Saturday, 22 August 2020

எலுமிச்சைச் சாற்றைவிட #தோல் பெஸ்ட்

#எலுமிச்சைச் சாற்றைவிட #தோல் பெஸ்ட்! - மருத்துவம் விளக்கும் 10 பயன்கள்! 

எலுமிச்சை... நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கம். எலுமிச்சை, நார்த்தங்காய் ஊறுகாய் போதும்... பசி வேளையில் தயிர்சாதத்தை ஒரு கட்டு கட்டிவிடலாம். எலுமிச்சை மட்டுமல்ல, அதன் தோல் அத்தனை மருத்துவக் குணங்கள் கொண்டது. அந்த மகிமை தெரிந்துதான் நம் முன்னோர்கள் எலுமிச்சையைத் தோலோடு சேர்த்து ஊறுகாயாகத் தயாரித்தார்கள். எலுமிச்சைத் தோலில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன, அவை தரும் ஆரோக்கியப் பலன்கள் குறித்து விவரிக்கிறார் #உணவியல் நிபுணர் #வினிதா...

``அமெரிக்காவின் வேளாண் துறையின் (USDA - Unitaed States Department of Agriculture) புள்ளிவிவரம், `எலுமிச்சைச் சாற்றில் இருப்பதைவிட, தோலில்தான் வைட்டமின்கள், மினரல்கள், நார்ச்சத்து அதிகம் இருக்கின்றன’ என்கிறது. எலுமிச்சைத் தோலுடன், சாற்றை ஒப்பிட்டுப் பார்த்தால், தோலில்தான் சத்துகள் அதிகமாக இருக்கின்றன. 

ஓர் எலுமிச்சம் பழத்தில்...

* எலுமிச்சைத் தோலில் கால்சியம் 134 மில்லிகிராம்; சாற்றில் 26 மில்லிகிராம் இருக்கிறது.

* தோலில் பொட்டாசியம் 160 மில்லிகிராம்; சாற்றில்  138 மில்லிகிராம்.

* வைட்டமின் சி, தோலில் 129 மில்லிகிராம்; சாற்றில் 53 மில்லிகிராம்.

* நார்ச்சத்து, தோலில் 10.6 கிராம்; சாற்றில் 2.8 கிராம்.

* வைட்டமின் ஏ, தோலில் 50 IU, சாற்றில் 22 IU. (IU என்பது வைட்டமின்களை அளக்கும் சர்வதேச அளவை). 

தோலில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

* பற்கள், எலும்புகளுக்கு வலு சேர்க்கும்! எலும்புகளுக்கு வலு தரும் கால்சியம் இதில் இருக்கிறது. இதிலுள்ள வைட்டமின் சி, பற்களையும் எலும்புகளையும் வலுவாக்க உதவும். 100 கிராம் தோலில், சராசரியாக மனிதனுக்குத் தேவைப்படும் கால்சியத்தில் 13.4 சதவிகிதமும், வைட்டமின் சி 143 சதவிகிதமும் இருக்கின்றன. இதிலுள்ள வைட்டமின் சி, நம் உடலில் இருக்கிற குருத்தெலும்புகள், தசைநார்கள், தசை நாண்கள், தோல், ரத்தக்குழாய்களைக் கட்டமைக்கும் செயல்களில் அதிகமாக உதவுகின்றன. ரத்தக்குழாய்ச் சுவர்களை நெகிழ்வுத்தன்மையுடன் வைத்துக்கொள்ளவும், தசைகளின் செயல்பாடுகளுக்கும், ஹார்மோன் சுரப்பிலும் எலுமிச்சைத் தோலிலிருக்கும் கால்சியம் முக்கியப் பங்காற்றுகிறது.

* புற்றுநோய்க்குச் சொல்லலாம் `கெட் அவுட்!’

எலுமிச்சைத் தோலில் தயாரிக்கப்பட்ட ஊறுகாய் உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால், சில வகை சருமப் புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம். இதன் தோலிலிருந்து கிடைக்கும் எண்ணெயில் டி-லைமோனீன் (D-Limonene) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவில் இருக்கிறது. இது, பெருங்குடல், மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க உதவும். இதிலுள்ள வைட்டமின் சி ஆன்டிஆக்ஸிடன்ட், புற்றுநோய், இதய நோய், மூட்டுவலிக்கு வழிவகுக்கும் `ஃப்ரீ ரேடிகல்கள்’ (Free Radicals) உருவாகாமல் தடுத்து நிறுத்தும். 
எலுமிச்சைத் தோலிலிருக்கும் `ஃப்ளேவனாய்டு’ (Flavonoid), வைட்டமின் சி-ஐ உள்வாங்கிக் கொள்ளும் திறனை அதிகரிக்கச் செய்யும். இதிலுள்ள `நரிஞ்ஜெனின்’ (Naringenin) என்ற ஃப்ளேவனாய்டு, டி.என்.ஏ-வைப் பாதுகாத்து கேன்சர் வராமல் தடுக்க உதவும். இது பாதிப்படைந்த டி.என்.ஏ-வைச் சரிசெய்யவும் உதவும். எலுமிச்சைத் தோலிலிருக்கும் `கெளன்மரின்’ (Counmarin) என்ற எண்ணெய் சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்டாகச் செயல்பட்டு கேன்சர் மற்றும் உடல் உறுப்புகள், செல்களை பாதிக்கும் நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

* ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும்!

எலுமிச்சைத் தோலில் கால்சியம், மக்னீசியத்துடன் சேர்ந்திருக்கும் பொட்டாசியம், ரத்தக்குழாய்ச் சுவர்களைத் தளர்வாக்கி, ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவும். ரத்த அழுத்தம் சீராக இருந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இதிலுள்ள நார்ச்சத்து, ஃப்ளேவனாய்டு ஹெஸ்பெரிடின் (Flavonoid hesperidin), கரோட்டினாய்டு நிறமிகள் உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்க உதவும். இதிலுள்ள ஃப்ளேவனாய்டுகள் கெட்ட கொழுப்பான எல்.டி.எல்-ஐக் குறைத்து, இதயம் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

* மலச்சிக்கல் வராமல் தடுக்கும்!

எலுமிச்சைத் தோலில் அதிக அளவில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல், அல்சர், மேலெழும் இரைப்பை அமிலத்தால் ஏற்படும் நெஞ்செரிச்சலிலிருந்து காக்கும். அதோடு, உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவும், சர்க்கரை நோய் பாதிப்பைக் குறைக்கும்

* கண்களின் ஆரோக்கியம் காக்கும்!

கரோட்டினாய்டுகள் (Carotenoids) உடலுக்குள் வைட்டமின் ஏ-வாக மாறுகின்றன. கண்கள் ஆரோக்கியமாக இருக்கவும், தொற்று ஏற்படாமல் பாதுகாக்கவும் வைட்டமின் ஏ உதவும். எலுமிச்சைத் தோலில் கரோட்டினாய்டுகள் அதிகமாக இருக்கின்றன. இவை கண்கள் ஆரோக்கியமாக இருக்க உதவும். இதிலுள்ள வைட்டமின் சி, வயதானவர்களுக்கு ஏற்படும் கண் குறைபாடுகள், தசைச் சீர்கேடுகளைத் தடுக்கும். 

* காயங்களை விரைவாகக் குணப்படுத்தும்!

எலுமிச்சைத் தோலின் சாறு, காயங்களைக் குணப்படுத்த உதவும். இது பாக்டீரியா பரவாமல் தடுக்கும். சர்க்கரைநோயாளிகளுக்குக் காயம் ஏற்பட்டால், மெதுவாகத்தான் குணமாகும். எலுமிச்சைத் தோலின் சாறு விரைவில் குணமாக்கும். `எலுமிச்சை' உள்பட சிட்ரிக் அமிலப்பழங்களின் தோலின் சாற்றைச் சர்க்கரைநோயாளிகளின் காயங்களில் நேரடியாகத் தடவினால், காயம் சீக்கிரம் குணமாகும்’ என்று ஓர் ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள். திசு வளர்ச்சியும், இணைப்புத் திசுக்களின் வளர்ச்சியும்தான் காயங்கள் குணமாகக் காரணமானவை.

* இயற்கையான டியோடரன்ட்!

சிட்ரிக் பழங்களிலிருந்து வரும் வலுவான நறுமணம் உடல் துர்நாற்றத்தைப் போக்கும், பாக்டீரியாவுக்கு எதிராகப் போராடும். ஹேர் டிரையர் மூலம் எலுமிச்சைத் தோலை சிறிது உலர்த்தினால், அதன் நறுமணம் அதிகமாகும். தோலின் உள்பகுதியை அக்குளில் பூசிக்கொள்ளலாம். துர்நாற்றம் குறையும். ஆரஞ்சு, எலுமிச்சைத் தோலை தண்ணீரில் போட்டு ஊறவைக்க வேண்டும். அந்தத் தண்ணீரை ஒரு சிறிய பருத்திப் பஞ்சால் தொட்டு அக்குள் பகுதிகளில் தடவிக்கொள்ளலாம். மேலும், இதைப் பாட்டிலில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில்வைத்துப் பயன்படுத்தலாம்.

* முகப்பருவைப் போக்கும்!

எலுமிச்சைத் தோலில் இருக்கும் ஆஸ்ட்ரின்ஜென்ட் (Astringent ), கிருமிகளைக் கொல்லும் ஆன்டிமைக்ரோபியல் (Antimicrobial) ஆகியவை முகப்பரு வராமல் தடுப்பவை. எலுமிச்சைத் தோலையும், கொஞ்சம் புதினா இலையும் சேர்த்து அரைத்து முகத்தில் பூசிக்கொள்ளலாம். எலுமிச்சைத் தோலிலிருக்கும் எண்ணெய் சருமத்தைச் சுத்தப்படுத்த உதவும், புதினா இலை முகத்தைப் பொலிவாக்க உதவும்.

* கொசு லார்வாக்களை அழிக்கும்!

சிலவகை கொசுக்களின் லார்வாக்களை அழிக்கும் பூச்சிக்கொல்லியாக எலுமிச்சைத் தோலின் சாறு செயல்படும். தேங்கி நிற்கும் தண்ணீரில் எலுமிச்சையைப் பிழிந்து, அதன் தோலையும் போட்டுவைத்தால் போதும், கொசு லார்வாக்கள் அழியும். இரண்டு நாள்களுக்கு ஒரு முறை இப்படிச் செய்தால், கொசு லார்வாக்கள் வளராமல் தடுக்கும்.

எலுமிச்சைத் தோலை ஏதாவது ஒரு வகையில் தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால், பல்வேறு உடல்நல பாதிப்புகளிலிருந்து விடுபடலாம். கவனம்... அதிகப்படியாக எலுமிச்சையை உட்கொண்டால் பற்களில் அரிப்பு ஏற்படலாம்; வயிற்றில் அமிலத்தன்மை ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது’’

No comments:

Post a Comment