Thursday, 7 March 2019

அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது.

அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது. அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது மரண பயத்தை நீக்கும் அற்புதமான வழிபாடு. தேய்பிறை அஷ்டமி செவ்வாய்க்கிழமை வந்தால் இன்னும் விசேஷம், அன்றைய தினம் பைரவரை வணங்கிட, வேண்டும் வரங்கள் எல்லாம் கிடைக்கும். அஷ்டமி வழிபாடு, ஆபத்திலிருந்து காக்கும் என்பார்கள். பைரவர் சிவனின் 64 வடிவங்களில் மகாஞானியான, ரௌத்ர தோற்றம் கொண்டவர். எல்லா சிவாலயங்களிலும் பைரவர் இருப்பார். நாயை வாகனமாகக் கொண்டு காட்சி தருபவர்.
அகங்காரத்தை அழிக்கும் கடவுளாகவும், சுக்கிர தோஷத்தை நீக்கும் இறைவனாகவும் பைரவர் விளங்குகிறார். அஷ்டமி நாளில் இவரை வணங்கினால் எண்ணியது நடக்கும். தடைகள் யாவும் விலகும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி அனைத்தும் பைரவரை வணங்கினால் நன்மையாக முடியும். பைரவருக்கு நள்ளிரவு பூஜையே உகந்தது எனப்படுகிறது. எனினும் உச்சி காலம் எனப்படும் நண்பகல் பூஜையும் சிறப்பானது.
அஷ்டமி நாளில் உச்சி வேளையில் பைரவருக்கு சிவப்பு ஆடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, மாலை சூட்டி, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி நல்வாழ்வு கிட்டும். எலுமிச்சம்பழத்தை பைரவமூர்த்தியின் காலில் வைத்து அர்ச்சித்து வீட்டுக்கு கொண்டு போனால் தீராத வியாதிகள் தீரும். வீட்டை சூழ்ந்திருக்கும் பீடைகள் ஒழியும். மன அமைதியே இல்லாதவர்களுக்கு பைரவரே நல்ல துணை.
எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.
தேய்பிறை அஷ்டமி நாள் இன்று. துக்கங்கள் யாவையும் மாற்றி நிம்மதியை அருளும் பைரவ வழிபாட்டை "காலபைரவாஷ்டகம்" என்னும் பாடலை கேட்டு சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய பைரவரை வழிபட்டு, ஆபத்துகளில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம். இந்த பாடலை பாடியவர் உன்னிகிருஷ்ணன், இசை வீரமணிகண்ணன், தயாரிப்பு ஸ்ருதிலயா மீடியா கார்ப்.

No comments:

Post a Comment