Wednesday, 6 March 2019

சுந்தரர்

திருநாவலூரில் சிவனைப் பரம்பரையாகத் தொழும் குலத்தைச் சேர்ந்தவர் சடையனார். இவரது மனைவி பெயர் இசைஞானியார்.
இவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு நம்பியாரூரன் எனப் பெயர் சூட்டினர். குழந்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது.
மேலைத் தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம் என்பதற்கு இணங்க சிவனைத் தொழுத குலத்தில் பிறந்ததால், மழலையாக இருந்த நம்பியாரூரர் சிவப் பழமாக ஜொலித்தார்.
இவர் மற்ற பிள்ளைகளுடன் தெருவில் ஓடிப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த மன்னன் மனத்தை மயக்கிவிட்டார்.
குழந்தையைக் கையில் தூக்கிக்கொண்ட மன்னன், அவரது தந்தை சடையனார் இல்லத்திற்குள் சென்றார்.
அப்போது மன்னன் நரசிங்கமுனையரும் சடையரும் ஏற்கனவே பால்ய நண்பர்கள் என்பது தெரியவந்தது. அந்த உரிமையில் இக்குழந்தையைத் தான் அரண்மனையில் வைத்து வளர்க்க விரும்புவதாகக் கூறவே அதற்கு ஒப்புக்கொண்டார் சடையனார்.
மன்னன் தத்துப் பிள்ளை ஆனதால், இளவரசரான நம்பியாரூரன் ஆய கலை அறுபத்து நான்கையும் கற்றார். அவருக்கு திருமண வயதும் வந்தது. இளவரசர் அல்லவா?
தனது திருமணத்திற்காகப் பெண் வீட்டாரின் ஊருக்கு வெண் புரவியில் ரத, கஜ, துரக பதாதிகளோடு புறப்பட்டுச் சென்றார். அப்போது இவரிடம் சிவன் தன் திருவிளையாடலை நடத்தத் திருவுளம் கொண்டார்.
முதிய அந்தணர் உருவில் திருமணக் கூடத்திற்கு வந்த சிவன், இவர் தனது அடிமை என்றும் தான் கூறுவதைக் கேட்குமாறும் அங்குள்ளோரிடம் வேண்டினார்.
அங்குள்ளோர் முதியவர் தரப்பு வாதத்தைக் காதுகொடுத்துக் கேட்டார்கள். நம்பியின் பாட்டனார் எழுதி முத்திரை வைத்த அடிமை ஓலை ஒன்றினைச் சான்றாக அளித்தார். அதனைப் பறிப்பது போல் பிடுங்கிய நம்பியோ ஓலையைச் சுக்கு நூறாகக் கிழித்துவிட்டார்.
இவ்வோலை நகல்தான் என்றும் மூலவோலை, தான் வாழும் திருவெண்ணைநல்லூரில் உள்ளது என்றும் எடுத்துக் கூறிய முதியவர், அங்கு அனைவரும் வருமாறு கூறினார்.
இவ்வழக்கை முடித்த பின்னரே மணம் முடிப்பேன் என்று சபதமெடுத்த நம்பியாரூரன், அம்முதியவருடன் திருவெண்ணைநல்லூருக்குப் பயணப்பட்டார். பல காத தூரம் நடந்து வந்த களைப்புத் தீர, முதியவர் இல்லம் எதுவென்று வினவினார்.
திருவெண்ணைநல்லூர் கோவிலுக்குள் நுழைந்த சிவபெருமான் மறைந்து போனார். அப்போது “இவருக்கு என்ன பித்தா (பித்துப் பிடித்திருக்கிறதா)? இவ்வளவு தூரம் நம்முடன் வந்துவிட்டு தற்போது காணவில்லையே?” என்று கேட்டார் நம்பியாரூரன்.
அப்போது சிவபெருமான் பார்வதி சமேதராக நந்தியம்பெருமான் மேல் காட்சியளித்தார். இவ்வாறு ரிஷபாரூடராக காட்சியளித்த சிவன், சுந்தரா என விளித்து தன்னைக் குறித்துப் பாட நம்பியாரூரரிடம் வேண்டினார். இப்படி திடீரென்று காட்சி அளித்ததில் ஆனந்த அதிர்ச்சி அடைந்த சுந்தரர், என்ன பாடுவது என்று தெரியாமல் திகைத்தார்.
“இத்திருக்கோயிலுக்குள் நுழையும்பொழுது பித்தனா என்று கேட்டாயே அதனையே முதல் சொல்லாகக் கொண்டு பாடு” என்று அடியெடுத்துக் கொடுத்தார் அப்பெருமான். சுந்தரரும், ‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று தொடங்கிப் பதிகங்கள் பாடினார். இப்படியாகத் திருப்பதிகம் பாடிப்பாடியே சிவனுக்கும் சுந்தரருக்கும் நல்ல நட்பு வளர்ந்தது.
அந்த முறையிலே சுந்தரர் சிவபெருமானிடம் எதை வேண்டுமானாலும் கேட்பார். சுந்தரருக்குப் பிரியமானவர் பரவை நாச்சியார். சுந்தரர் ஊரைச் சேர்ந்த அவளிடம், இவருக்குப் பிரியம் அதிகம் உண்டு. வரவை நாச்சியா திருவாரூர் கோவிலில் நாட்டியம் ஆடுபவர்களில் ஒருவர். பரம பக்தை. தானதர்மம் செய்வதில் மிகுந்த விருப்பமுடையவள். இதனை அவள் சிறப்புறச் செய்வதற்காக சுந்தரரிடம், பொன், பொருள் தருமாறு நச்சரிப்பாள். இவரோ பரமனைப் பாடிக் கொண்டிருப்பவர்.
அப்படிச் செல்லும்போது, திருமுதுகுன்றம் என்று தேவாரத்தில் சொல்லியிருக்கும் விருத்தாசலத்திலேயும் அவர் சிவனிடம் பொன் கேட்டார்.
சிவனும் பன்னிரண்டாயிரம் பொன் கொடுத்தார். சுந்தரரோ விருத்தாசலத்தில் கொடுத்தால், பத்திரமாகத் திருவாரூர் வரை எடுத்துச் செல்ல முடியாது என்பதால் அவற்றை திருவாரூரிலேயே அளிக்குமாறு வேண்டுகிறார்.
இவரது வேண்டுகோளுக்கு இணங்கிய சிவன், லீலை செய்யவும் திருவுளம் கொள்கிறார். இந்தப் பொன்னை மணிமுத்தாற்றிலே போட்டுவிட்டு பின்னர் ஒவ்வொரு ஊரில் உள்ள கோயிவிலும் தன்னைப் பாடிக்கொண்டு திருவாரூரையடையும்படி கூறினார்.
திருவாரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கமலாலயத் திருக்குளத்தில் ஈசான்ய மூலையில் இந்தப் பொன் மூட்டையை எடுத்துக்கொள்ளப் பணித்தார்.
சுந்தரரும் மணிமுத்தாறில் மூட்டையைப் போடப் போனார். திடீரென்று அவருக்குச் சந்தேகம் வந்தது. சிவபெருமான், இங்கு உயர்ந்த பொன்னைக் கொடுத்துவிட்டு அங்கு மாற்றுக் குறைந்த பொன்னாக மாற்றிவிட்டால் என்ன செய்வது என்ற சந்தேகம் அந்த பொன்னார் மேனியன் மேல் வந்துவிடுகிறது. இதனால் ஆற்றில் போடும் இடத்திலும், எடுக்கப் போகின்ற திருக்குளத்திலும் அளந்து பார்த்துவிடுவது என்று முடிவு செய்கிறார்.
ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்ற சொலவடை இதை ஒட்டி ஏற்ப்பட்டிருக்கலாம்.
பொன்னின் தரத்தைப் பின்னர் ஒப்பு நோக்கத் துணுக்குப் பொன்னை வெட்டி எடுத்துக்கொள்வது அந்நாளைய வழக்கம்.
இதற்குப் பொன் மச்சம் என்று பெயர். இவ்வாறு சுந்தரரும் பொன் மச்சத்தை எடுத்துக்கொண்டு மூட்டையை மணிமுத்தாறில் போட்டுவிட்டார்.
பல நாட்களுக்குப் பின்னர் திருவாரூரை அடைந்தார் சுந்தரர். இவர் வந்த செய்தி அறிந்த பரவை நாச்சியார் பொன் குறித்துக் கேட்க, அவளைத் திருக்குளத்திற்குப் பெருமையுடன் அழைத்து சென்றார்.
ஈசான்ய மூலையில் குளத்தில் இறங்கித் தேடினால் முதலுக்கே மோசம். மூட்டையையே காணவில்லை. ஆற்றில் போட்டுவிட்டுக் குளத்தில் தேடினால் எப்படிக் கிடைக்கும் என்று கேட்டுப் பரவை நாச்சியாரோ பரிகாசம் பண்ணுகிறாள். கையில் உள்ள மச்சப் பொன்னைக் காட்டினால் அவளது பரிகாசம் இன்னும் அதிகரித்துவிடும்.
என்ன செய்வது என்று அறியாத சுந்தரருக்கோ சிவன் மேல் கோபமாக வருகிறது. ஆனாலும் பெண் முன்னால் அவமானப்பட்டுவிடக் கூடாது என்று சிவனிடம் குழைந்து வேண்டிப் பதிகம் பாடுகிறார்.
பொன் குறித்த காரணத்தால் எழுந்த பதிகம் என்பதால் பொன் செய்த மேனியினீர் எனத் தொடங்கிப் பாடினார். பிறிதொரு சமயத்தில் பொன்னார் மேனியனே என்று குறிப்பிட்டுப் பாடியவரும் சுந்தரரே.
பதிகத்தைப் பெற்று மனம் மகிழ்ந்த சிவனும் பொன் மூட்டை அவர் கைக்குக் கிடைக்கச் செய்தார். ஆனால் அதை `மச்சம்’ பொன்னுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மாற்றுக் குறைந்திருந்தது. மீண்டும் சுந்தரர் பொன் போன்ற பதிகம் பாட, பொனின் தரமும் உயர்ந்து தன் தகுதியை அடைந்தது.
சுந்தரரின் ‘பொன்னாசை’யைப் பயன்படுத்திக்கொண்டு பொன்னைவிடவும் விலை மதிப்பு வாய்ந்த பாசுரங்களைப் பாடவைத்தார் சிவன்.
தனது தனித் தமிழ்ச் சொல்லினால் சிவ பெருமானை மட்டுமல்ல இன்றளவும் சிவ பக்தர்களையும் கட்டிப் போட்டுவிட்டார் சுந்தரர்.
Image may contain: 1 person

No comments:

Post a Comment