Sunday, 26 July 2020

நல்லெண்ணெயில் விஞ்ஞானத்தை புகுத்திய நமது முன்னோர்கள்!!!

நல்லெண்ணெயில் விஞ்ஞானத்தை புகுத்திய நமது முன்னோர்கள்!!!

வாடிக்கையாளர்களுக்கு நல்லெண்ணெய் எடுத்து கொடுக்க செக்கு எண்ணெய் கடைகாரர்கள் பயன்படுத்திய பித்தளை பாத்திரம்

நமது பாட்டனும், பூட்டனும் என்னத்த சாதிச்சாங்க...என்று நாம் அவ்வப்போது சலிப்பதுண்டு. ஆனால் அவர்கள் செய்து வைத்த ஒவ்வொரு விடயத்திலும் ஏதோ ஒரு தத்துவம் அடங்கித்தான் கிடக்கிறது என்பதற்கு இதோ இந்த நல்லெண்ணெயும் ஒரு உதாரணம்.

எங்கும் இல்லாத சில விடயங்கள் மதுரைக்கு மட்டுமே உண்டு. கடலில் கலக்காத வைகை, மனதை மயக்கும் மல்லிகைப்பூக்கள், இதே மல்லிகை போன்ற இட்லியும், கொத்துமல்லி சட்னியும்...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இது போல் மதுரையில் ஒரு விடயம் நீண்ட நாட்களாக இருந்தது. அது மரச்செக்கில் பிழிந்து எடுத்த கமகமக்கும் நல்லெண்ணெய். மதுரை சிம்மக்கல் அருகில் இருக்கிறது செல்லத்தம்மன் கோவில்.

இந்த பகுதியில் வாணிப செட்டி குடும்பத்தை சேர்ந்தவர்கள் நல்லெண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வந்தார்கள். இவர்களது கடையில் நல்லெண்ணெய் வாங்க எப்போதும் ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள். இப்படி வருபவர்கள் கைகளில் எல்லாம் சில்வரால் ஆன ஒரு குடுவை இருக்கும். இந்த குடுவையோடு வந்து வரிசையில் நிற்பார்கள். தங்கள் முறை வந்தவுடன் கடையில் அளந்து கொடுக்கும் நல்லெண்ணெயை வாங்கிச் செல்வார்கள்.

அப்படி என்ன தான் இவர்கள் விற்கும் இந்த நல்லெண்ணெயில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஒரு தடவை புகைப்படக்காரருடன் சேர்ந்து அங்கே போனோம். கடைக்காரர் எப்போதும் போல் விற்பனையில் படு மும்முராக இருந்தார். நாங்கள் இந்த எண்ணெயின் ரகசியங்களை தெரிந்து கொள்ள வந்திருப்பதாக சொன்னவுடன் ஆர்வத்துடன் பேச தொடங்கினார். தனது நல்லெண்ணெய் பற்றி இன்னும் பல மக்களுக்கு தெரியட்டுமே என்று தான் ஆர்வமாக பேட்டி கொடுப்பதாக நினைத்தேன்.

அவரும் சொல்லத் தொடங்கினார். 'அதாவது தேங்காய் எண்ணெயில் இருந்து எண்ணெய் எடுத்து அதற்கு தேங்காய் எண்ணெய், கடலையில் இருந்து எண்ணெய் எடுத்து கடலை எண்ணெய் என்று நமது முன்னோர்கள் பெயர் வைத்தார்கள். ஆனால் எள்ளில் இருந்து எண்ணெய் எடுத்து விட்டு, அதற்கு மட்டும் நல்லெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள். ஏன் இப்படி?

அதற்கு எள் எண்ணெய் என்று தானே பெயர் வைத்திருக்க வேண்டும்? அனால் வைக்க வில்லை. இந்த எண்ணெயின் எல்லையில்லாத நன்மைகளை பார்த்து விட்டு, நல்லதை செய்யக்கூடிய நல்லெண்ணெய் என்பதை அதன் பெயரிலேயே சுட்டிக்காட்டிவிட்டார்கள்.

இன்றைக்கும் கடைகளில் நல்லெண்ணெய் பல பிராண்டுகளில் விற்கப்படுகிறது. ஆனால் நாங்கள் விற்கும் நல்லெண்ணெய்க்கும் அவர்கள் விற்கும் நல்லெண்ணெய்க்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் நல்லெண்ணெய் என்பது, பெரிய இயந்திரங்கள் மூலம் எள்ளை அரைத்து பெறப்படும் எண்ணெய். ஆனால் நாங்கள் கடந்த 120 ஆண்டுகளாக மரச்செக்குகளில் தான் எள்ளை போட்டு ஆட்டி எண்ணெயை பிழிந்து எடுக்கிறோம். அதாவது எள்ளுடன் கருப்பட்டியை சேர்த்து சிறிதுசிறிதாக ஒரே வேகத்தில் மரத்திலான செக்குகளை சுழல வைப்பதன் மூலம் எள்ளில் இருந்து எண்ணெய் சிறிது சிறிதாக வெளியே வரும்.

இப்படி மரச்செக்கிலிருந்து பிழியப்பட்டு வரும் எண்ணெயை பித்தளையால் ஆன பாத்திரத்தில் தான் வடித்தெடுப்போம். அதுவும் குறிப்பாக இந்த எண்ணெயை எடுத்து ஊற்ற பயன்படும் பித்தளை பாத்திரம் என்பது எங்களுக்காகவே பிரேத்யேகமாக தயாரிக்கப்பட்டது. இந்த பித்தளை பாத்திரத்தின் உட்புறத்தில் ஈயம் பூசப்பட்டிருக்கும். இதை வைத்து தான் செக்கிலிருந்து வரும் எண்ணெயை எடுத்து சில்வர் பாத்திரத்தில் ஊற்றி சேமிப்போம். இதே போல எங்களின் வாடிக்கையாளர்கள் எங்களிடம் எண்ணெய் வாங்க வரும் போது சில்வர் பாத்திரத்தை தான் கொண்டு வரச்சொல்லி அதில் தான் எண்ணெயை ஊற்றி கொடுப்போம்.

இதன் அறிவியல் தத்துவம் எங்களுக்கு முன்னோர்களுக்கு தெளிவாக தெரியாவிட்டாலும், மரச்செக்கில் கருப்பட்டியுடன் சேர்த்து ஆட்டப்பட்ட எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணையை, பித்தளையில் ஈயம் பூசப்பட்ட பாத்திரத்தின் மூலம் செக்கிலிருந்து எடுத்து ஊற்றி சில்வர் பாத்திரத்தில் சேமிக்கப்படும் நல்லெண்ணெய்க்கு சில அபாரமான குணங்கள் இருப்பதை நடைமுறையில் தெரிந்து வைத்திருந்தார்கள்.

இந்த மரச்செக்கு எண்ணெயில் பலகாரங்கள் செய்தால் அதன் மணமும், ருசியும் அபாரமாகவும், அலாதியாகவும் இருக்கும்.

எங்களுக்கு பெரிய அளவுக்கு இந்த தொழிலில் லாபம் இல்லாவிட்டாலும், நாங்கள் 4 வது தலைமுறையாக இந்த தொழிலை செய்து வருகிறோம். இதனை விடவும் மனதில்லை' என்றார். நாங்கள் இவரை பார்த்து பேசியது கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு. தற்போது இந்த இடத்தில் மரச்செக்கு எண்ணெய் விற்கப்படுவதில்லை. இங்கு இந்த விடயத்தை பதிவிட காரணம் இப்படி எத்தனையே பாரம்பரியமான தயாரிப்பு முறைகள் மறைந்து போய்க் கொண்டே இருக்கின்றன. இதில் தமிழர்களின் வாழ்வோடு இடம் பிடித்த செக்கு நல்லெண்ணெயும் காணாமல் போனது வருத்தியது.

பொதுவாக பெண் குழந்தைகள் பருவமடைந்த நிலையில் அவர்களுக்கு உளுந்தை களியாக கிளறி அதில் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட கொடுப்பார்கள். இது இடுப்பு பகுதிக்கு நல்ல வலுவை தரும் என்பார்கள். தற்போது இந்த பழக்கம் எல்லாம் மறைந்து விட்டது. இத்துடன் இந்த செக்கு நல்லெண்ணெயும் தான். செக்கு நல்லெண்ணெய்க்கும், தற்பேர்து பாக்கெட்டுகளில் அடைத்து வரும் நல்லெண்ணெய்க்கும் என்ன அப்படி வித்தியாசம் இருக்கும் என்று எனது நண்பர் ஒருவர் இப்படி சொன்னார்....

" அதாவது பெரிய பெரிய எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் பெரிய இரும்பு உலக்கைகளை கொண்டு எள்ளை ஆட்டி எண்ணெயை பிழிவார்கள். அப்போது கடுமையான வெப்பம் இந்த உலக்கை உருளைகளுக்கு இடையே ஏற்படுவதுண்டு. அந்த வெப்பத்தால் இயற்கையாகவே நல்லெண்ணெயில் மறைந்திருக்கும் சில அதிசயமான குணசாங்கள் குறைந்து போய்விடும்.

ஆனால் மரச்செக்கில் கருப்பட்டியுடன் சேர்த்து எள்ளை ஆட்டும் போது மரச்செக்கில் அவ்வளவாக வெப்பம் ஏறாது. அப்படியே ஏறும் குறைந்த வெப்பத்தையும் இந்த கருப்பட்டி சரி செய்து ஒரு வெப்ப சமமாக்கல் இயற்பியல் தத்துவத்தை அங்கே செயல்படுத்துகிறது. இதனால் இப்படி மரச்செக்கில் ஆட்டி பிழிந்தெடுக்கப்படும் நல்லெண்லெண்ய்க்கு ஒரு அபாரமான மணமும், குணமும் இருப்பது இயற்கையே" என்றார்.

நம்முடைய நல்லெண்ணை , கடலை எண்ணை,  தேங்காய் எண்ணை , வேப்ப எண்ணை , விளக்கெண்ணை போன்ற அனைத்தையும் மர செக்கில் தயாரித்ததை பயன்படுத்தினால் நமது ஆரோக்கியம் மேம்படும்.

ஆக...படிப்பு குறைவாக இருந்தாலும் நமது முன்னோர்கள் இன்றைய விஞ்ஞானிகளுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை எப்படியெல்லாம் நிருபித்திருக்கிறார்கள் பாருங்கள்.


No comments:

Post a Comment