Wednesday, 26 August 2020

உடல் எடையை கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

அலட்சியம் வேண்டாம் நண்பர்களே!!!

உடல் எடையை கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

நம் உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை பேண வேண்டியது மிக அவசியமாகின்றது. ஏனெனில் நமது உடலின் கட்டமைப்பு அவ்வாறு தான் அமைக்கப்பட்டுள்ளது.

நமது உடலை தலையில் இருந்து கால்வரை சற்று கூர்ந்து கவனித்தால் அதன் கட்டமைப்பு நமக்கு வியப்பை தரும். அதாவது முழு உடலும் சமச்சீரான எடையை தாங்க கூடிய ஒரு ஒழுங்கு முறையில் அமைந்துள்ளது.

ஒரு தலை, அதில் இரு பக்கமும் காதுகள் அமைந்திருக்க ஒரே ஒரு மூக்கு, ஒரே ஒரு வாய் என்பதால் அவை முகத்தின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.

வாயின் உள்ளே பற்கள் இரு பக்கமும் மேலும் கீழுமாக சமச்சீராக அமைந்திருக்க நாக்கு மத்திய பகுதியில் உள்ளது.

உடலின் உள்ளே சுவாசப்பையில் இடது சுவாசப்பை வலது சுவாசப்பையை விட சற்று சிறிதாக இருக்கும். காரணம் இடது சுவாசப்பை பகுதி இதயத்துக்கு அதிகமாக இடம் கொடுத்துள்ளது.

அதே போல் கல்லீரலின் எடை வலது பக்கம் அதிகமாக இருக்க அதனை ஈடு செய்ய இரைப்பை, கணையம் மற்றும் மண்ணீரல் இடது பக்கம் அமைந்துள்ளது.

இரு சிறுநீரகங்களும் இடுப்பின் இரண்டு பக்கமும் அமைந்திருக்க சிறுநீரகப்பை சரி மத்தியில் அமைந்துள்ளது.

உடல் தசைகளும் கூட எலும்புகளுக்கு சுமை ஏற்படாதவகையிலும், உள் உறுப்புகளின் செயல்பாட்டிற்கு இடையூறு இல்லாதவகையிலும் அமைந்துள்ளன.

ஆனால் நமது எடை கூடும் பொழுது கொழுப்புக்களின் எடையால் உடல் சமச்சீர் அற்று போவதோடு உடலில் பல பிரச்சினைகள் தோன்ற ஆரம்பிக்கும்.

உடல் எடையால் மிகவும் பாதிக்கப்படுவது எலும்பு தொகுதியே ஆகும். குறிப்பாக உடல் எடையை தாங்க முடியாது கழுத்து மற்றும் முதுகெலும்பில் எலும்பு தேய்மானம், தண்டுவட நோய்கள் போன்ற பாரிய பிரச்சினைகள் ஏற்படும்.

அதுமட்டுமன்றி இரத்த குழாய்களை சுற்றி கொழுப்பு இறுகுவதால் அங்கு நெகிழ்ச்சி தன்மை இல்லாது போய் இதயத்திற்கு சுமை அதிகரிக்கும். இதன் பொழுது இதயம் அதீத அழுத்தத்தை கொடுத்து நாடுகளுக்கு இரத்தத்தை செலுத்தும் இதுவே உயர் இரத்த அழுத்தம் ஏற்படவும், இதயம் பலவீனமாகவும், காரணமாகின்றது. இக்கொழுப்பு படிவதால் குருதிக்குழாய்களில் அடைப்பும் ஏற்படும்.

உடல் எடை கூடுவதால் சிறுநீரகத்துக்கு சுமை அதிகமாகும். ஏனெனில் உடல் எடைக்கேற்ப கழிவுகளும் உடலில் அதிகமாகி அதை வெளியேற்ற முடியாத நிலை சிறுநீரகத்துக்கு ஏற்பட்டு சிறுநீரகம் செயல்திறன் பாதிப்புறும். இதனால் உடலில் கழிவுகள் தேங்கி உடல் வீக்கம், மூட்டுவலிகள் போன்றன ஏற்படும்.

அதீத கொழுப்பு படிதல் காரணமாக கணையம் செயலிழப்பதால் நீரிழிவு நோய் தோன்றும்.

கொழுப்பு, சுவாசப்பையின் காற்று வழிகளில் படிவதால் சுவாசப் பிரச்சினைகள் தோன்றும்.

கல்லீரலில் கொழுப்பு படிதல் காரணமாக கல்லீரல் வீக்கம் ஏற்பட்டு அதன் கழிவு அகற்றும் செயல்திறன் மற்றும் இதர செயல்கள் பாதிப்புறும். கல்லீரல் தான் உடலில் சேரும் விஷங்களை வடிகட்டும் செயலை செய்கிறது. அத்தோடு இரத்தம் உறைதல் போன்றவற்றிற்கு தேவையான புரோட்டினை வழங்குவதுவும் கல்லீரலே.

ஆகவே தான் உடல் எடையை உயரத்திற்கு ஏற்ப பேணுவது நம் ஆரோக்கியமான வாழ்வுக்கு மிக அவசியம் ஆகின்றது.

No comments:

Post a Comment