இளம் வயதில் துறவு பூண்ட ஆதிசங்கரர். தமது துறவு நெறிக்கேற்ப நாள்தோறும் இறைவழிபாடு முடிந்து பிச்சை ஏற்கப் புறப்படுவார். மற்றவர் இட்டதை உண்டு தம் இறைப்பணியைத் தொடருவார்.அம்முறைப்படி ஒரு நாள் ஸ்ரீசங்கரர் சோமதேவர் என்பவருடைய இல்லத்திற்குச் சென்று "பவதி பிஷாந்தேஹி" என மும்முறை உச்சரித்தார். சோமதேவர் அப்போது இல்லத்தில் இல்லை. அவருடைய துணைவியார் தருவசீலை ஆங்கிருந்தார். பிச்சைக்கு வியப்பு மூண்டது. பாலசங்கரரைப் பார்த்த வுடனே, பரவேஸ்வரனே பிச்சைக்கு வந்துவிட்டாரே என்று அதிசயித்தார். ஆனால் அவரிடத்தில் பிச்சை இடுவதற்கான பொருள் ஏதும் இல்லை.
கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்த சோம தேவர் வறுமையிலும் தேர்ச்சி அடைந்திருந்தார். அவரும் சங்கரரைப் போலவே பிச்சை கேட்கச் சென்றிருந்தார். வீட்டில் ஒன்றும் இல்லை. எனவே, மிகுந்த வருத்தத்துடன் அம்மையார் சங்கரரைப் பார்த்து, "நான் கொடிய பாவம் செய்தவள். பகவானே பிச்சைக்கு வந்திருக்கும் போது, கொடுப்பதற்கு ஒன்று மில்லையே என ஏங்குகிறேன். என்னை மன்னிக்க வேண்டும்" என இறைஞ்சினார். ஆனால் சங்கரரோ, "அன்னையே! அடியேனுக்குக் கொடுக்க ஏதும் இல்லை எனக் கலங்க வேண்டாம். அன்னமிடவழி இல்லை என்றால் பரவாயில்லை. அன்னத்திற்குத் துணையாக இருக்கும் உண்ணக்கூடிய பொருள் எதுவானாலும், எவ்வளவு சிறிதளவேனும் அன்போடு தாருங்கள்" என வேண்டினார். உடனே, வீட்டிற்குள் சென்று பார்த்த தர்வசீலை அம்மையாருக்கு ஒன்றும் கிடைக்காமல் ஒரு பழைய பாத்திரத்தில் நெடுநாட்களுக்கு முன்பு செய்த நெல்லிக்காய் ஊருகாய் ஒன்று மீதமிருந்தது. அந்த நெல்லிக்காயை மிகுந்த மனத்தயக்கமுடன் மகான் சங்கரரின் பிச்சைப் பாத்திரத்தில் அம்மையார் இட்டார்.
இதனால் மனம் மகிழ்ந்த ஆதிசங்கரர், " அன்னையே! அன்புடன் தாங்கள் எனக்களித்த இந்த நெல்லிக்காயைவிடச் சிறந்த பொருள் இவ்வுலகில் எதுவும் கிடையாது. இது என் தாயாருக்கு மிகவும் பிடித்தமான உணவாகும். அதிதிக்கு அளித்த இந்த உணவால் உங்களைப் பிடித்திருந்த வறுமை இன்றோடு அழிந்துவிட்டது. இனிமேல் உங்கள் கணவர் பிச்சைக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை" எனக்கூறிவிட்டு, செல்வத்துக்கு அதிதேவதையான ஸ்ரீமஹாலட்சுமி தேவியாரை மனதால் நினைத்து தியானம் செய்து இந்த "கனகதாரா" ஸ்தோத்திரத்தைப் பாடி ஸ்ரீலட்சுமி தேவியாரை வழிப்பட்டார்.
உடனே தேவி, சங்கரர் முன் எழுந்தருளி, வறுமையில் வாடிய குசேலரும் சுசிலையும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவருளால் குபேரசம்பந்தைப் பெற்றனர். வறுமையில் வாடியவர்கள் பெற்ற செல்வத்தால் நியமங்களை, ஆசார அநுஷ்டானங்களை மறந்து சுக பசி அமர்த்தாமல் தவிக்கவிட்டனர். எனவே, அப்பாவ வினையின் பயனாக, இந்த யுகத்தில் அவர்கள் இங்கே வறுமைப்பிடியில் சிக்கித்தவிக் கின்றனர் என்ற உண்மையை ஸ்ரீ சங்கரரிடம் ஸ்ரீமஹாலட்சுமி தேவி புலப்படுத்தினார். இருப்பினும் வறுமையிலும் திட மனதுடன் ஆதிசங்கரருக்கு நெல்லிக்காயைப் பிச்சையாக இட்ட காரணத்தினால், ஸ்ரீலட்சுமி தேவி மனமுருகி அந்த இல்லத்தின் மீது தங்கமயமான நெல்லிக்காய்களை மழைபோலப் பொழிந்தார். அது மட்டுமில்லாமல், இந்தக் கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடுவோர் அனைவருக்கும் தன் நல்லருள் கிடைக்கும் என உருதி மொழிந்தார்.
No comments:
Post a Comment