Monday 4 February 2019

ஜோதிடத்தில் இறப்பு மற்றும் ஆயுள்

ஜோதிடத்தில் இறப்பு மற்றும் ஆயுள்
ஜோதிட சாஸ்திரத்தில் ஆயுள் காரகன் என்ற அதிமுக்கியமான பதவியில் இருப்பவர். சூரிய பகவானின் இரண்டாவது புதல்வர். காக்கையை வாகனமாகக் கொண்டவர். ஈஸ்வர பட்டம் பெற்றவர்களில் சனியும் ஒருவர். முதல் புத்திரர் யமன். பின்னவர் ஆயுளை வளர்த்தால், முன்னவர் ஆயுளைப் பறிக்கும் தொழிலைச் செய்பவர். சகோதரி யமுனை. சனி கர்ம வினை கிரகம். கலியுகத்தில் சகல தெய்வங்களின் தூதுவனாக நின்று நன்மையோ தீமையோ செய்கிறார். அதனால் எந்த ராசியில் நின்றாலும் தப்பு செய்தால் அவருக்குப் பிடிக்காது.
ஜாதகத்தில் சனியின் நிலையே மரணத்தின் வகையை நிர்ணயிக்கும். ஒருவருக்கு நீண்ட சிறப்பான ஆயுளைத் தரும் கிரகம் சனி பகவான் ஆவார். ஒருவருக்கு நீண்ட ஆயுள் அமைய வேண்டுமானால் அவருடைய ஜாதகத்தில் கீழ்க்கண்ட அம்சங்களை நாம் பார்க்கவேண்டும்.
ஒரு குழந்தையின் ஜாதகத்தில் எட்டு வயது வரை பாலாரிஷ்ட காலம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பாலாரிஷ்டத்தின் தன்மையைப் பொறுத்து எட்டு வயதிற்குள் மரணம் ஏற்படுகிறது. எட்டு வயது முதல் இருபது வயது வரை யோகாரிஷ்டம் ஏற்படுகிறது. யோகாரிஷ்ட காலத்தில் ஆயுளை தீர்மானிப்பது என்பது சாதாரண விஷயம் அன்று.
லக்னத்துக்கு எட்டாம் இடம், லக்னத்துக்கு மூன்றாம் இடம், லக்னத்துக்கு பத்தாம் இடம் பத்தாம் இடத்தில் நின்ற கோள்கள், சூரியன், ஆயுளுக்கு அதிபதியான சனி பகவான். இவர்களைக் கவனிக்க வேண்டும். லக்னாதிபதியும் சூரியனும் ஒன்றுக்கு ஒன்று நட்பான கிரகமானால் ஆயுள் தீர்க்கம். லக்னாதிபதியும் சூரியனும் சமமானால் மத்திமமான ஆயுள். இரண்டும் ஒன்றுக்கு ஒன்று பகையான கிரகமானால் அற்ப ஆயுள். அற்ப ஆயுள் என்றால் அந்த ஜாதகன் 32 வயது மட்டுமே வாழ்வான்.
ஆயுளை அறியும் முறை
ஆயுள் கணிதம் என்பது மனிதனின் அறிவிற்கு அப்பாற்பட்ட செயல் என்றாலும் ஜோதிட சாஸ்திரத்தில் இதற்காக சில விதிமுறைகள் முனிவர்களாலும் ரிஷிகளாலும் வகுக்கப்பட்டிருக்கிறது.
1. லக்னாதிபதியின் நிலை மற்றும் எட்டாமதிபதியின் நிலை
2. லக்னாதிபதியின் நிலை மற்றும் சந்திரனின் நிலை
3. லக்னாதிபதியின் நிலை மற்றும் ஹோரா லக்னத்தின் நிலை
லக்னாதிபதியும் எட்டாமதிபதி, சந்திரன், ஹோரா லக்னாதிபதி ஆகிய அனைவரும் சர ராசியில் இருந்தால் பூர்ண ஆயுள். மாறாக இவை அனைத்தும் ஸ்திர ராசியில் இருந்தால் அற்ப ஆயுள். ஆனால் இவை அனைத்தும் உபய ராசியில் நின்றால் மத்திம ஆயுள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது,
மரணம் நேரும் காலம்
ஒரு ஜாதகத்தில் 8-ஆம் இடத்தை கொண்டு ஆயுளைப் பற்றியும் 2, 7, 11-ம் இடத்தை கொண்டு மாரகத்தைப் பற்றியும் கூறமுடியும். மாரக தசை அல்லது புத்தி வரும் காலங்களில் மிகக் கவனமுடன் இருப்பது அவசியம்.
ஒருவருக்கு 2,7,11 அதிபதிகள் தொடர்பு கொள்ளும் காலங்களில் ராகு அல்லது கேதுவையும் தொடர்பு கொள்ளும் போது மரணம் நேர்ந்துவிடுகிறது. இந்த மாரகாதிபதிகளான 2,7,11 அதிபதிகளின் தசா புத்தி அந்தரங்கள் நடைபெற்று அப்போது கோசாரத்தில் ராகு/ கேது ஆகிய சர்ப்ப கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை ஆயுள் ஸ்தானத்திற்கு அமைந்து நிற்கும் போது மரணத்திற்கு நிகரான கண்டங்கள் நிகழ்கின்றது. அந்த நேரத்தில் லக்னமோ அல்லது லக்னாதிபதியோ 6/8/12 அதிபதிகளின் தொடர்புகொள்ளும்போது மரணம் நிகழ்ந்துவிடுகிறது. மாரகாதிபதிகளின் தசாபுத்திகாலத்தில் லக்னத்திற்கு ஏற்படும் கிரகங்களின் தொடர்பைப் பொருத்து மரணத்தின் தன்மை அமைந்துவிடுகிறது.
சூரியன் அல்லது குருவின் சேர்க்கை பெற்றால் புனித தினங்களிலோ அல்லது கோயில் போன்ற தெய்வீகத்தன்மைகள் நிறைந்த இடத்தில் நிகழும்.
சுக்கிரன் சேர்க்கை பெற்றால் சுகமான மரணமும் மருத்துவமனை போன்ற இடங்களில் பலர் சேவை செய்ய மரணம் நிகழும்.
சனி சேர்க்கை பெற்றால் பொது இடங்களிலோ அல்லது தர்ம ஸ்தாபனங்கள் போன்ற இடங்களிலோ மரணம் நிகழும்.
சந்திரன் சேர்க்கை பெற்றால் நீர் நிலைகளுக்கு அருகிலோ அல்லது பயணத்திலோ மரணம் நிகழும்.
செவ்வாய் சேர்க்கை பெற்றால் விபத்துகளாலும் அகால மரணமும், புதன் சேர்க்கை பெற்றால் அவஸ்தைகளுடன் கூடிய மரணமும் நிகழும்.
ராகு/கேது தொடர்பு கொண்டால் விபத்து, விஷ ஜெந்துகளாலோ அல்லது விஷம் அருந்துதல், தற்கொலை போன்றவையும் நிகழும்.
மாந்தி தொடர்பு கொண்டால் உடல் சிதைந்த நிலையிலான மரணம் நிகழும்.
எனவே "ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா" என்பதை உணர்ந்து "எமன் ரொம்ப பொல்லாதவன் விடமாட்டான் அவன் சதாசிவ பக்தனென்றால் தொடமாட்டான்" என அறிந்து தர்ம நெறி தவறாமல் அமைதியாக வாழ்ந்தால் எமவாதனை இன்றி அமைதியான மரணம் நேரும்.
ஆயுள் வளர்க்கும் பரிகாரங்கள்
1. ஆயுள் காரகனான சனைஸ்வர பகவானை வணங்குவது மற்றும் பித்ரு வழிபாடுகள் தொடர்ந்து செய்வது. தர்ம காரியங்கள் செய்வது.
2. வருடம் தோறும் ஆயுஷ்ய ஹோமம் மற்றும் மிருத்யஞ்சய ஹோமம், சுதர்சன ஹோமம் போன்றவை பிறந்த நாட்களில் செய்வது.
3. எமனை சம்ஹாரம் செய்த திருக்கடையுர் அமிர்தகடேஸ்வரர் மற்றும் காலசம்ஹார மூர்த்தியைப் பிறந்தநாட்களிலும் ஜென்ம நட்சத்திர நாட்களிலும் வணங்குவது.
4. எமனை சாம்பலில் இருந்து உயிர்ப்பித்த திருச்சி திருப்பைஞ்சிலி ஸ்ரீ ஞீலிவண நாதர் ஆலயத்திற்குச் சென்று பிறந்த நாளில் ஒருமணி நேரமாவது தியான வழிபாடு செய்வது.
5. "காசியை விட வீசம் அதிகம்" என்று காசியைக் காட்டிலும் சிறப்பான சிவதலமாக புகழ்ந்து கூறப்படும் திருத்தலம் ஸ்ரீ வாஞ்சியத்தில் வாஞ்சிநாதேஸ்வரரை தரிசிப்பது மற்றும் ஆயுள் விருத்தி ஹோமங்கள் செய்வது.
6. இவற்றோடு உடல் ஆரோக்கியத்தை காக்க வருமுன் காக்க சரியான ஆரோக்கியமான உணவு முறைகளையும் வருடம்தோறும் மருத்துவ பரிசோதனைகள் செய்துகொள்வது மற்றும் தேவையான அளவு ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு, மருத்துவ காப்பிடு ஆகியவற்றைக் காலாவதியாகாமல் வைத்துக்கொள்வது
நமது வாழ்க்கை முடிந்து போகும் தருணத்தில் நாம் இறப்பு என்னும் காலகட்டத்தில் நுழைகிறோம், அது சில நாட்களோ அல்லது சில மணி நேரங்களோ பிடிக்கலாம். நோய் முற்றிப்போய் நாம் தளர்ச்சியடைந்து நமது உடல் அதன் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கும்போது அதன் செயல்பாடுகள் விரைவாகச் சரிந்து முடிவுக்கு வரும். அதுதான் இறக்கும் சமயத்தில் மிக முக்கியமான தருணம். ஏனெனில் அந்தக் கணம்தான் இறைமைக்கான நேரம்.
எனவே இதுவரை நாம் நல்ல செயல்கள் எதுவும் செய்யவில்லை என்றாலும் இனியாவது நாலாயிர திவ்ய பிரபந்தத்தில்
துப்புடை யாரை அடைவ தெல்லாம் சோர்விடத் துத்துணை யாவ ரென்றே
ஒப்பிலே னாகிலும் நின்ன டைந்தேன் ஆனைக்கு நீஅருள் செய்த மையால்
எய்ப்பு என்னை வந்து நலியும் போதுஅங்கு ஏதும்நா னுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே
எனப் பெரியாழ்வார் கூறியுள்ளது போல் ஸ்ரீமன் நாராயணின் நாமத்தை மரணம் நேரும் காலத்தில் சொல்லமுடியாமல் போனாலும் இப்போதே சொல்லி வைகுண்ட வாசனின் அருளைப் பெறுவோமாக!

No comments:

Post a Comment