Wednesday, 22 July 2020
சுகபிரம்மர்
குருஷேத்திரத்தில் வேதவியாசர் ஹோமத்திற்கான அக்னியை தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது, கிருதாசீ என்ற தேவலோகப் பேரழகி அங்கு வந்தாள். அவளுடைய அழகில் மயங்கிய வியாசர், தான் ஒரு தபஸ்வி என்பதையும் மறந்து அவளது அழகில் மனதைப் பறி கொடுத்தார். கிருதாசீயும் அவருடைய மனநிலையைப் புரிந்துகொண்டாள். தவசிரேஷ்டரின் மனதில் சபலம் ஏற்பட்டால், சாபத்திற்கு ஆளாவோமே என்ற பயத்தில் தப்பியோட முயன்றாள். நினைத்த நேரத்தில் நினைத்த உருவத்தைப் பெறும் கிருதாசி வானத்தை நிமிர்ந்து பார்த்தாள். கிளிகள் கூட்டமாக ஓரிடத்தில் நின்றன. தானும் ஒரு பச்சைக் கிளியாக மாறினாள். கிளிக்கூட்டத்தோடு சேர்ந்து கொண்டாள். அவள் கிளியாக மாறிய பின்னும்கூட, வியாசரால் அவளை மறக்க முடியவில்லை. அவரது அந்த நினைவே, அந்தக் கிளியை கர்ப்பமாக்கியது.மீண்டும் சுயவடிவமெடுத்த கிருதாசீ தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்தாள். அவளுக்கு கிளி முகத்துடன் ஒரு பிள்ளை பிறந்தான். (வேறு சில வழிகளில் ஹோமகுண்டத்தில் அவர் பிறந்தார் என்றும் சொல்வதுண்டு) அப்பிள்ளை தான் சுகபிரம்மர். சுகம் என்றால் கிளி. தனது கிளி முகப் பிள்ளைக்கு சுகர் என்று பெயர் சூட்டினார் வியாசர்.குழந்தையை புனிதமான கங்கை நதியில் நீராட்டினார். உடனே குழந்தை சிறுவனாக மாறினான். வேதவியாசரின் பிள்ளை என்பதால் தேவர்கள் பூமாரி பொழிந்து குழந்தையை வாழ்த்தினர். மங்கல வாத்தியங்கள் முழங்கின. மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுத் தரவேண்டுமா? வியாசரின் பிள்ளைக்கும் அவரைப் போலவே எல்லா ஞானமும் ஆற்றலும் அறிவும் இயல்பாக இருந்தன. இருந்தாலும் சம்பிரதாயத்திற்காக தேவகுரு பிரகஸ்பதி சுகருக்கு வேதங்களைக் கற்பித்தார்.
No comments:
Post a Comment