Sunday, 7 June 2020

முசுமுசுக்கை மருத்துவ பயன்கள்!

முசுமுசுக்கை நிலம் படிந்த அல்லது ஏறி வளரும் சிறுகொடி. தாவரம் முழுவதும் சொர சொரப்பான சுணைகள் கொண்டது. இலைகள் வெளிர் பச்சை நிறமானவை. முக்கோண வடிவமானவை. 3-5 மடலானவை. பழங்கள் சிவப்பு நிறமானவை. 

* பூ இதழ்கள் மஞ்சள் நிறமானவை. பழம் காம்பு அற்றது. விதைகள் குழிகளுடன் கூடியவை. மொசுமொசுக்கை, மாமூலி, ஆயிலேயம் என்கிற மாற்றுப் பெயர்களும் உண்டு. தமிழகமெங்கும் வேலிகள், புதர்களில் பெருமரங்களைச் சுற்றி வளர்கின்றது. இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் மிக்கவை.

* முசுமுசுக்கை துவர்ப்பு, கார்ப்புச் சுவைகளும் வெப்பத் தன்மையும் கொண்டது.  வள்ளலார் சிறப்பாக விளக்கியுள்ள நான்கு மூலிகைகளுள் முசுமுசுக்கையும் ஒன்றாகும்.

* முசுமுசுக்கை வேர், பசியை அதிகரிக்கும்; நஞ்சை நீக்கும்; சளியை அகற்றும்; வாந்தியை கட்டுப் படுத்தும்; ஆண்மையை அதிகரிக்கும். 

ADVERTISEMENT

* இலை கோழையை அகற்றும்; இருமல், இரைப்பு, ஜலதோஷம் ஆகியவற்றை குணமாக்கும்.

* இரைப்பிருமல் குணமாக இலையை நிழலில் காயவைத்து தூள் செய்து வைத்துக் கொண்டு 120 கிராம் அளவு தூதுவளை இலைத் தூள் 80 கிராம் அளவுடன் ஒன்றாக கலந்து பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும். இதில் அரை தேக்கரண்டி அளவு வெண்ணெய்யில் கலந்து சாப்பிட வேண்டும். 100 நாள்கள் வரை இவ்வாறு செய்யலாம்.

* கண் எரிச்சல், உடல் எரிச்சல் குணமாக இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் இரு முறை தலை முழுக வேண்டும்.

* வாந்தி குணமாக வேரை உலர்த்தி தூள் செய்து கொண்டு, அரை தேக்கரண்டி அளவு ஒரு டம்ளர் நீரில் இட்டு அரை டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.

முசுமுசுக்கை தோசை: 3 பிடி இலைகளை கால் கிலோ அரிசியுடன் சேர்த்து, அரைத்து மாவாக்கி, தோசை செய்து சாப்பிட வேண்டும். காய்ச்சல், சளியுடன் கூடிய காய்ச்சல், நாக்குச் சுவையின்மை ஆகியவை தீரும்.

முசுமுசுக்கை துவையல்: 3 பிடி இலைகளை நெய் அல்லது நல்லெண்ணெய்யில் வதக்கி துவையலாக்கி, தாளித்து சாப்பிட்டு வர வேண்டும். இரைப்பிருமல், மூக்குப் புண் போன்றவை குணமாகும். ரத்தமும் சுத்தமாகும்.

No comments:

Post a Comment