Wednesday, 27 May 2020

தெய்வீக மரம் பாரிஜாதகம்

தெய்வீக மரம்
பாரிஜாதகம்

கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் ஆகிய ஐந்து மரங்களும் தேவலோக மரங்களாகும். 

இந்த ஐந்து மரங்களும் பாற்கடலைக் கடையும் பொழுது வந்ததை
இந்திரன் தன் தேவலோகத்திற்காக எடுத்துக் கொண்டார்.

நிலத்தில் விழுந்த பின்னும் கடவுளுக்குச் சூட்டப்படும் ஒரே ஒரு மலர் பாரிஜாதமே. 

இப் பூக்களை மரத்திலிருந்து கொய்து இறைவனுக்குச் சூட்டக் கூடாது என்றும் சொல்கிறார்கள்.

இந்த மரத்தில் இருந்து பூக்கும் மலர்கள் இனிய மணம் வீசும் தன்மை கொண்டவை. 

பவளமல்லிக்கு மற்றொரு பெயர் பாரிஜாதம். 

இலக்கியத்தில் சேடல் என்று அழைக்கப்படுகிறது. 

புட்ப விதி என்னும் நூலில் பவள மல்லிகை சண்பக‘ஞாழல் கோட்டூப்பூவகை’ என்று கூறப்பட்டுள்ளது. 

அதாவது, நாற்பது வகையான கோட்டூப் பூ வகைகளில் பவளமல்லியும் ஒன்று. 

இந்த மரம் முன்னிரவில் பூத்து மணம் வீசி சூரிய உதயத்துக்கு முன்பே மண்ணில் உதிர்ந்து விடும்.

பவளமல்லிமரம் மூன்று இலை தொகுப்புகளைக் கொண்டது. இவற்றில் மும்மூர்த்திகளும் உறைந்திருப்பதாக ஐதீகம். மத்தியில் மகாவிஷ்ணுவும், வலது பக்கத்தில் பிரம்மாவும், இடது பக்கத்தில் சிவபெருமானும் இருப்பதாக நம்பப்படுகிறது.

பாரிஜாதம் என்ற இந்த பவளமல்லி, திருமாலுக்கு உகந்தது. 

பவளமல்லி வேரில் சிரஞ்சீவியான ஆஞ்சநேயர் குடியிருக்கிறார்..

பவளமல்லிகை
இந்திரனின் மனைவி சாச்சிக்கு மிகவும் பிடித்தமானது ஆகும்.

ஒரு முறை நாரதர், தேவலோகத்தில் இருந்து பாரிஜாத மலர்களால் ஆன மாலையைக் கொண்டு வந்து கிருஷ்ணரிடம் கொடுத்தார். 

அந்த மாலையை கிருஷ்ணர், ருக்மணியிடம் கொடுத்தார். இதையறிந்த சத்யபாமா, தேவலோக மலர் மாலையை தனக்கு தராதது பற்றி கேட்டு கோபித்துக் கொண்டாள்.

உடனே கிருஷ்ணர், “தேவலோகத்தில் இருந்து பாரிஜாத மரத்தையே கொண்டு வந்து உன்னுடைய அந்தபுரத்தில் வைக்கிறேன்” என்று கூறினார்.

ஆனால் இந்திரன், தேவலோக மரத்தை பூமிக்கு கொண்டு செல்ல மறுப்பு தெரிவித்தார்.

கிருஷ்ணருக்கும் இந்திரனுக்கும்
சண்டை மூளும் நிலை வந்ததை அறிந்து ரிஷிகள் பலர் பேசி
இந்திரனை சமாதானம் செய்தனர். 

அதன்பிறகு கிருஷ்ணர், பாரிஜாத மரத்தைக் கொண்டு வந்து, சத்யபாமாவின் அந்தபுரத்தில் வைத்தார். 

அதே நேரத்தில் அதில் இருக்கும் மலர்கள் ருக்மணியின் அந்தபுரத்தில் விழும்படியாகவும் செய்து, இருவருக்குமான பிணக்கை தீர்த்து வைத்தார்.

வாயு புராணம்  கூறும் வேறு ஒரு கதைப்படி 

பாரிஜாதம் என்ற இளவரசி சூரியனை திருமணம் புரிய விருப்பம் கொண்டிருந்தாள். 

ஆனால், சூரியன் இளவரசியை ஏற்கவில்லை. 

இதனால் பாரிஜாதம் மனம் உடைந்து தீயில் குதித்து தனது இன்னுயிரை விடுத்தாள். 

இளவரசி பாரிஜாதம் தீயில் எரிந்த சாம்பலில் இருந்துதான் பாரிஜாதம் என்ற செடி உருவானது. 

சூரியன் பாரிஜாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் இந்த செடி பகலில் சூரியனை பார்த்து பூப்பதைத் தவிர்த்து இரவில் மட்டுமே பூத்துக் குலுங்குகிறது. இதனால்தான் இதனை வருந்தும் மரம் என்றும் அழைப்பார்கள்.

தன்னைக் கைவிட்ட சூரியனைப் பார்ப்பதை தவிர்ப்பதற்காக இரவில் மட்டுமே பூக்களைத் தரும் மரமாக இருந்து, கண்ணீராக பூக்களைச் சொரிகிறாள் .

பவளமல்லிமரத்தின் இலை, விதை, பட்டை ஆகியவை மருத்துவ குணம் வாய்ந்தவை. 

பவளமல்லி சிறுநீரகத்தை காப்பாற்றக்கூடிய மருத்துவத்தன்மை உடையதாக இருக்கிறது. 

நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த மருந்து. கால்மூட்டு வலி, ரத்தப்போக்கு, இடுப்பு வலி ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணியாக உள்ளது. 

பவளமல்லி இலை பித்தத்தால் ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்தக் கூடியது. 

பவளமல்லி மரத்தின் வேரை மென்று தின்றால் பல்லீறுகளில் உருவாகும் வலியை குணப்படுத்தும்.

விதைகளை பவுடராக்கி சாப்பிட்டு வந்தால் சரும நோய்கள் தீரும். 

இலைச்சாறு குழந்தைகளுக்கு மலமிளக்கியாகவும் உள்ளது. 

பவள மல்லிவிதையை பொடி செய்து அதை எண்ணெயில் குழைத்து தலையில் தேய்த்து வந்தால் வழுக்கையும் மறைந்து முடி வளரும்.

தமிழகத்தில் திருக்களர் திருத்தலத்தில் உள்ள பாரிஜாதவனேஸ்வரர், மரக்காணத்தில் உள்ள பூமீஸ்வரர், சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர், தென்குரங்காடுதுறையில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர், திருநாரையூர் சித்தநாதீஸ்வரர், திருவைகுண்டத்தில் உள்ள கண்ணபிரான், திருக்கடிகை திருமால் கோயில் ஆகிய தலங்களில் பவளமல்லி தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.

No comments:

Post a Comment