Monday, 27 April 2020

எந்த ராசிக்கு, எந்த நோய் அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தும்? தெரிந்து கொண்டால், முன்கூட்டியே பாதுகாப்பாக இருந்து கொள்ளலாம் அல்லவா?

12 ராசிக்காரர்களுக்கும் பலம் என்று ஒன்று இருந்தால், பலவீனம் என்ற ஒன்றும் கண்டிப்பாக இருக்கும். நீங்கள் என்ன ராசிக்காரர்! உங்களுக்கு பலவீனம் தரும் பிரச்சினை எது என்பதை பற்றி நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா? தாராளமாக உங்களது பலவீனத்தை தெரிந்துகொண்டு ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவு. 

மேஷ ராசிக்கு, ராசிநாதன் செவ்வாய். இவர்களுக்கு பொதுவாகவே ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். இதயநோய், பைல்ஸ் இப்படிப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பொதுவாகவே மேஷராசிக்காரர்களுக்கு கோபம் சற்று அதிகமாக வரக்கூடும். இதனால் தலைவலி ஏற்படலாம். பல், சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. அதிகமாக யோசித்துக் கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு, கோபத்தைக் குறைத்துக் கொண்டால் இப்படிப்பட்ட பிரச்சனைகள் வருவதையும் குறைத்துக் கொள்ளலாம். தினம் தோறும் விநாயகர் மந்திரத்தை சொல்வது மிகவும் நல்லது.

ரிஷப ராசிக்கு, ராசி நாதன் சுக்கிரன். இவர்களுக்கு இயற்கையாகவே நன்றாக கேட்கும் திறன் இருக்கும். அதாவது கூர்மையான காது. பற்களின் வரிசை மிக அழகாக இருக்கும். சிலருக்கு தைராய்டு பிரச்சனை வரக்கூடும். அடிக்கடி சளி பிடிக்கும். காய்ச்சல் வரும். காது மூக்கு தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் அவதிப்பட்டு வருவார்கள். இந்த ராசியில் உள்ள பெண்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் உஷாராக இருப்பது நல்லது. கருப்பை பலவீனமாக இருக்கும். பிடிவாத குணத்தை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. தினம் தோறும் முருகப் பெருமானை வழிபட்டால் பிரச்சனைகள் தீரும்.

மிதுன ராசிக்கு, ராசிநாதன் புதன் பகவான். மிதுனம் என்பது எண்ணிக்கையில் இரண்டை குறிக்கிறது. அதாவது இரண்டு கால்களில் இருக்கும் மூட்டு சம்பந்தமான பிரச்சனை, சுவாசப் பிரச்சனை அடிக்கடி ஏற்படக்கூடும். காய்ச்சல் இருமல் போன்ற பிரச்சனைகளுக்கும் இவர்கள் ஆளாவார்கள். மிதுன ராசிக்காரர்களுக்கு சீக்கிரமே வழுக்கை விழுந்து விடும். வயிறு கோளாறு ஏற்படும். சில பேருக்கு குழந்தை இல்லாத சூழ்நிலையும் இருக்கும். மிதுன ராசிக்காரர்கள் பெருமாளை வழிபடுவது மிகவும் நல்லது.
கடக ராசிக்காரர்களுக்கு, ராசிநாதன் சந்திரன். இயற்கையாகவே இவர்களுக்கு செரிமான பிரச்சனை ஏற்படும். இவர்கள் மிகவும் குறைவாக தான் சாப்பிடுவார்கள். பசி தன்மை இவர்களுக்கு எப்போதும் குறைவாகவே இருக்கும். ஆனால் இவர்கள் மிகவும் மன வலிமை கொண்டவர்களாக இருப்பார்கள். வயிறு சம்பந்தப்பட்ட அல்சர், குடல் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். மண்ணீரல், கல்லீரல் போன்ற பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. கண் நோய் ஏற்படும். அதாவது பார்வைக்கோளாறு, கண்ணாடி போடும் சூழ்நிலை ஏற்படலாம். தினம்தோறும் அம்மன் வழிபாடு மிகவும் சிறந்தது. குறிப்பாக காமாட்சி அம்மனை வழிபடலாம்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு, ராசிநாதன் சூரியன். இவர்கள் எப்போதும் அதிகார குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். முதுகு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், முதுகெலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரக்கூடும். இதயம் பலவீனம் அடையக்கூடும். பித்த சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும். அதிகமாக கோபம் வரும் என்பதால், சிம்ம ராசிக்காரர்கள் இதயத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தினம்தோறும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. சிவனை நினைத்து 5 நிமிடம் தியானம் செய்வது மன அமைதியைத் தரும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு, ராசிநாதன் புதன். இவர்கள் முடிந்தவரை உணவு பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடாக இருப்பர். கூடுமானவரை இவர்களுக்கு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிரச்சினை என்று வந்தால், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் செரிமான பிரச்சனைகள் வரக்கூடும். மலச்சிக்கல் உண்டாகும். சிலருக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எந்த நேரத்தில் எதை உண்ண வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பவர்கள் கன்னி ராசிக்காரர்கள். தினம் தோறும் முருகப் பெருமான் வழிபாடு மிகவும் நல்லது.

துலாம் ராசிக்காரர்களுக்கு, ராசி நாதன் சுக்கிரன். இவர்களுக்கு சிறுநீரகப் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிறுநீரகம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஆரம்பத்திலேயே அதை கவனித்துவிட வேண்டும். இவர்களுக்கு சிறுநீரகம் மட்டும்தான் அதிகப்படியான பிரச்சனைகளைத் தரும். மற்றபடி சரும பிரச்சனை, வாயு தொல்லையால் பிரச்சினைகள் இருந்தால் அது சாதாரணமாக நீங்கிவிடும். இவர்கள் நடராஜரையும், நரசிம்மரையும் வழிபடுவது மிகவும் நல்லது.
விருச்சக ராசி காரர்களுக்கு, ராசி அதிபதி செவ்வாய். இவர்கள் எப்போதும் தங்களது வேலைகளை சுறுசுறுப்பாக செய்வார்கள். ஆனால் தனக்கு சொந்தமென்று வருவதை அடுத்தவர்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டார்கள். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை ஏற்படலாம். சிறுநீரக தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. தோல்நோய் அவ்வப்போது வந்து போய்க் கொண்டிருக்கும். உடம்பில் சுரக்கும் சுரப்பிகளால் பல பிரச்னைகள் வரவும் வாய்ப்புள்ளது. இவர்கள் முருகன் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

தனுசு ராசிக்காரர்களுக்கு ராசி அதிபதி குரு. இவர்கள் கல்லீரல், தொடைப் பகுதிகளில் அதிகமாக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். முதுகெலும்பு பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. பொதுவாகவே தனுசு ராசிக்காரர்கள் சாப்பிடுவதில் அதிகமாக அக்கறை காட்ட மாட்டார்கள். முடிந்தவரை சத்துள்ள சாப்பாட்டை சாப்பிட்டு வந்தால் பல விதமான உடல் நலக் கோளாறுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். எலும்பு உறுதியாக இருக்க, எந்த பொருட்கள் சாப்பிட்டால் அதிக சத்து கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள். தினந்தோறும் விநாயகர் வழிபாடு மிகவும் நல்லது.

மகர ராசிக்காரர்களுக்கு, ராசி அதிபதி சனி பகவான். மகர ராசிக்காரர்கள் நன்றாக உழைத்து வேலை செய்யும் நபராக தான் இருப்பார்கள். சற்று பிடிவாத குணம் இருக்கும். அந்த பிடிவாதமே இவர்களுடைய வாழ்க்கைக்குத் தடையாக நிற்கும். இவர்களுக்கு மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும். எலும்புகள், மூட்டுகள் வலுவிழந்து காணப்படும். முடிந்தவரை கால்சியம் சத்து உள்ள பொருட்களை சாப்பிட்டு வருவது நல்லது. தினம்தோறும் பெருமாள் வழிபாடு மிகவும் நல்லது.

கும்ப ராசிக்காரர்களுக்கு, ராசி அதிபதி சனி பகவான். இவர்கள் நேரம் காலம் பார்க்காமல் ஓய்வு எடுக்காமல் தங்களுடைய பணிகளை செய்து கொண்டே இருப்பார்கள். ஆனால் உடல் ஆரோக்கியமும் தேவை என்பதை இவர்கள் நினைவில் கொள்ளவேண்டும். இவர்களுக்கு மூட்டு பிரச்சனை, இதயம் சம்பந்தமான பிரச்சனை, நரம்பு பிரச்சனை, அலர்ஜி போன்ற பல பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சிவன் கோவில்களில் இருக்கும் பைரவரை தரிசனம் செய்தால் பல பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.


மீன ராசிக்குராசிக்கு, அதிபதி குரு. இவர்கள் நேர்மறையாக சிந்திக்கும் திறன் கொண்டவர்கள் தான். ஆனால் இவர்களின் எண்ணம் ஈடேற வில்லை என்றால், அதிகப்படியான கவலையில் ஆழ்ந்து விடுவார்கள். எதையாவது சிந்தித்து, சிந்தித்து மன அழுத்தம் ஏற்பட்டு பல பிரச்சனைகளை இவர்களே விலைக்கு வாங்கிக் கொள்வார்கள். இதனால் உடல்எடை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், வயிறு உப்புசம், வாயு தொல்லை இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதுமட்டுமல்லாமல் உணவு பழக்கவழக்கத்தை சீராக வைத்துக் கொள்ளாததால், பலவிதமான பிரச்சனைகளையும் உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். இவர்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியம். இவர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்வது நன்மை தரும்.

No comments:

Post a Comment