Friday, 12 June 2020

யுத்தத்தில் பகவத் கீதை சொல்ல எத்தனை நாட்கள் பிடித்தது?

ஸ்ரீ கிருஷ்ணர் குருக்ஷேத்திரப் போரின் போது அர்ஜுனனுக்கு எத்தனை நாட்களில் கீதோபதேசம் செய்தார் என்பது பலருக்கும் எழும் ஐயம். ஏனென்றால் அத்தனை பெரிய பகவத் கீதையை சொல்லுவதற்கு அவருக்கு எத்தனை நாள் பிடித்தது என்று சந்தேகம் வருகிறது பலருக்கும்.
யுத்தம் தொடங்கிய அன்று இரண்டு படைகளும் யுத்த பூமியில் நுழைந்த உடனேயே சண்டை ஆரம்பித்து விடவில்லை. முதலில் சின்னச் சின்ன சில சம்பவங்கள் நிகழ்ந்தன. அர்ஜுனனின் விருப்பத்திற்கிணங்க இரண்டு படைகளுக்கும் இடையில் ஸ்ரீ கிருஷ்ணன் ரதத்தை கொண்டு வந்து நிறுத்தினான். அவர்கள் இருவரும் உரையாடும் விதமாக கீதோபதேசம் நிகழ்ந்தது.
அதன் பின் தர்மபுத்திரன் ரதத்தை விட்டிறங்கி நடந்து சென்று சகோதரர்களோடு சேர்ந்து எதிரிப் படை அருகில் நெருங்கி அங்கிருந்த பீஷ்மர், துரோணர் போன்ற குரு வம்சப் பெரியவர்களை வணங்கி ஆசி பெற்றுத் திரும்பினான். அதன் பிறகு எதிரித் தரப்பில் இருப்பவர் யாராவது சரணடைந்தால் அபயம் அளிப்பதாக ரதத்தின் மீது ஏறி தர்மன் பிரகடனம் அறிவித்தான். அப்போது யுயுத்ஸு பாண்டவர் பக்கம் சேர்ந்தான்.
அதற்குப் பிறகு யுத்தம் ஆரம்பமானது.
கீதையில் 700 சுலோகங்கள் உள்ளன. அவை அனைத்தையும் சாதாரண வேகத்தில் படித்தால் ஒன்றரை மணி நேரத்தில் பூர்த்தி செய்யலாம். இந்த சுலோக எண்ணிக்கையில் நூற்றுக்கு மேல் ‘சஞ்சய உவாச’ என்று சஞ்சயன் திருதிராஷ்டிரனுக்குக் கூறிய வர்ணனைகளும் விமரிசனங்களும் உள்ளன.
அதை எல்லாம் நீக்கிப் பார்த்தால் ஸ்ரீ கிருஷ்ணனின் உபதேசம் அறுநூறுக்கும் குறைவே. இந்த பாகத்தைப் படிக்க வேண்டுமென்றால் ஒரு மணி பத்து நிமிடத்தைத் தாண்டாது. ஒரு விஷயத்தைப் பற்றி பேசுவதற்குப் பிடிக்கும் நேரத்தை விட மனப்பாடம் செய்து படிப்பதற்கு அதிக நேரம் பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
மேலும் பேசும் விஷயத்தை வியாச மகரிஷி சந்தஸ் என்ற செய்யுள் வடிவில் எழுதி உள்ளார். கிருஷ்ணர் கூறிய விஷயங்களை அழுத்திச் சொல்லுவதற்காக சில உபநிஷத் வாக்கியங்களைக் கூட சேர்த்துள்ளார் வியாசர். இவ்விதம் கவனித்தால் பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணரும் அர்ஜுனனும் செய்த சம்பாஷனை மிஞ்சிப் போனால் பதினைந்து இருபது நிமிடங்களே பிடித்திருக்கும். தத்துவ சாஸ்திரமான பகவத் கீதையை பல நாட்கள் தொடர்ந்து உபன்யாசங்கள் செய்து வருகிறார்கள் பெரியோர்கள். கிருஷ்ணர் மட்டும் பல நாட்கம் உபதேசம் செய்யவில்லை.

No comments:

Post a Comment