Thursday, 13 July 2017

கடவுள் vs நான்

ஓம் நமோ நாராயணாய
உருகி உருகி நான் பிராத்திக்கும் கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது
நான் : கடவுளே நான் உங்க கிட்டே ஒரு விளக்கம் கேட்கலாமா?
கடவுள் : தாராளமாக கேள்
நான் : பொறுமையா கோபப்படாமல் பதில் சொல்வீர்களா?
கடவுள் : சத்தியமாக!
நான் : இன்னைக்கு ஏன் எனக்கு இப்படி ஒரு மோசமான நாளை கொடுத்தீங்க?
கடவுள் : என்னப்பா சொல்ற நீ?
நான் : எப்பவும் சரியா எழுந்திருக்கிற நான் இன்னைக்கு எழுந்திரிச்சதே லேட் !
கடவுள் : ஆமாம்! அவசரத்துல என்னை கூட கும்பிடாம ஆபீஸ்க்கு புறப்பட்டாய்.
நான் : கிளம்பினதே லேட் இதுல என் பைக் வேற பஞ்சர் ஆகியிருந்தது.
கடவுள் : ஆமாம் எனக்கு தெரியும்.
நான் : சரி! பஸ்ல போலாம்னு பஸ்ஸை பிடிச்சா வழியில ஏதோ ஆக்சிடெண்ட் போல ஒரே டிராஃபிக் ஜாம். ஆபீஸ்க்கு ஒரு மணிநேரம் லேட்.
கடவுள் : ஆமாம்! தெரியும்.
நான் : மதியம் சாப்பிட கொஞ்சம் லேட் ஆகிடிச்சு அதுக்குள்ளே கேண்டீன்ல சாப்பாடு காலியாயிடுச்சு கடைசீயில பசிக்கு ஏதோ கிடைச்சதை அரைகுறையா சாப்பிட்டுட்டு வந்தேன்.
கடவுள் : ஆமாம் அதுவும் தெரியும்.
நான் : வங்கியில் பர்சனல் லோன் அப்ளை பண்ணியிருந்தேன். அது விஷயமா ஒருத்தர் கிட்டே ஃபோனை எதிர்பார்த்திருந்தேன். சாயந்திரம் வீட்டுக்கு திரும்பும்போது அவர் கிட்டேயிருந்து எனக்கு கால் வந்தது. பேட்டரியில சார்ஜ் இல்லாம மொபைல் அந்த நேரம் பார்த்து ஆஃப் ஆயிடிச்சு.
கடவுள் : ஆமாம் தெரியும்.
நான் : அதை பிடிச்சி! இதை பிடிச்சி! முட்டி மோதி வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் ரூம்ல ஏ.சி.யில உட்கார்ந்து டி.வி.யை பார்த்து ரிலாக்ஸ் பண்ணலாம்னா ஏ.சி. ரிப்பேர் ஆகி வேலை செய்யல
இன்னைக்கு எனக்கு எதுவுமே சரியில்லையே ஒரு நாள் உங்களை கும்பிட மறந்ததுக்கு இவ்ளோ கஷ்டங்களா?
(கடவுள் பலமாக சிரிக்கிறார். சில வினாடிகள் கழித்து! பேச ஆரம்பிக்கிறார்)
கடவுள் : இன்னைக்கு உன் கர்மாவின் படி மிகவும் மோசமான நாள். நீ காலை அசந்து தூங்கிகிட்டிருக்கும்போதே மரணதேவன் உன்னை நோக்கி வந்துட்டான். அவன் கூட வாக்குவாதம் பண்ணி உன்னை காப்பாற்ற வேண்டி உன்னை கொஞ்சம் அதிக நேரம் தூங்க வெச்சேன்.
நான் : (அதிர்ச்சியுடன்) ஓ
கடவுள் : உன் பைக்கை பஞ்சராக்கினேன். ஏன்னா! நீ ஆபீஸ் போகும்போது நீ போற ரூட்ல பிரேக் பிடிக்காம தாறுமாறா ஓடுற வேன் ஒன்னு உன் மேல இடிக்கிறதா இருந்தது. அந்த வேன் ஆக்சிடெண்ட்டாகி தான் டிராபிக் ஆச்சு. நீ பைக்ல போயிருந்தா அந்த வேன் மரணதேவன் கணக்குப்படி உன் மேல இடிச்சிருக்கும்.
நான் : (அடக்கத்துடன்) ஓ
கடவுள் : மதியம் உனக்கு சாப்பாடு கிடைக்காம போனதுக்கு காரணம் கடைசீயா மிச்சமிருந்த குழம்புல எலிக்கு வெச்சிருந்த எலி பாஷாணம் எப்படியோ தவறி விழுந்துடிச்சு! யாரும் அதை கவனிக்கல அதை நீ சாப்பிட்டிருந்தா என்னாகியிருக்கும்?
நான் : (கண்கலங்கியபடி) ம்ம்
கடவுள் : சாயந்திரம் உன் அலைபேசி சுவிச் ஆப் ஆனதுக்கு காரணம்! அந்த நபர் உனக்கு தவறான வாக்குறுதிகள் கொடுத்து இக்கட்டில் மாட்டிவிட இருந்தார். எனவே அதிலிருந்து காப்பாற்ற வேண்டி உன் ஃபோனை செயலிழக்கச் செய்துவிட்டேன்.
நான் : ம்ம்
கடவுள் : அப்புறம் அந்த ஏ.சி. மெஷின் எர்த் கோளாறு ஏற்பட்டு அதில் முறையற்ற முறையில் கரண்ட் வந்துகொண்டிருந்தது. ஒருவேளை முகம் கழுவிக்கொண்டு ஈர கைகளுடன் எப்போதும் போல நீ சுவிச்சை தொட்டிருந்தால் அந்த கணமே தூக்கி எறியப்பட்டிருப்பாய், ஆகையால் அதை செயலிழக்கச் செய்தேன்.
என்னை வணங்க மறந்ததால் அன்று முழுதும் நீ சோதனையை சந்தித்தாய் என்று என்னை தவறாக நினைத்துகொண்டாய். ஆனால் அனுதினமும் நீ என்னை வணங்கி வந்த காரணத்தால் நீ என்னை மறந்த அன்றும் கூட நான் உன்னை காக்க மறக்கவில்லை.
நான் : இப்போ புரிகிறது இறைவா! என் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பும் அக்கறையும். இது புரியாமல் உங்களை ரொம்பவும் நிந்தித்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்.
கடவுள் : மன்னிப்பு கேட்காதே! என்னை நம்பு, எப்போதும் எந்த சூழ்நிலையிலும். அது போதும்!
நான் : நிச்சயமாக
கடவுள் : நீ திட்டமிடுவதை விட உனக்காக நான் திட்டமிடுவது எப்போதும் சரியாகவே இருக்கும்.
நான் : இனி நிச்சயம் உங்களை சந்தேகப்படமாட்டேன். உங்கள் அருளை சந்தேகப்படமட்டேன். கண்ணை இமை காப்பது போல ஒவ்வொரு கணமும் நீங்கள் என்னை காப்பதை புரிந்துகொண்டேன்.
கடவுள் : என்னை நம்பியிருப்பவர்களை நான் என்றும் கைவிடுவதில்லை !

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete