Sunday, 16 August 2020

ஜராசந்தன்


ஜராசந்தன் என்கிற பெயரை கிருஷ்ணன் சொன்ன மாத்திரத்தில் எல்லோரிடமும் திகைப்பு. அதே வேளையில் ஜராசந்தன் பற்றி பாண்டவர்களுக்கும் பெரிதாக தெரிந்திராத நிலை. எனவே, ஜராசந்தனைப் பற்றி கிருஷ்ணனே பாண்டவர்களுக்கு கூறத் தொடங்கினான்.
""மகதநாட்டு மன்னன் பிருகத்ரதன் என்பவனின் புத்திரன் தான் ஜராசந்தன். கிரிவ்ரஜம் என்பதே இவர்களின் தலைநகரம். ஆரம்பத்தில் பிருகத்ரதனுக்கு புத்திரப்பேறு இல்லை. சண்டகவுசிகர் என்னும் முனிவரை ஒரு வனத்தில் சந்திக்கப் போய், அவரது தவசக்தியால் பிறந்தவனே ஜராசந்தன். சண்டகவுசிகர் தன் தவசக்தி எல்லாம் திரட்டி ஒரு மாங்கனியாக்கி, அதை பிருகத்ரதனுக்கு அளித்திருந்தார். பிருகத்ரதனுக்கு இரு பத்தினிகள். எனவே, அவனும் அந்த மாங்கனியைச் சமமான இரு துண்டுகளாக ஆக்கி தன் பத்தினிகளுக்கு கொடுத்தான். இருவருமே கர்ப்பம் தரித்தனர். பிள்ளையும் பிறந்தது.... எப்படி தெரியுமா....?''
கிருஷ்ணர் ஒரு இடைவெளி விட, பாண்டவர் கூட்டம் கவனமாகக் கேட்டது.
""இருவருமே ஜராசந்தனின் உடம்பின் சரிபாதி பகுதியை மட்டுமே பெற்றெடுத்தனர். மாமிசப் பிண்டமாக பிறந்த அந்த பிள்ளையிடம் உயிரும் இல்லை. மாம்பழத்தை வெட்டியதால் நேர்ந்த தவறு இது என புரிந்தது. பிண்டங்களை எடுத்துச் சென்ற ஏவலர்கள், "ஜரை' என்னும் பூதம் வசிக்கும் சந்தியில் போட்டு விட, அதை எடுத்த பூதம் அந்த பிண்டத்தை இணைத்து உயிர் கொடுத்தது. உயிர் கொடுத்த பூதத்தின் பெயரால் "ஜராசந்தன்' என்று பெயர் வந்தது.
பூதம் வளர்த்த பிள்ளை என்பதால் ஜராசந்தன் அரக்க குணத்துடன் வளர்ந்தான்.
இவன் பிறப்புக்கு காரணமான சண்டகவுசிகர்,"போரில் எந்த அரசனாலும் உன்னை வெல்ல முடியாது' என்ற வரமும் அளித்தார்'' என்ற கிருஷ்ணனிடம், அர்ஜூனன் பெருமூச்சுடன்,""அதனால் தான் கிருஷ்ணா நீ அவனை விட்டு வைத்திருக்கிறாயா?''
""சரியாகச் சொன்னாய்..... ஜராசந்தன் என் மீதும் படை எடுக்கத் துணிந்தான். நான் அதனாலேயே மகத நாட்டை விட்டு வெகுதூரம் வந்து துவாரகையை நாடாக கொண்டேன்,'' என்றான் கிருஷ்ணன்.
""அந்த சண்ட கவுசிகர் இப்படி கூடவா வரம் தருவார்?'' என கேட்டான் பீமன்.
""கவலைப்படாதே.... அவர் வரம் உன்னைத் தடுக்காது,'' என்ற கிருஷ்ணனைப் பார்த்து, ""எப்படி?'' என்றான் பீமன்.
""அவர் வரத்தின்படி, யோனி கர்ப்பம் கொண்டவன் அல்லவே நீ....''
""கண்ணா! நான் எப்படிபட்டவனாக இருந்தாலும் சரி... ஜராசந்தன் போன்ற அசுரசக்தியை அழித்தே தீர வேண்டும்,'' குமுறினான் பீமன்.
""சரியாகச் சொன்னாய். அவனை அழிக்காமல் ராஜசூய யாகத்தை தர்மனால் நடத்தவே முடியாது.''
""அப்படியானால் ஜராசந்த வதம் நடந்தால் தான் ராஜசூயமா?''- தர்மர் மெலிந்த குரலில் கேட்டார்.
""ஆம்... இல்லாவிட்டால் யாகத்தை மறந்துவிடு.'' என்றான் கிருஷ்ணன் பலத்த குரலில்.
""அதை விட வேறு அவமானம் வேறில்லை'' என்று கோபித்தான் நகுலன்.
""கண்ணா! ஜராசந்தனிடம் பீஷ்மரை விட்டுப் பேசச் சொல்லட்டுமா?'' என்று கேட்டாள் குந்தி.
கண்ணன் சிரித்தபடி, ""அத்தை.... நீ கருணை மிகுந்தவள். அதனால், இப்படித் தான் பேசுவாய். ஜராசந்தன், "கிரீவ் ரஜத்' என்னும் குகையில் 84 ராஜாக்களை ஒரு காரணமும் இல்லாமல் சிறை வத்திருக்கிறான். இன்னமும் 14 ராஜா தான் மீதம் உள்ளனர் நூறு என்ற கணக்கிற்கு! இப்படிப்பட்டவன் எப்படி ராஜசூயம் நடத்த அனுமதிப்பான்?''
- கிருஷ்ணன் இப்படி கேட்ட பிறகே, இதிலிருக்கும் சிக்கல் அவர்களுக்குப் புரிந்தது.
ஆனால், பீமன் தன் கதாயுதத்தை தூக்கிக் கொண்டு, ""அண்ணா....நான் ராஜசூயத்துக்காக இல்லாவிட்டாலும், 84 ராஜாக்களை மீட்பதற்காகவாவது ஜராசந்தனை அழித்தே தீருவேன்'' என்று சபதம் செய்தான்.
ஜராசந்தனோடு யுத்தம் தொடங்கியது.
பாரதத்திலேயே இரண்டு பேர் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ளும் மிக நீண்ட யுத்தமாக இந்த யுத்தம் கருதப்படுகிறது.
போரில் கிருஷ்ணன் ஒரு உத்தியால் ஜராசந்தனைக் கொல்ல வழி செய்தான். அதன்படி ஒரு கோரைப் புல்லை எடுத்து, இரண்டாக கிழித்துப் போட்டு குறிப்பால் பீமனுக்கு உணர்த்தினான். அவ்வாறே பீமனும் ஜராசந்தனின் உடலைக் கிழித்துப் போட்டான். ஆனால், இருபாதியும் உடனே ஒன்று சேர்ந்து ஜராசந்தன் எழுந்து நின்றான்.
பலமுறை இப்படியே நடந்தது.
கிருஷ்ணன் மீண்டும் ஒரு புதிய உத்தியைக் கையாண்டான். கோரைப் புல்லை இரண்டாகக் கிழித்து வலக்கரத்தில் இருப்பதை இடது பக்கமும், இடக்கரத்தில் இருப்பதை வலப்பக்கமும் தூக்கிப் போட, பீமனும் ஜராசந்தன் உடலை அவ்வாறே தூக்கிப் போட்டான். அந்த உடல்களால் மீண்டும் ஒன்று சேர முடியவில்லை.
எப்படியோ கிருஷ்ணனின் மதியூகம், பீமனின் அபாரபலம் ஜராசந்தனை வெற்றி கொண்டது. 84 அரசர்களும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இனி ராஜசூயம் தொடங்க தடையேதும் இல்லை. ஜராசந்தனையே பீமன் வதம் செய்ததால், துரியோதனாதியர்கள் வாயை மூடிக் கொண்டு நடப்பதை வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு வழியற்றுப் போயினர்.
ராஜசூயத்தின் முக்கிய அம்சம் எட்டுத்திக்கும் திக்விஜயம் செய்து அரசர்களிடம் கப்பம் பெற்று வருவது என்பது தான். இதற்காக அர்ஜூனன், பீமன், நகுலன், சகாதேவன், கடோத்கஜன் என்று ஒவ்வொருவரும் திக்விஜயம் புறப்பட்டனர்.
முன்னதாக தர்மர் தன் சகோதரர்களுடன் திருதராஷ்டிரனை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது ராஜசூயத்துக்கு கவுரவர்கள் நூறு பேருக்கும் அழைப்பு விடுத்தார். அதேசமயம் இந்த யாகம் நல்ல விதமாக நடந்து விடாதபடி தடுக்க இன்னொரு அரசனும் இருப்பதை தர்மபுத்திரர் முதல் பாண்டவர் வரை ஒருவரும் உணரவில்லை. அவ்வளவு ஏன் கிருஷ்ண பரமாத்மாவே அதை உணர்ந்ததாக தெரியவில்லை.
அந்த ஒருவன் தான் சிசுபாலன்

No comments:

Post a Comment