Monday 24 September 2018

வளைகாப்பு!

வேப்பிலைக் காப்பு, கண்ணாடி வளையல், அறுகரிசி படையல்... வளைகாப்பின் அறிவியல் பின்னணி!

ளைகாப்பு! கர்ப்பிணிப் பெண்களுக்குகாகச் செய்யப்படும் ஒரு சடங்கு. இதை 'சீமந்தம்' என்றும் கூறுவர். வளைகாப்பு நிகழ்வானது பெரும்பாலும் கருவுற்ற 7-வது மாதத்தில் செய்யப்படுகிறது. வளைகாப்பு நடத்தப்படுவதற்குப் பின்னால் உள்ள தேவையையும், அதனால் கர்ப்பிணிப் பெண்களுக்கு உண்டாகும் நன்மைகளைப் பற்றியும் விரிவாகக் காண்போம்.
வளைகாப்பு நடத்தப்படுவதன் நோக்கம்:
குடும்பத்தினர் மட்டும் அல்லாமல் உறவினர்கள், நண்பர்கள் சூழ வளைகாப்பு நடத்தப்படும்போது கருவுற்ற பெண்ணுக்கு ஒரு மன தைரியம் உண்டாகிறது. மேலும் வளைகாப்பு நிகழ்வின்போது கருவுற்ற பெண்ணின் கையில் வேப்பிலைக் காப்பு கட்டுவர். இது வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளால் பாதிக்கப்படாமல் காக்கின்றது. வளைகாப்பின்போது கையில் 'கண்ணாடி வளையல்' அணிவிக்கப்படுகிறது. அணிவிக்கப்பட்ட வளையல்கள் உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இதன் நோக்கமே எந்த ஒரு செயலையும் அவசரம் இல்லாமல் நிதானமாகச் செய்யவேண்டும் என்பதற்காகத்தான்.
மேலும் கருவில் இருக்கும் சிசுவானது உருவான 20 வாரங்களுக்குப் பின்பு கேட்கும் திறனைப் பெறுகிறது. இதனாலே வளையல் அணிவிக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.
வளைகாப்பு செய்யப்படும் முறை:
பெரும்பாலும் 7 அல்லது 9 ஆம் மாதத்தில், ஓர் சுபமுகூர்த்த நாளன்று வளைகாப்பு நிகழ்ச்சியானது நடைபெறும்.
கருவுற்ற பெண்ணை சிறப்பாக அலங்கரித்து, அவளுடன் அவள் கணவனையும் அழைத்து வந்து அமரச் செய்வார்கள்.
வளைகாப்பு நடக்கும் இடத்தில் பூக்கள், பல்வேறு வகையான பழவகைகள், சந்தனம், குங்குமம், மஞ்சள், கண்ணாடி வளையல்கள், மேலும் பல்வேறு வகையான இனிப்பு வகைகளும் வைக்கப்பட்டிருக்கும். சர்க்கரைப் பொங்கல், லெமன் சாதம், தேங்காய் சாதம், நெய்புலாவ் சாதம் போன்ற பல்வேறு விதமான சாதவகைகளும் இருக்கும்.
அடுத்தாக கருவுற்ற பெண்ணின் தாய்மாமன் தேங்காய் உடைப்பார்.
பின்னர் கருவுற்ற பெண்ணின் கணவர். அந்தப் பெண்ணுக்கு மாலை அணிவித்து , நெற்றியில் குங்குமம் வைப்பார்.
சந்தனத்தை இரு கைகளிலும், கன்னங்களிலும் பூசுவார்.
மேலும் இருகைகளிலும் வளையல் அணிவித்து, பன்னீர் தெளிப்பார்.
அடுத்ததாக அறுகரிசி படைத்து தன் மனைவியையும், கருவில் இருக்கும் குழந்தையையும் வாழ்த்துவார்.
அதற்குப் பின்னர் பெண்ணின் தாய், கருவுற்ற பெண்ணுக்கு இனிப்பு பண்டங்களை ஊட்டுவார். பின்பு அவரும் அறுகரிசி இட்டு ஆசிர்வாதம் செய்வார்.
இதே போன்று உறவினர்கள், நண்பர்கள் என வந்திருக்கும் அனைவரும் சந்தனம், குங்குமம் வைத்து பன்னீர் தெளித்து, அறுகரிசி இட்டு ஆசிர்வதிப்பர்.
கடைசியாக பெண்ணுக்கு ஆரத்தி எடுத்து திருஷ்டி கழிப்பார்கள்.
வந்திருந்த அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், வளையல் வழங்கி வருகை தந்ததற்கு மரியாதையை தெரிவிப்பர்.
வருகை புரிந்தவர்களும் தங்கள் வசதிக்கேற்ப பணத்தினை பெண்ணுக்கு வழங்கி ஆசீர்வதிப்பார்கள்.
வளைகாப்பு செய்வதால் ஏற்படும் நன்மைகள்:
வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுவதால் கருவுற்ற பெண்ணுக்கு பிரசவம் பற்றிய பயம் நீங்கி மன தைரியம் பிறக்கிறது.
இதனால் பிறக்கும் குழந்தையும் மன தைரியத்துடன் பிறக்கும்.
வளைகாப்பில் அணிவிக்கப்படும் வளையலானது கருவில் இருக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பு உணர்வை அளிக்கக் கூடியது.
வளையல்களின் ஒலி குழந்தையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
வளைகாப்பு நிகழ்வில் வழங்கப்படும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளானது கருவுற்ற பெண்ணுக்கும், கருவில் வளரும் குழந்தைக்கும் நல்ல ஆரோக்கியத்தைத் தருகிறது.
வளைகாப்பு சடங்கு நடைபெறும் கோயில்கள்:
கோவில்பட்டி செண்பவல்லி அம்மன் கோயில்
உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயில்
உறையூர் குங்குமவல்லி அம்மன் கோயில்
நம் முன்னோர்கள் மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை செய்ய வேண்டிய 41 சடங்குகளைப் பட்டியலிட்டு வைத்துள்ளனர். இம்மாதிரியான சடங்குகள் நமக்கு மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் தருகிறது. இப்பூமியில் புதிதாகப் பிறக்கப் போகும் குழந்தையை உற்றார், உறவினர்களோடு இணைந்து வரவேற்பதே 'வளைகாப்பு' என்னும் அற்புத நிகழ்வாகும்.

1 comment: