Saturday, 4 July 2020

குரு பூர்ணிமா..!*

*குரு பூர்ணிமா..!*

வெயில்கால கதிர்திருப்பத்திற்குப் பின் வரும் முதல் பௌர்ணமி (ஆனி மாதம்) குரு பௌர்ணமி எனப்படுகிறது.

குரு பூர்ணிமா என்றால் என்ன?

குரு பூர்ணிமா என்பது ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதமும் வரும் பெளர்ணமி திதியை குரு பூர்ணிமா என கொண்டாடப்படுகின்றது.

தட்சிணாமூர்த்தியாக ஈசன் அமர்ந்த குரு பௌர்ணமி நாள் இன்று!

இன்று ஆனி பௌர்ணமி. இந்த நாளை வியாச பூர்ணிமா, குரு பௌர்ணமி என்றும் அழைப்பார்கள். 

வியாசபூஜை எனும் குருவழிபாடு இந்த நாளில் விசேஷம். கல்வி, கலைகள் கற்ற மாணவர்கள் ஆடி மாதம் வரும் பௌர்ணமியில் கல்வி மற்றும் ஞானம் அளித்த குருவினை வணங்கி வழிபடுவார்கள். 

அதுமட்டுமின்றி கலை, கல்வியின் தெய்வங்களான கீதை அருளிய ஸ்ரீகிருஷ்ணர், தட்சிணாமூர்த்தி, ஹயக்ரீவர், சரஸ்வதி, குருபகவான், புதன் போன்றவர்களை வணங்கி அருள்பெறுவார்கள். 

பாரதம் சொன்ன வியாசர், ராமாயணம் எழுதிய வால்மீகி, உபநிடதங்களுக்கு விளக்கம் இயற்றிய ஆதிசங்கரர், மத்வர், ராமானுஜர் போன்ற ஞானியர்களையும் வணங்குவது வழக்கம். இந்த நாளில் ஞான வடிவாக புத்த பகவானை வணங்குவதும் பௌத்தர்களின் வழக்கம்.

தட்சிணாயணத்தின் முதல் பௌர்ணமியான இன்றுதான் ஆலமர்ச்செல்வனான தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தடியே தெற்கு நோக்கி அமர்ந்து, சனகாதி முனிவர்களுக்கு மௌன நிலையில் முத்திரை காட்டி உபதேசித்தார். ஆதிசிவன் குருவாக இருந்து உபதேசித்த நாள் என்பதால் இந்த பௌர்ணமி குரு பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது. 

குருவின் திருவருள் நிரம்பி வழியும் இந்த நாளில் நமக்கு கல்வியும் ஞானமும் வழங்கிய எல்லா குருமார்களையும் வணங்கி மானசீக வாழ்த்தைப் பெற்றுக்கொள்வோம். 

இந்த நாளில் மேற்கொள்ளப்படும் தியானமும் தவமும் சிறப்பானவை என ஆன்மிக நூல்கள் தெரிவிக்கின்றன.

ஆதியோகியாம் சிவனிடம் இருந்து அவரது 7 சிஷ்யர்களான சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானம் பரிமாறப்பட்ட முதல் நாள், ஆதியோகியாம் சிவன் ஆதிகுருவாக பரிணமித்த திருநாள், குருபௌர்ணமித் திருநாள். ஆதிகுரு பரிமாறிய ஞானத்தை சப்தரிஷிகள் உலகமெங்கும் கொண்டு சேர்த்தனர். 

இன்றும்கூட உலகின் எந்த மூலையில் ஆன்மீக செயல்முறை பின்பற்றப்பட்டாலும் அது ஆதியோகி சிவன் உருவாக்கிய அடித்தளத்தில் இருந்தே வேர்விட்டுள்ளது.

ஏன் கொண்டாடப்படுகிறது:

ஆதி கடவுளான மகா விஷ்ணுவிடம் இருந்த வேதங்களை, அவரின் அம்சமான வியாசர் எனும் மகரிஷி 4 வேதங்களாக பிரித்தார்.
அதை மேலும் எளிமையாக புரிந்து கொள்ள 18 புராணங்களாக தொகுத்தார். இப்படி வேதங்களை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தொகுத்ததோடு, வழி வழியாக அது ஒரு குருவிடம் இருந்து அவரது சீடருக்கு கொண்டு வரப்பட்டது,
அப்படி வாய் மற்றும் காது வழியே கடந்து இத்தனை காலங்களாக வேதங்கள் கடந்து வந்துள்ளன.

ஹயகிரீவர் அவதாரம்:

மகா விஷ்ணு ஹயகிரீவரராக அவதரித்து குருவாக இருந்து உபதேசம் செய்ததாக கூறப்படுகிறது.

குரு பகவானன தட்சிணாமூர்த்தி:

சைவர்களைப் பொருத்த வரையில் தெற்கு திசையைப் பார்த்து கல்லால் மரத்தின் கீழ் அமர்ந்து மெளன உபதேசமாக சனாதன குமரர்கள் 4 பேருக்கு உபதேசம் செய்து வருகிறார்.

அவருடைய உபதேசங்கள் அடுத்தடுத்து வழி வழியாக சங்கராச்சார்யார்கள் மூலமாக நாம் வாழும் காலம் வரை வந்ததாக கூறப்படுகிறது.

உபதேசம் செய்த முருகப் பெருமான்:

முருகப்பெருமான் ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தை குருவாக இருந்து சிவ பெருமான், அகஸ்தியர், அருணகிரி நாதர் ஆகிய மூவருக்கு சொன்னதாக கூறப்படுகிறது.

சிவ பெருமானுக்கே உபதேசம் செய்ததால் தகப்பன் சாமி என முருகன் அழைக்கப்படுகிறார்.

குரு பூர்ணிமா முக்கியத்துவம்:

மாதா, பிதா, குரு தெய்வம் என்பார்கள். பிறப்பை கொடுத்த தாய், வளர்த்தெடுக்கும் தந்தை, அறிவை கொடுக்கும் குரு ஆகியோரின் மூலமாக தெய்வத்தை பார்க்கலாம் என்பதற்காக தெய்வத்திற்கு முன் குருவை வைத்து இப்படி வரிசைப் படுத்தினார்கள்.

அப்பேற்பட்ட குருவை வணங்கும் விதமாக “குரு பூர்ணிமா” கொண்டாடப்படுகிறது. இப்படி குருவுக்கெல்லாம் குருவாக இருக்கும் வியாசர், தட்சிணா மூர்த்தி, முருகப் பெருமான் என குருக்களை வழிபடுவது வழக்கம்.

குரு பூர்ணிமா தினத்தில் நமக்கு பாடம் கற்றுக் கொடுத்த குருவை நாம் மனதார நினைத்தலும், கோயிலுக்கு சென்று வணங்குவதும் நல்லது.

தற்போது நாம் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் ஆசிரியர் தினம் போலவே, காலம் காலமாக குருவை நினைக்கும் வகையில், தான் கற்று வெளியேறிய பிறகும் தன்னுடைய குருவை நினைக்க வேண்டும் என்பதற்காக பின்பற்றப்பட்டு வந்த தினம் தான் குரு பூர்ணிமா என்பதால், இன்று குறைந்த பட்சம் நம் குருவை நினைக்கவாவது செய்யலாம்.

இந்நாளில் துறவிகள் மட்டுமில்லாமல், ஞான மற்றும் மோட்ச சாஸ்திரத்தை அறிய முற்படும் அனைவரும் தங்களது குருவையும், வியாச பகவானையும் ஆராதிக்க வேண்டும். வியாச பகவானை நிமித்தமாக வைத்து, ஆதிகுருவில் (சிவபெருமான் அல்லது ஸ்ரீமன் நாராயணன்) தொடங்கி, தங்களுடைய இப்பொழுதைய குரு வரை குரு பரம்பரையில் உள்ள அனைவரையும் இந்நாளில் வழிபட வேண்டும்.

வேதத்தை நான்காக வகுத்தவர் வியாசர். பகவான் கிருஷ்ணன் அருளிய கீதையைத் தொகுத்தவர் அவர்தான். பிரம்ம சூத்திரத்தை (வேதங்களின் சாரம்) எழுதியவர் வியாசர். இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ப்ரஸ்தான த்ரயம் எனப்படும் மூன்று நூல்களிலுமே, வியாச முனிவரின் பங்குள்ளது.

எனவே வியாச பகவானை முன்வைத்து, ஆனி மாதப் பவுர்ணமியன்று குரு பூர்ணிமா அனுசரிக்கப்படுகிறது.

*ஓம் குருவே சரணம்..!*

*“உலகின் குருவாய் பாரதம் ஆகிட சித்தர்கள், ஞானிகள், குருமார்களை வணங்கி ஆன்மீக வழியில் பயணிக்க வேண்டும் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்”*
அன்புடன் ரம்யா

No comments:

Post a Comment