நம்ப மறுத்தனர்.
''சாட்சிக்கு வேண்டுமெனில் பல்குணி நதியையும், பசுவையும், தாழம்பூவையும் கேட்டுப்பாருங்கள்'' என்றாள் சீதை. ஆனால், ராமனுக்கு பயந்து பசுவும், பல்குணியும், தாழம்பூவும் சாட்சி கூறவில்லை. சீதா கூறியதை நம்பாமல், திதி கொடுக்கத் துவங்கினார் ராமன். அப்போது வானில் இருந்து பித்ருக்களின் குரல் கேட்டது, "ராமா. நிறுத்து சீதா பரிமாறிய பழங்களை நாங்கள் ஏற்கெனவே ஏற்றுக்கொண்டோம், திருப்தியும் அடைந்துவிட்டோம்" என்றது.
ராமன் சீதா கூறியதை நம்பாமல் போனதற்கு மிகவும் வருந்தினார். சீதாவோ, சாட்சி கூறாமல் அமைதியாக இருந்த பல்குணி நதியைப் பார்த்து, ''இனி நீ பூமிக்கு மேலே செல்லாமல், பூமிக்குக் கீழே யார் கண்ணுக்கும் தெரியாமல் ஓடுவாயாக, தாழம்பூவே இனி நீ ஈஸ்வரன் பூஜைக்குப் பயன்படாமல் போவாயாக, பசுவே நீ வாயைத் திறந்து உண்மையைக் கூறாததால் உன் முகத்தில் வசிக்கும் லட்சுமி தேவி பின்புறம் செல்லட்டும் என்று சபித்தாள். அதன் படியே ஆயின. எனவே நம் பித்ருக்களை அன்போடு அழைத்தாலே உங்களுக்காக ஓடி வருவார்கள். அவர்களை மறக்காமல் நினைவில் வைத்திருப்பதே அவர்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டாகும்.

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete