Monday 3 August 2020

யாழ் இனிது குழல் இனிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதோர்’

யாழ் இனிது குழல் இனிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதோர்’ என்றார் வள்ளுவர். வள்ளுவனின் வார்த்தைகளுக்கேற்ப, உங்கள் குழந்தைகள் மழழை பேச்சில் மயங்கி இருக்கும் நீங்கள் அவர்கள் எப்போது பேசுவார்கள் என்று நிச்சயம் காத்துக் கொண்டு தான் இருப்பீர்கள்.

அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தையின் வளரும் பருவத்திற்கு ஏற்ப வளர்ச்சிகளை அவர்கள் பெறுகின்றனரா என்று கவனித்துக் கொண்டு தான் இருப்பார்கள். சில குழந்தைகள் விரைவாக பேசி விடுவார்கள். அவர்களுக்கு தங்கள் குழந்தை, மழழை மொழியில் அழகாக பேசுவதை கேட்கும் போது அவர்களுக்கு கிடைக்கும் ஆனந்தத்திற்கு அளவு கிடையாது. ஆனால் சிலர் அந்த குறிப்பிட்ட காலத்தில் பேசுவதில்லை. இவர்கள் மற்ற குழந்தைகளை காட்டிலும் சிறிது நாட்கள் கழித்து தான் பேசுவார்கள்.

இந்த சமயத்தில் தான் நமது குழந்தையை எப்படியாவது பேச வைக்க வேண்டும் என்று எண்ணுவீர்கள். அதுமட்டுமல்லாமல் அதற்கான முயற்சிகளையும் எடுத்துக் கொண்டு வருவீர்கள். குழந்தைகள் பேசுவது அவர்கள் வளரும் மற்றும் வெளிப்படுத்தப்படும் வெவ்வேறு சூழல்களுக்கேற்ப மாறுபாடுகின்றது. குறித்த காலத்தில் பேசாத குழந்தைகளை நாம் உடனடியாக ஒரு நல்ல மருத்துவரிடம் அல்லது பேச்சு சிகிச்சை தருபவரிடம் கூட்டிச் சென்று அதன் காரணங்களை கண்டறிய வேண்டியுள்ளது.

மருத்துவ ரீதியான காரணங்களை தவிர்த்து வேறு எந்த வித காரணமாக இருந்தாலும் நம்மால் கட்டாயம் குழந்தைகளை பேச வைக்க முடியும். உங்கள் குழந்தைக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி சிறிது முயற்சி செய்தால் போதும் அவர்களை பேச வைத்திட முடியும். இதற்கு பல வழிகள் உள்ளன. அதற்கு செய்ய வேண்டிய முயற்சிகளை பற்றி இங்கு குறிப்பிட்டுள்ளோம்.

அனைவருடனும் பழக விடுங்கள்

உங்கள் குழந்தையை அனைவருடனும் பழக விட வேண்டும். இதுவே நீங்கள் பெருமளவில் முயற்சி செய்யாமல் அவர்களை பேச வைத்திட சிறந்த வழியாகும். மற்ற குழந்தைகளுடனும் விளையாட விடும் போது பேச்சு தானாக நிச்சயம் வரும். இவ்வாறு செய்வதால் உங்கள் குழந்தை மற்றவர்களிடம் பேசுவதன் அவசியத்தை ஏற்படுத்த முடியும் மற்றும் உங்களுடைய முயற்சிகள் இல்லாமலேயே அவர்கள் பேசத் தொடங்குவார்கள்.

அவர்களுடன் பேசுங்கள்

எப்போதும் வேலை வேலை என்று இருந்தால் குழந்தைகளை பேச வைக்க வெகு நாட்களாகி விடும். குழந்தைகளுடன் பேசும் போது தான் அவர்களும் பேச கற்றுக் கொள்கின்றனர். அவர்களுக்கு என்ன புரியப் போகின்றது என்று தவறாக எண்ணி விடாதீர்கள். நீங்கள் சும்மாவாவது அவர்களிடம் பேசும் போது, அவர்கள் அதற்கு பதில் அளிக்கத் தொடங்குவார்கள்.

அனைத்து பெயர்களையும் செல்லித் தருதல்

உங்கள் வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளின் பெயரையும் குறிப்பிட்டு பேசுவது நல்ல யோசனையாகும். அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா போன்ற அழைக்கும் சொற்களையும் எப்போதும் கூறி கொண்டு அவர்களையும் சொல்ல வையுங்கள். நீங்கள் கேட்பது அவர்களுக்கு விரைவாக புரிந்து விடும். இதுவே உங்கள் குழந்தையை பேச வைக்க சிறந்த வழியாகும்.

இரவு நேரக் கதைகள்

ஒருவேளை உங்கள் குழந்தை இன்னும் பேசாமல் இருந்தால் இரவு நேரத்தில் படுக்கைக்கு செல்லும் போது கதைகளை படித்து காட்டுங்கள். இதுவும் உங்கள் குழந்தையின் பேச்சுத்திறனை வெளிப்படுத்தும் சிறந்த முயற்சியாக அமைகின்றது. இதை செய்தால் உடனடியாக வித்தியாசம் காண முடியாது ஆனால் உங்களுக்கு நல்ல ஒரு பதில் கிடைக்கும் வரை முயற்சி செய்வதை விட்டு விடாதீர்கள்.

சத்தத்தை திரும்பச் சொல்வது

ஆடு, மாடு, நாய் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் சத்தத்தை அவர்களுக்கு சொல்லிக் காட்டுங்கள். நல்ல சங்கீதம் மற்றும் குழந்தைகளுக்கான பாடல்களை கேட்க விடுங்கள். இதை அவர்கள் கேட்டு திரும்பச் சொல்லும் வரை பொறுமையுடன் காத்திருங்கள். அவர்கள் கேட்டதை ஒரு நாள் நிச்சயம் சொல்லுவார்கள்.

குழந்தைப் பாடல்கள்

இந்த பாடல்களை குழந்தைகளுக்கு போட்டு காண்பிக்கலாம் மற்றும் பாடியும் காட்டலாம். அவர்கள் சாப்பிடும் போதும் மற்றும் குளிக்கும் போது இதை செய்யலாம். இதை திரும்பத் திரும்ப கேட்கும் போது அவர்களும் ஒரு நாள் அதை பாடுவார்கள். குழந்தைகளை பேச வைக்க இதுவும் ஒரு வழியாகும்.

திருப்பி சொல்லச் சொல்லுங்கள்

வெறும் பேச்சு மட்டும் போதாது. அவர்களையும் திருப்பிச் சொல்ல சொல்லுங்கள். சிறிய வார்த்தைகளை சொல்லிக் கொண்டே இருங்கள். அது குழந்தையின் பெயராகவும் கூட இருக்கலாம், அந்த பெயரை கொண்டு இரவு நேர கதைகளில் ஏதேனும் ஒரு கதையை சொல்லலாம். இது அவர்களுக்கு நிச்சயம் புரியும். இதை எல்லாம் கேட்கும் குழந்தைகள் வெகு சீக்கிரம் பேசி விடுவார்கள்.

1 comment:

  1. அய்யா..! வெ.சாமி..அவர்களே...! உரசு மருந்து எனச் சொல்லும், ஜாதிக்காய்,"மாச்சக்காய் பெருங்காயம், இந்துப்பூ..பெயர்சொல்லாதது(வசம்பு) இத்தனையையும் சுட்டு வைத்து...1 மாதக் குழந்தைக்கு ஒவ்வொன்றிலும், ஒரு உரசு உரசி, தாய்ப்பாலில் கலந்து கொடுக்க வேண்டும். இதை தினசரியும் கொடுக்கலாம்...குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும்போதும் கூட கொடுக்கலாம். நான் தினசரி என் குழந்தைகளுக்கு கொடுத்தேன். மேலும், சிறு சிறு மிருகங்கள், பறவைகள், என அதிக பொம்மைகள் வாங்கிக்கொடுத்து, அதன் பெயர்களை சொல்லிக் கொடுத்து, பின்அந்தப் பெயரை உச்சரித்து நாம் அதை எடுத்துவரச் சொல்லி பழக்க வேண்டும். அப்பா, தாத்தா, அம்மா, அத்தை என உறவுகளை சுட்டிக்காட்டி, அழைக்க பழக்க வேண்டும். முதலாவது அத்தை எனச் சொல்லிக் கொடுக்க வேண்டும். மிகவும் எளிதான வார்த்தை குழந்தைகளுக்கு அத்தை என்ற வார்த்தைதான்.( அதற்காக பெரியோர்கள் சொல்வார்கள், அத்தை என்ற வார்த்தையை குழந்தை முதலாவதாக உச்சரித்தால்...நோய் அற்றுப்போகும்..அதாவது நோயே வராது..எனச் சொல்வார்கள்) ஆகவே அத்தை என்ற வார்த்தை,தாத்தா, என படிப்படியாக கூப்பிட பழக்க வேண்டும். நாம் சமைத்துக் கொண்டே குழந்தைகளிடம் உறவாட வேண்டும். நமது வேலைகயைச் செய்துகொண்டே, குழந்தைமீது ஒரு கண் வைத்துக் கோண்டே..பேசிக் கொண்டே நமது வேலைகளை செய்ய வேண்டுமேத் தவிர..உறங்க வைத்து, உறங்க வைத்து நமது வேலையைச் செய்யக்கூடாது. மேலும், இடுப்பிலேயே குழந்தைகயை அதிகநேரம் தூக்குவதை குறைத்து, உட்கார வைத்து, பொருட்களை அள்ளிப்போட்டு, குழந்தைகளின்,சிந்தனையை, அறிவாற்றலைத் தூண்ட கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகள் வளர்ப்பது ஒரு கலை... கலையாக நினைத்தால் சுமை தெரியாது..சுகம் தெரியும். சுமையாக எண்ணினால்,,,,சனியனே, என் உயிரை வாங்க பிறந்திருக்கு... ஏண்டா பெத்தேன்னு இருக்கு என பல பெண்கள் கூறி, தலையில் இடிப்பதை நான் பார்த்ததுண்டு. அப்போதெல்லாம், நான் மிகவும் வருத்தப்பட்டதுண்டு. கணவனுடன் சேர்ந்து, எப்படி ஆசைஆசையாக குழந்தை பெற்றுக்கிறோமோ...அதுமாதிரி குழந்தைரையும் ஆசை ஆசையாக வளர்க்க வேண்டும். அநேகப் பெண்களுக்கு இது தெரிவதில்லை. எதோ படுத்தோம்,குழந்தை பிறந்திட்டது... வயிற்றுக்கு ஊட்டிவிட்டேன்..அதுவா வளரும் என்றுதான் நினைக்கிறார்கள். குழந்தை உடம்பில் பிரச்சனை வந்ததும்தான், ஆஸ்பத்திரி, வீடு என அலைகிறார்கள்...இவ்வாறு அதிகம்பேரை பார்த்திருக்கிறேன். ஏனோதானோ வளர்ப்பு. ஆனால் அவர்கள் மட்டும் அலங்காரமாக இருப்பார்கள்.

    ReplyDelete