Saturday, 11 April 2020

கருஞ்சீரகம்

கருஞ்சீரகம் மூலிகைத் தாவரம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது.

இறப்பைத் தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடியது கருஞ்சீரகம். யுனானி மருத்துவத்தில் கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அரபு நாடுகளில் இதை உணவில் சேர்த்துப் பயன்படுத்துகிறார்கள். பைபிளிலும் கருஞ்சீரகத்தைப் பற்றியக் குறிப்பு இருக்கிறது. 

மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தின் விதையில் உள்ள `தைமோகுயினன்' (Thymoquinone) என்ற வேதிப்பொருள் வேறு எந்தத் தாவரத்திலும் இல்லை. இது, நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. இதில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு இருப்பதால், கெட்ட கொழுப்புக் குறைய உதவும். மேலும், அமினோ அமிலங்கள்,  வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்றவையும் இதில் உள்ளன. 
சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகச் செயல்படும் கருஞ்சீரகம், வீக்கம் தணிக்க உதவும். ஆஸ்துமா, சுவாசப் பிரச்னைகள் நெருங்காமல் உடலுக்கு எதிர்ப்பு சக்தியைத் தரும். இதயநோய், புற்றுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக கருஞ்சீரகம் கருதப்படுகிறது. இது எலும்பு மஜ்ஜை உற்பத்தியைச் சீராக்கி, புற்றுநோய்க் கட்டிகள் ஏற்படாதபடி பாதுகாக்கும். குறிப்பாக, கணையப் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

மிகச் சாதாரணமாகப் பலரையும் பாடாகப்படுத்தி வரும் மூக்கடைப்புக்கு இது நல்ல மருந்து. ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை 50 மி.லி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, அதில் இரண்டு சொட்டு மூக்கில்விட்டால் மூக்கடைப்பு விலகும். ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை வெந்நீர், தேன் கலந்து பருகினால் சிறுநீரகக் கற்களும் பித்தப்பைக் கற்களும் கரையும். இதை காலை, மாலை இரண்டுவேளையும் சாப்பிட்டு வரவேண்டியது அவசியம். 

தொடர் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை, அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதுடன் தேன் சேர்த்துச் சாப்பிடலாம். இது நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை அகற்றும். தோல் நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல மருந்து. கரப்பான், சொரியாசிஸ் உள்ளவர்கள் கருஞ்சீரகத்தைப் பொடியாக்கி தேய்த்துக் குளிக்கலாம். இதனால் நோயின் தீவிரம் குறையும்; அதனால் ஏற்பட்ட புண்களும் தழும்புகளும் மறையும். குளியல் பொடிகளில் இதைச் சேர்த்துப் பயன்படுத்தலாம். 

மாதவிடாய்க் கோளாறுகளின்போது அடிவயிறு கனமாகி, சிறுநீர் கழிக்கச் சிரமப்படும் பெண்களுக்கு இது நல்ல மருந்து. வறுத்துப் பொடித்த கருஞ்சீரகத்துடன் தேன் அல்லது கருப்பட்டி கலந்து, மாதவிடாய் தேதிக்கு 10 நாள்கள் முன்பிருந்தே ஒரு டேபிள்ஸ்பூன் சாப்பிடலாம். இது வயிற்று வலி, ரத்தப்போக்கு உள்ளிட்ட மாதவிடாய்ச் சிக்கல்களை சரி செய்யும்; வயிறு கனம் குறைந்து நன்றாகச் சிறுநீர் வெளியேற உதவும். 

பிரசவத்துக்குப் பின்னர் கர்ப்பப்பையில் சேரும் அழுக்கை நீக்க, ஒரு டேபிள்ஸ்பூன் கருஞ்சீரகப் பொடியுடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம். குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து காலை, மாலை என ஐந்து நாள்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இதேபோல் வெந்தயம் கால் கிலோ, ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் எடுத்து கருக விடாமல் வறுத்துப் பொடியாக்க வேண்டும். இதை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதைச் சாப்பிட்டதும் வேறு எந்த உணவும் சாப்பிடக் கூடாது. இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக்களும் மலம், சிறுநீர், வியர்வை மூலம் வெளியேறும்; தேவையற்ற கொழுப்பு நீங்கும்; ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு ரத்த ஓட்டம் சீராகும். 

பல மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது உடல்நலத்துக்கு நல்லது.

No comments:

Post a Comment