Saturday, 1 August 2020

தொண்டை கட்டு...

தொண்டை வலி, கரகரப்புக்கு எளிய வைத்தியங்களை கூறும், இயற்கை மருத்துவர், ஜீவா சேகர்: மழை, பனி போன்ற குளிர்ச்சியான தட்பவெப்பம்; வெயில் நேரத்தில் குளிர்பானங்கள், ஐஸ் வாட்டர் குடிப்பது; இரவு துாங்கப் போவதற்கு முன், குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்வது போன்ற பல காரணங்களால், தொண்டையில் கரகரப்பு, தொண்டைக்கட்டு, வலி ஏற்படும். தொண்டையில் சளி கட்டி, பாடாய்படுத்தும். இதற்கு தீர்வாக, வெற்றிலைக் கொடியின் தண்டுப் பகுதியை மட்டும் வாயில் போட்டு சுவைத்தால், தொண்டை கரகரப்பு நீங்கும். வெற்றிலை சாறு அல்லது மையாக அரைத்த வெற்றிலையுடன், சுண்ணாம்பு சேர்த்து தொண்டையில் தடவினால், தொண்டை கட்டு நீங்கும். பசும்பாலுடன், 10 கிராம் மஞ்சளை கலந்து காய்ச்சி குடித்து வந்தால், தொண்டை தொடர்பான நோய்கள் விலகும். பசும்பாலுடன் பூண்டுப் பற்கள், மிளகுத்துாள், மஞ்சள் துாள், பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி, நன்றாக கடைந்து குடித்து வந்தால், சளித் தொந்தரவுகளில் இருந்து விடுபடலாம். சுக்கு, திப்பிலியுடன், மிளகு அல்லது வால்மிளகு சேர்த்து நெய் விட்டு வறுத்து, பொடித்துக் கொள்ளவும். இரண்டு சிட்டிகை பொடியை, தேனுடன் சேர்த்து காலை, மாலை என, சாப்பிட்டு வந்தால், தொண்டை கரகரப்பு நீங்கும்.முருங்கை இலை சாறு அல்லது குப்பைமேனி இலைச்சாற்றுடன், சுண்ணாம்பு சேர்த்து பிசைந்து தொண்டையில் பூசினால், தொண்டைக்கட்டு, தொண்டை கரகரப்பு விலகுவதுடன், சளி தொடர்பான பிரச்னைகள் நீங்கும். அதிமதுரத்துடன், வால்மிளகு, பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி, இதமான சூட்டில் குடித்து வந்தால், தொண்டைப் புண் சரியாகும். வெறுமனே அதிமதுரத்தை மட்டும் வாயில் போட்டு சுவைத்தாலும், தொண்டை கரகரப்பு நீங்கும். துளசியுடன், துாதுவளை, ஓமவல்லி, ஆடாதொடை, மிளகு, சீரகம் சேர்த்து காய்ச்சி குடித்து வந்தாலும், சளித்தொல்லை, தொண்டை நோய்கள் குணமாகும். வால்மிளகு - 10, கிராம்பு - 5, ஏலக்காய் - 5, சுக்குப் பொடி - அரை டீஸ்பூன் எடுத்து, இரண்டு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ப்ளாஸ்க்கில் வைத்துக் கொள்ளுங்கள். இதை காலை, மதியம், மாலை என, அரை டம்ளர் வீதம், தேன் சேர்த்துக் குடித்தால், தொண்டைக்கட்டு நீங்கும்; குரலில் நல்ல மாற்றம் தெரியும். கற்பூரவல்லி இலைச்சாற்றுடன் தேன் கலந்து குடிப்பது, இஞ்சியை நசுக்கிப் போட்டு, நீர் விட்டு கொதிக்க வைத்துக் குடிப்பது, துளசி இலை ஊறிய நீரை குடித்து வருவது ஆகியவை, தொண்டை தொடர்பான பிரச்னைகள் நீங்க உதவும்.

No comments:

Post a Comment