Tuesday, 16 June 2020

சுரப்பிகளைப் பற்றிய நோய்கள்



சுரப்பிகளைப் பற்றிய நோய்கள்

பொதுச் செய்திகள்

பச்சை மாங்காயைக் கண்டவுடன் நம் வாயில் நீர் ஊறுகிறது. இந்த நீர் எங்கிருந்து ஊறுகிறது? நம் நாக்கின் அடிப்புறத்தே உள்ள உமிழ் நீர்ச் சுரப்பிகளிலிருந்து (Salivary glands) ஊறுகிறது. நம் உடலில் வியர்வை எங்கிருந்து வருகிறது? வியர்வைச் சுரப்பிகளிலிருந்து (Sweat glands) வருகிறது. இந்த வியர்வைச் சுரப்பிகளையும் உமிழ்நீர்ச் சுரப்பிகளையும் போல நம் உடம்பில் ஏராளமான சுரப்பிகள் இருக்கின்றன. அவற்றை நாளம் உள்ள சுரப்பிகள், நாளம் இல்லாச் சுரப்பிகள் என இரண்டு வகையாகப் பிரித்திருக்கிறார்கள். 

நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமானால் இந்த இருவகைச் சுரப்பிகளும் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும். ஆனால், உடம்பில் நச்சுப் பொருள்கள் அளவுக்கு மிஞ்சிக் கூடுதல் ஆகிவிடும்போது அவை இந்தச் சுரப்பிகளைத் தாக்கி நோயுறச் செய்கின்றன. எனவே, அந்த நோய்களிலிருந்து நாம் விடுபட வேண்டுமானால் அந்த நச்சுப் பொருள்கள் விரைவில் வெளியேற்றப்படுவதற்கு வழி செய்ய வேண்டும். அதாவது உண்ணாவிரதத்தையும் உணவுச் சிகிச்சைகளையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும். அத்துடன் நமது பிராணசக்திக்கு ஆக்கம் அளிக்கக்கூடிய இதர சிகிச்சைகளையும் மேற்கொள்ள வேண்டும். 

எப்படியென்றால், 

பொதுவான சிகிச்சைகள்

1. இயன்ற வரையில் உண்ணாவிரதம். 

2. உண்ணாவிரதம் அல்லாத நாள்களில், முற்றிலும் பழ உணவுகள். 

3. முற்றிலும் பழ உணவுகள் அல்லாத நாள்களில் இயன்ற வரையில் பழ உணவுகளும், பசுங்கலவைகளும், மற்றைய முதல்தர உணவுகளும். 

4. சிறிது காலத்துக்குப் பிறகு மறுபடியும் உண்ணாவிரதம், பழ உணவுகள், முதல்தர உணவுகள். 

5. இப்படியே நோய் முழுமையாகக் குணமாகும் வரையில் மறுபடியும் உணவியல் முறைகளைக் கடைப்பிடித்து வரவேண்டும். அத்துடன், சிகிச்சையின் துவக்க காலத்திலும், பிற்பாடு மலச்சிக்கல் ஏற்படும் சமயங்களிலும் நாள்தோறும் இரவில் இளஞ்சூடான எனிமா எடுத்துக் கொள்ள வேண்டும். 

6. தூரிகை உராய்தல் சிகிச்சை, ஈரத்துணியால் துடைத்தல் சிகிச்சை, பிராணாயாமம் சிகிச்சை, வெயிலில் காய்தல் சிகிச்சை... இவற்றை நாள்தோறும் எடுத்துக்கொள்ள வேண்டும். 

7. உப்புக் குளியல் சிகிச்சையை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று தடவை எடுத்துக் கொள்ள வேண்டும். 

8. நாள்தோறும் நல்ல காற்றோட்டமுள்ள வெட்ட வெளியில் நின்று உடற்பயிற்சி செய்ய வேண்டும். 

9. கூடுமான வரையில் உடம்பைத் துணிகளால் மறைக்காமல், நல்ல காற்றும் வெளிச்சமும் படும்படியாகத் திறந்து வைத்திருக்க வேண்டும். 

இந்தச் சிகிச்சைகளை ஒழுங்காகக் கடைப்பிடித்து வந்தால், 

1. உமிழ்நீர்ச் சுரப்பிகளைப் பற்றிய நோய்கள் (Diseases of the Salivary Glands)

2. வியர்வைச் சுரப்பிகளைப் பற்றிய நோய்கள் (Diseases of the Sweat Glands)

3. கழுத்தின் இருபுறங்களிலும் உள்ள நிண நீர்ச்சுரப்பிகளின் வீக்கம் (Enlarged Glands of the Neck)

4. தைராய்டு சுரப்பியைப் பற்றிய நோய்கள் (Graves Diseases and Goitre)

இன்னும் இவை போன்ற சுரப்பி நோய்கள் அனைத்துமே குணமாகிவிடும். 

.

பிளேக்

1. இந்த நோய்க்கு உபவாசத்தைப்போல் குணம் அளிக்கக்கூடிய சிகிச்சை வேறு எதுவும் இல்லை. 

2. அழுக்கரா எனப்படுகிற அஸ்வகந்தியின் பச்சைக் கிழங்கைக் கொண்டுவந்து தண்ணீரில் உரைத்து பிளேக் கட்டியின் மீதும் அதைச் சுற்றி வீக்கம் கண்டுள்ள இடத்திலும் பிளாஸ்திரியாகப் போட வேண்டும். கட்டி விரைவில் பழுத்து உடைந்து விடும். நோயும் குணமாகிவிடும். 

.

மண்ணீரல் வீக்கம் (Enlargement of the Spleen)

1. எலுமிச்சம் பழச்சாறை நாள் ஒன்றுக்குப் பல தடவை சிறிது சிறிதாகக் கொடுத்து வந்தால் நோய் குணமாகிவிடும். 

2. அல்லது, நாள் ஒன்றுக்கு எட்டு அத்திப் பழங்களும், அவற்றோடு கூடவே ஐந்து அல்லது ஆறு பாதாம் பருப்புகளும் கொடுத்து வந்தால், நோய் குணமாகி விடும். 

3. 20 அவுன்ஸ் மாம்பழச் சாறை ஒரு தோலா தேனுடன் கலந்து நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் நோய் குணம் ஆகிவிடும். 

.

கண் நோய்கள்

பொதுச் செய்திகள்

காமிராவிலே லென்ஸ் (Lens) எனப்படுகிற, ஒரு கண்ணாடி வில்லை இருப்பதுபோல, நமது கண்களின் முன் புறத்திலும் ஒரு வில்லை இருக்கிறது. தமிழில் இதை ஆடியென்று சொல்லுவார்கள். ஆங்கிலத்தில் இதற்கும் லென்ஸ் (Lens) என்றுதான் பெயர். 

அதேபோல் கண்களின் பின்புறத்திலே, ரெட்டினா (Retina) எனப்படுகிற நுண்ணிய ஜவ்வு ஒன்று இருக்கிறது, தமிழில் இதை விழித்திரை என்று சொல்லுவார்கள். 

நாம் ஒரு பொருளைக் கண்ணால் பார்க்கும்போது அந்தப் பொருளிலிருந்து பிரதிபலிக்கப்படுகிற ஒளியானது ஆடியின் வழியாக உட்புகுந்து, விழித்திரையை அடைகின்றது. பின்னர் அந்த ஒளியைப் பற்றிய உணர்வு, ஆப்டிக் நெர்வ் (Optic Nerve) என்னும் நரம்பின் வாயிலாக மூளையை அடைகிறது. அப்போதுதான் நாம் அந்தப் பொருளைப் பார்க்கின்ற உணர்வைப் பெறுகிறோம்.

மையோப்பியா எனப்படுகிற கிட்டப்பார்வை (Short Sight), ஹைப்பர் மெட்ரோப்பியா எனப்படுகிற வெள்ளெழுத்து (Long - Sight) ஸ்ட்ரேபிஸ்மஸ் எனப்படுகிற மாறுகண் (Squint) இவையெல்லாம், கண்பார்வையில் ஏற்படக்கூடிய குறைபாடுகளே அன்றி நோய்கள் அல்ல. இவை பெரும்பாலும் மனக்கவலைகளாலும் மனப்போராட்டங்களாலும் ஏற்படுகின்றன. நல்ல ஆரோக்கியமான உடல் நிலையில் உள்ளவர்களுக்கும் கூட, இம்மாதிரிப் பார்வைக் குறைபாடுகள் ஏற்படுவது உண்டு. 

ஆனால் கண் நோய்கள் என்பவை வேறு. அவை வெறும் மனக் கவலைகளால் ஏற்படுபவை அல்ல, மற்ற எல்லா நோய்களையும் போலவே, உடம்பில் தேங்கிப் போயுள்ள நச்சுப் பொருள்கள் கண்களை வந்து தாக்கும்போது, கண்நோய்கள் உண்டாகின்றன. 

ஆகையால், கண் நோய்களைக் குணமாக்க வேண்டும் என்றால், நாம் கண்களுக்கு மட்டும் சிகிச்சை அளித்தால் போதாது, உடம்பில் உள்ள, தாதுக்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்துவதன் மூலமே குணப்படுத்த முடியும். கண்கள் அவ்வாறு குணம் அடையும்போது உடம்பில் வெளிப்படையாகவோ அல்லது மறைவாகவோ இருந்து கொண்டிருக்கின்ற பிற நோய்களும் தாமாகவே குணம் அடைந்து விடுகின்றன. 

பொதுவான சிகிச்சைகள்

எனவே, கண்களில் எந்த நோய் வந்தாலும், நம் தாதுக்கள் அனைத்திலும் உள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றக்கூடிய பொதுச் சிகிச்சைகளை நாம் உடனே கையாளத் தொடங்க வேண்டும். இந்தப் பொதுச் சிகிச்சைகள் பெரும்பாலும் எல்லா நோய்களுக்குமே ஒரே மாதிரியாகத் தான் இருக்கும் என்பதை இதற்குள் நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஆகையால் இதற்கு முந்தின அத்தியாயத்தில் சுரப்பி நோய்களுக்குச் சொல்லப்பட்ட பொதுவான சிகிச்சைகளையே, நாம் கண் நோய்களுக்கும் கையாளலாம். 

.

கண்ணில் நீர் வடிதல் (Epiphora)

சிகிச்சை

1. நாள்தோறும் வெறும்வயிற்றில் சில பாதாம் பருப்புகளை மென்று தின்று வந்தால் சில நாள்களில் இந்த வியாதி குணமாகிவிடும். 

2. கருவேலங் கொழுந்தின் சாறைக் கண்களின் இமையிலே தடவி வந்தால், ஒரு சில நாள்களில் குணம் ஆகிவிடும். 

.

கன்ஜங்க்டிவிடிஸ் (Conjunctivitis)

கண்விழிகளுக்கு மேலேயும், இமைகளின் உட்புறத்திலும் உள்ள ஒரு மெல்லிய தோலுக்கு, கன்ஜங்டிவா என்று பெயர். இந்தத் தோலில் வீக்கமும் எரிச்சலும் ஏற்படும் போது, கன்ஜங்க்டிவிடிஸ் என்ற நோய் ஏற்படுகிறது. 

சிகிச்சை

1. பேதி உப்பை (Epsom Salt) சூடான வெந்நீரில் கரைத்து, கண்களை இறுக மூடிக்கொண்டு, அந்த வெந்நீரால் அவற்றைக் கழுவ வேண்டும். 

2. கண்களை நன்கு மூடிக்கொண்டு இளஞ்சூரியனைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். 

3. கருவேலங் கொழுந்தை வெண்ணெய்போல் அரைத்து, இதை இரவில் படுக்கப் போகும்போது கண்களை மூடிக்கொண்டு, அவற்றின் மேலே அப்பிக் கட்டுப் போட்டுக் கொள்ள வேண்டும். இப்படி ஒரு சில நாள்களுக்குச் செய்தால் நோய் குணமாகிவிடும். 

.

ட்ரக்கோமா (Trachoma)

கன்ஜங்டிவிடிஸ் என்னும் நோய் மிகக் கடுமையானதாய் இருக்குமானால், அதற்கே ட்ரக்கோமா என்று பெயர். 

சிகிச்சை

மேலே கன்ஜங்க்டிவிடிசுக்குக் கூறப்பட்ட அந்த சிகிச்சை இதற்கும் பொருந்தும். 

.

மாலைக் கண் (Night Blindness)

இந்த நோய் உள்ளவர்களுக்குப் பகல் எல்லாம் நன்றாகக் கண் தெரியும். இரவு வந்துவிட்டால் கண் தெரியாது. 

சிகிச்சை

சீயக்காய் எனப்படுகிற சிகைக் காய்களை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அதை நன்றாய்க் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து ஆறின் பின்பு, அந்தத் தண்ணீரிலே அதைக் கையால் பிசைந்துவிட வேண்டும். சிறிது நேரத்திற்குப் பிறகு, அதில் தெளிவாக மேலே நிற்கும் தண்ணீரை இறுத்து, ஒரு சுத்தமான கண்ணாடிப் புட்டியில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இரவில் படுக்கப் போகும்போது, ஒரு சிறிய கண்ணாடிக் கோலால் (eye - rod) அந்தத் தண்ணீரைத் தொட்டுக் கண்ணில் போட்டுக்கொள்ள வேண்டும். ஒரு சில நாள்களில் நோய் குணமாகிவிடும். 

.

காடராக்ட் (Cataract)

இந்த நோய் வந்துவிட்டால், அதைக் குணப்படுத்துவதற்கு அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழியில்லை என்பது அல்லோபதி டாக்டர்களின் கருத்து. அந்த அறுவை சிகிச்சைக்காக நோயாளி பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆனால் இயற்கை வைத்தியத்தில் அப்படிக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நோய் தோன்றியவுடனேயே சிகிச்சையைத் தொடங்கி விடலாம். 

சிகிச்சை

1. புதிதாகப் பறித்த ஆடாதோடை இலைகளைச் சாறு பிழிந்து, ஒரு மெல்லிய துணியால் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பின்னர் அந்தச் சாறை ஒரு கலுவத்தில் இட்டு அரைத்துக் கொண்டேயிருந்தால் அதில் உள்ள ஈரச் சத்தெல்லாம் போய்விடும். பின்னர் அதை ஒரு புட்டியில் எடுத்து வைத்துக் கொண்டு, காலையிலும் மாலையிலும் கண்ணில் தடவி வரவேண்டும். அப்படித் தடவி வரும் காலத்தில் காரமான பொருளையும் மசாலாக்களையும் சாப்பிடக் கூடாது. மிகுதியான ஒளியோ தூசியோ கண்ணில் படக்கூடாது. சிறிது காலத்தில் காடராக்ட் குணமாகிவிடும்.

2. நோயாளியிடம் ஒன்றரைக் கிலோ சாம்பார் வெங்காயத்தைக் கொடுத்து அவர் கையாலே அதைத் தூளாக நறுக்கச் சொல்ல வேண்டும். அப்படி நறுக்கும் போது, அந்த வெங்காயச் சாறின் ஆவி அவர் கண்களில் வந்து தாக்கும்படியாக, வெங்காயத்தை முகத்துக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டு நறுக்க வேண்டும். அப்போதே அவருடைய கண்களிலிருந்து தண்ணீர் கொட்டும் அப்போது அவருடைய காடராக்டும் கரையத் தொடங்கும். 

இந்தச் சிகிச்சையை ஒரு தடவை செய்தாலே குணம் தெரியும். வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாள்கள் இதைச் செய்துகொண்டு வந்தால் எப்பேர்ப்பட்ட காடராக்டும் குணமாகிவிடும். 

.

கண் வலி

1. புளியம்பூவை அரைத்துக் கண்களை சுற்றிப் பற்றுப் போட வேண்டும். கண்வலி நீங்கும். கண் சிவப்பு மாறும். 

2. சம்பங்கிப்பூவை ஆலிவ் எண்ணெய் விட்டு வெண்ணெய் போல் அரைத்து ஒரு புட்டியில் வைத்துக் கொள்ள வேண்டும். அதில் சிறிது எடுத்துக் கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டால், கண் நோய்கள் குணமாகும். 

.

கண் ஒளி பெருக

1. பாதாம் பருப்பு, பேரீச்சம் பழம் வகைக்கு 15 கிராம், அத்திப்பழம் 10 கிராம், சோம்பு 5 கிராம் இவற்றைச் சுத்தம் செய்து அரைத்துப் பாலில் கலக்கி இரவில் படுக்கப் போகும்போது வெறும் வயிற்றிலே சாப்பிட வேண்டும். அதற்கு அப்புறம் இரண்டு மணி நேரத்துக்குத் தண்ணீர் குடிக்கக்கூடாது. இப்படி 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஒரு புதிய ஒளி உண்டாகும். கண்ணாடியைக் கழற்றி எறிந்து விடலாம். 

2. அதிகாலையில் எழுந்தவுடன் கண்களை நன்கு கழுவி விட்டு அவற்றிற்கு மை தீட்டுகிற மாதிரித் தேனைத் தடவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து தடவி வந்தால் கண் நோய்கள் வரமாட்டாது; கண் பார்வை கூர்மை அடையும். 

3. முருங்கைக் கீரையைச் சமையல் செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண் ஒளி பெருகும்! 



நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

No comments:

Post a Comment