Monday, 3 August 2020

விட்டல...விட்டல...

மஹாராஷ்ட்ராவில் ஸத்யபுரி என்ற கிராமத்தில் பிறந்தவர். இவருக்குப் பின் அவ்வூருக்கு கோராபா தேர் என்று பெயர் வந்துவிட்டது. பாண்டுரங்கன் மீது திட நம்பிக்கை கொண்ட இவர் ஒரு குயவர்.

மண்பாண்டங்கள் செய்து கடைவீதியில் விற்று ஓடிக்கொண்டிருந்தது ஜீவனம். சுவாசமோ விட்டலனின் நாமம்.

ஒருநாள் பானை செய்வதற்காக களிமண்ணைக் கால்களால் துவைத்துக் கொண்டிருந்தார். கால்களுக்குத்தானே வேலை? வாய் சும்மாதானே இருக்கிறது என்று நாம கீர்த்தனம் செய்யத் துவங்கினார்.

அப்போது அவரது மனைவி துளசிபாய் ஒரு வயதுக் குழந்தையான ஹரிக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்தாள். குழந்தை சாப்பிட அடம் பிடிக்கவே, அக்கம் பக்கத்தில் சென்று சிறிது நெய் கடன் வாங்கி வந்து உணவுடன் சேர்த்துக் கொடுக்கலாம் என்று நினைத்தாள்.

ஒரு தாய், குழந்தை அடம் பிடிக்காமல் உணவு உண்டுவிட்டால், அது தனக்கு பெரிய உதவி செய்ததே என்றுதான் நினைப்பாள்.
ஒரு உண்மையான குருவும், சீடன் தான் சொல்லிக் கொடுத்த சாதனையை ஒழுங்காக விடாமல் செய்துவந்தால், இவன் நமக்குப் பெரிய உபகாரி. சிரமமின்றி இவனைக் கரையேற்றிவிடலாம் என்று நினைப்பார்.

அதனாலேயே குருவை அன்னை என்றும் இறைவனைத் தந்தை என்றும் ராமக்ருஷ்ண பரமஹம்ஸர் முதலிய சான்றோர்கள் பலரும் கொண்டாடுகின்றனர்.

கோராவின் மனைவி அவரை அழைத்து, குழந்தையைச் சற்று நேரம் பார்த்துக்கொள்ளுங்கள், சிறிது நெய் கடன் வாங்கி வருகிறேன்

என்று சொல்லிவிட்டு குழந்தையைத் திண்ணையில் விட்டுச் சென்றாள்.

குழந்தை திண்ணையில் தவழ்ந்து விளையாடத் துவங்கினான். அவன் மீது ஒரு கண்ணை வைத்துக் கொண்டிருந்த கோராவின் கால்கள் மண்ணை மிதிக்க, நாவில் நாமம் தவழ்ந்தது.

சில நிமிடங்களில் மேகங்கள் சூழ, சில்லென்ற குளிர் காற்று வீச, நிமிர்ந்து பார்த்த கோராவிற்கு விட்டலனின் திருவுருவம் நினைவுக்கு வந்தது.

பக்தர்களுக்கு கத்தரிக்காயைப் பார்த்தாலும் கண்ணன் நினைவு வரும். பக்தி இல்லாதவர்க்கு கண்ணனையே பார்த்தாலும் கத்தரிக்காய் நினைவு வரும்.

கோராவிற்கு கருகருவென்று சூழ்ந்த மேகங்களைப் பார்த்ததும் ஷ்யாமள வர்ணனான இறைவனின் திருமேனி நினைவுக்கு வந்தது. வெட்டிய மின்னல், இறைவன் மார்பில் படரும் தங்கக்கொடியான மஹாலக்ஷ்மியை நினைவு படுத்த,
வீட்டை மறந்தார்..
குழந்தையை மறந்தார்..
தன்னையும் மறந்தார்
இரு கைகளையும் தூக்கிகொண்டு ஆடிப் பாடத்துவங்கினார்.

மழை கொட்ட ஆரம்பித்ததும் தெரியவில்லை. தெரிந்திருந்தால் களி மண் கரையுமே என்று அதைப் பாதுகாத்து வைக்க ஏற்பாடு செய்திருப்பார்.

இடி மின்னலைக் கண்டு பயந்துபோன குழந்தை தந்தையை நோக்கித் தவழ்ந்து வர, களிமண் வழுக்கிக் குழியில் விழ, கோராவோ ஏதுமறியாதவராய் விட்டல நாமத்தை உரக்கப்பாடிக்கொண்டு மண்ணை‌ மிதித்தார். ஆம். மண் குழிக்குள்‌ விழுந்த குழந்தையையும் சேர்த்து..

நெய் வாங்கப்போன கோராவின் மனைவி துளசி பாய், மழை நின்றதும் வரலாம் என்று சற்று தாமதித்தாள். மழை நின்றதும் வந்தவள், குழந்தையைக் காணாமல் தேடினாள்.

ஹரி ஹரி என்று கூப்பிட்டுக்கொண்டே வீட்டிலும் வீட்டைச் சுற்றிலுமாகத் தேடியவள், பாடிக்கொண்டிருந்த கோராவைப் பிடித்து உலுக்கி
ஹரி எங்கே ஹரி எங்கே என்று கேட்க, அவரோ இறை உணர்வு கலையாமலேயே ஹரி எல்லா இடத்திலும் இருக்கிறானே என்றார்.

ஒருவாறு அவரை உணர்வுக்குக் கொண்டுவந்து மீண்டும் கேட்க, கோராவுக்கு எதுவுமே நினைவில் இல்லை. இருவரும் சேர்ந்து குழந்தையைத் தேட, அப்போதுதான் கவனித்தனர். மண் குழிக்குள் சிவப்பாகக் குருதி, பிஞ்சு பிஞ்சாக கை கால்கள். பெற்ற தாய்க்கு எப்படி இருக்கும்?

அழக்கூடத் தெம்பில்லை அவளுக்கு. எல்லாவற்றிற்கும் இந்த விட்டலன்தான் காரணம். என்று கத்திக்கொண்டு ஓடினாள்.

பெற்ற குழந்தையின் இறப்புக்குக் காரணமானாலும் கணவனைக் குறை சொல்லாத குணவதி அவள்.

உலக்கையை எடுத்துக்கொண்டு கோரா மண்ணால் செய்துவைத்து வழிபடும் விட்டலனின் மூர்த்தியை உடைத்து விடுகிறேன் என்று ஓடினாள்.

குழந்தை இறந்தது பேரிழப்பானாலும், எல்லாம் இறைவன் செயல் என்று எடுத்துக் கொள்வர் மஹான்கள்.

கோராவோ, குழந்தையை விட்டலன் கொடுத்தான். அவனே எடுத்துக் கொண்டான் என்று சமாதானம் செய்துகொண்டிருந்தவர், துளசிபாய் விட்டலனை உடைப்பேன் என்றதும் கடுங்கோபம் கொண்டார்.

கையில் அரிவாளை எடுத்துக்கொண்டு நீ விட்டலனைத் தொட்டால், உன்னைக் கொல்வேன் என்று ஆவேசத்துடன் வர, பயந்துபோன துளசி இந்த விட்டலன் மீது ஆணை. என்னைத் தொடாதீர்கள் என்றாள்.

சட்டென்று உடனே அரிவாளைக் கீழே போட்டுவிட்டு குழந்தைக்கான ஈமக் காரியங்களைச் செய்யப் போய்விட்டார் கோரா.

வீடு வெறிச்சோடிப்போக, குழந்தையின் பொம்மை, தூளி, சட்டை என்று ஒவ்வொன்றாய்ப் பார்த்து பார்த்து அழுதுகொண்டே இருந்தாள் துளசி.

அடுத்த குழந்தை பிறந்தால், முதல் குழந்தை இறந்த துக்கம் சற்று மாறும். விட்டலன் மீது ஆணையிட்டுவிட்டதால் மனைவி இருக்கும் திசையைக் கூடப் பார்க்கவில்லை கோரா‌கும்பார்.

துளசிபாய் தன்னை சமாதானப் படுத்திக்கொள்ள முடியாமல், தந்தை வீட்டில் சிலகாலம் இருந்துவிட்டு வருகிறேன் என்று புறப்பட்டுச் சென்றாள்.

அங்கே வயதான தந்தையிடம், குழந்தை இறந்த விஷயத்தை மட்டும் சொன்னாளே தவிர, வேறெதையும் கூறவில்லை. அவரோ துளசியின் தங்கை சாந்துபாய்க்கு நல்ல இடத்தில் திருமணம் ஆகவேண்டுமே என்று கவலைப் பட்டார்.

துளசி யோசித்தாள். கணவர் சத்தியத்திற்குக் கட்டுப்படவ்ர். தன்னைத் தொடப்போவதில்லை. தங்கையை அவருக்கே திருமணம் செய்து கொடுத்தால், தங்கைக்குப் பிறக்கும் குழந்தைக்கு தானும் தாய்போல் தானே. துக்கம் சற்று மாறுமே என்றெண்ணினாள்.

தந்தையிடம் கோரவைப் பற்றி பலவாறு புகழ்ந்து கூறி சாந்துவை அவருக்கே மணம் செய்து கொடுக்கலாம். தாயில்லாத சாந்துவை அக்காவான நானே தாய் போல் காப்பேன். என்றாள்.

அக்காலத்தில் இருதார மணம் சகஜம் என்பதால், துளசியின் தந்தை திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார்.

கோராவோ சுகம், துக்கம் எல்லாவற்றையுமே இறைவனின் சங்கல்பம் என்று எடுத்துக் கொள் பவர். அவர் திருமணத்திற்கு ஒப்புக் கொண்ட போதிலும், எதிலும் ஆர்வமில்லாமல் இருப்பதைப் பார்த்து துளசியின் தந்தைக்கு விருப்பமின்றி துளசியின் வார்த்தைக்காக மணம்‌ செய்துகொள்கிறாரோ என்று சந்தேகம்‌ வந்துவிட்டது.

அவர் மருமகனைத் தனியே அழைத்துக் கொண்டு போய், துளசியைப் போலவே சாந்துவையும் நடத்தவேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டார்.

வீட்டுக்கு வந்தால், கோரா துளசி, சாந்து இருவரையுமே ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஒன்றும் புரியாமல் நின்ற துளசிக்கு தந்தை வாங்கிக்கொண்ட சத்தியம் பற்றித் தெரிந்ததும் இடிந்து போனாள்.

இப்படி இருந்தால் குடும்பம் சரியாக இருக்காது என்பதால், ஒருநாள் இரவு துளசி, சாந்து இருவரும் சேர்ந்து உறங்கிக்கொண்டிருந்த கோராவின் இரு கைகளையும் வலுக் கட்டாயமாகப் பிடிக்க, சத்தியத்தை மீறிய குற்றத்தை கோராவால் தாங்கவே முடியவில்லை.

பித்துப் பிடித்தவர்போல் ஓடி, சுழன்றுகொண்டிருந்த இயந்திரப் பல்சக்கரத்தின் இடுக்கில் கைகளை விட்டுத் துண்டித்துக் கொண்டார்.

பானை செய்ய வழியில்லை. வறுமை. வீட்டை ஏலத்தில் விட்டுவிட்டு பண்டரிபுரம் போகலாம் என்று முடிவு செய்தனர்.

இதற்கு மேலும் விட்டலனுக்குப்‌ பொறுக்குமா?

பாண்டுரங்கனும், ருக்மிணியும் இளம் தம்பதியர் உருவில் வந்து வீட்டை ஏலத்தில் எடுத்தனர்.

ரங்கன் சொன்னான். பிள்ளைப்பேறில்லாதவர்கள் பிள்ளையைத் தத்தெடுப்பார்கள். எனக்குப்‌ பெற்றோர் இல்லை. எனவே உங்களைப் பெற்றோராகத் தத்தெடுக்கிறேன். இந்த வீட்டிலேயே இருங்கள் என்று சொல்லித் தங்கவைத்துவிட்டான்.

கைகளற்ற கோராவிற்கு, குளிப்பாட்டி விடுவது, காலைக்கடன்களைக் கழிக்க உதவி, உடை உடுத்திவிடுவது, கால்‌பிடித்துவிடுவது போன்ற அனைத்து சேவைகளையும் பெற்ற பிள்ளைபோல் செய்யத் துவங்கினான்.

ருக்மிணியோ‌ அனைத்து வீட்டு வேலைகளையும் பட்டுப்போல் பளிச்சென்று செய்தாள். ரங்கனே பானைகள் செய்து சந்தையில் விற்றுவிட்டு வருவான்.

மாதங்கள் உருண்டோடின.
பண்டரிபுரத்தில் இருந்த சாதுக்கள் அங்கு விட்டலனின் சாந்நித்யம்‌ குறைந்திருப்பது கண்டு, அவன்‌ சென்ற இடத்தைக் கண்டுபிடிக்க, ஊர் ஊராக நாமம் சொல்லிக்கொண்டு யாத்திரையாக வந்தனர்.

சதய்புரிக்கு வந்ததும், இறையின் சாந்நித்யத்தை உணர்ந்து கோராவினுள் நுழைய, ரங்கனைத் தேடினால் காணவில்லை.

இவ்வளவு நாள் தனக்குப் பணிவிடை செய்தது இறைவன் என்றறிந்தால் கோரா எப்படித் தாங்குவார்?

விட்டலனின் கருணையை நினைத்துக் கதறி அழத் துவங்க, அவரைச் சமாதானப் படுத்தி தங்களுடன் பண்டரிக்கு அழைத்துவந்தனர் சாதுக்கள்.

நாமசங்கீர்த்தனத்தில் வயதில் மூத்த சாது, எல்லோருக்கும் ஜால்ராவைக் கொடுப்பார். சாதுக்கள் நாம சங்கீர்த்தனம்‌ துவங்க, பெரியவர் கொடுத்த ஜால்ராவை வாங்கத் தன்னையறியாமல் கை நீட்டிய கோராவிற்குக்‌ கைகள் வந்துவிட்டன.

அதைக் கண்ட துளசி, வெட்டப்பட்ட கைகள் வரும் என்றால், இறந்த குழந்தை வராதா, என் குழந்தையைக் கொடு என்று விட்டலனை நோக்கி அழுதாள். ஸந்நிதியிலிருந்து இறந்துபோன குழந்தை ஹரியும் அம்மா என்று அழைத்துக் கொண்டு வந்துவிட்டான்.

சத்யஸ்வரூபனான இறைவன் பொருட்டு ஸத்தியதைக் காப்பாற்றியதற்காக கோராவின் வாழ்வில் விட்டலன் நிகழ்த்திய லீலையைப் பார்த்தீர்களா..
அத்தகைய பக்தரின் பெயரில் சௌபாலா என்ற இடத்தில் விட்டல மந்திரிலிருந்து வரும் ப்ரதான சாலையிலேயே சுமார் 10 நிமிட நடை‌தூரத்தில் அமைந்துள்ளது இவ்விடம்.

No comments:

Post a Comment