Monday, 3 August 2020

வியஸனம்{வருத்தம்}

பகவானாய் இருந்தாலும் வியஸனம் ( வருத்தம் ) உண்டு : —
ஸ்ரீ முக்கூர் லக்ஷ்மி நரசிம்ஹாசாரியார் ஸ்வாமிகள்

பூரி நகரத்திலே மட்டும் பகவான் ஜகன்னாத பெருமாள், சிலாரூபமாக இல்லாமல் ஒரு கட்டை வடிவத்திலே இருக்கிறார். இதற்கு ஒரு கதை.
பகவானுக்கு முதலில் பூமாதாவோடுதான் கல்யாணம் ஆயிற்று. பரமசிவன் பார்வதியோடு வந்து தம்பதியை விருந்துக்கு அழைத்தார்.
கல்யாணமானவுடன் விருந்துக்கு அழைக்கும் பழக்கம் அப்போது ஆரம்பித்ததுதான்!

பூமாதேவியைப் பார்த்து, “போகலாமா”? என்கிறார் பகவான். அவள் சொல்கிறாள்: “நீங்கள் போகும் இடத்துக்கெல்லாம் என்னால் கூடவே வர முடியாது. அசலா (அசையாதவள்) என்று பெயர் அல்லவா எனக்கு! உங்களோடு நான் வந்தால் இந்த சராசரங்கள் அத்தனையும் என்னாவது! நீங்கள் போய் வாருங்கள், என்னால் வர முடியாது!”

பரமாத்மா எல்லா இடங்களுக்கும் தனியாகவே போய் வருகிறான். அவனுக்கு அது ரொம்பவும் வெட்கத்தை அளித்ததாம். போகும் இடத்தில் எல்லாம் “பத்னி எங்கே?” என்று கேட்டால் பதில் சொல்ல முடியவில்லை.

அதனால் சமுத்திர ராஜனின் மகளான லக்ஷ்மியை இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டான் பரமாத்மா.
என்ன ஆயிற்று? மஹாலக்ஷ்மி ஓர் இடத்தில் தங்காமல் ஓடிக்கொண்டேயிருந்தாள். பகவானால் அவளோடு சேர்ந்து ஓடமுடியவில்லை. மூச்சு வாங்கியதாம்.

“போதும் கல்யாணம்” என்று தீர்மானத்துக்கு வந்து, பிள்ளையினிடத்திலே சில நாள் போய் இருக்கலாம் என்று கிளம்பினானாம். பிள்ளை என்றால் மன்மதன்.
மன்மதனிடத்திலே ஒருத்தர் வந்தாராம். “இப்போதுதான் மன்மதன் பரமசிவனிடத்திலே அபசாரப்பட்டு, அவனுடைய நெற்றிக்கண்ணுக்கு ஆளாகி பஸ்மமாகிப் போனான்” என்று செய்தி சொன்னாராம்.

பகவானுக்குப் புத்திர சோகம் தாள முடியாமல் போய்விட்டதாம். மாமனார் கிரஹத்தில் போய் ஆறுதல் தேடலாம் என்று பார்த்தாராம். மாமனார் கிரஹத்துக்குப் பத்தினியை அழைத்துக் கொண்டு போனால் கெளரவம்.. ஆனால் இவன் நிலை வேறாக இருந்தது. இருந்தாலும் பரவாயில்லை என்று புறப்பட்டுப் போனானாம்.

சமுத்திர ராஜனிடம் போனால், பெரிய அலை ஒன்று அடித்து பகவானைத் தூக்கித் தள்ளி விட்டதாம். “உள்ளே நுழையும் முன்பே இந்த மரியாதை! இன்னும் உள்ளே போனால் என்ன நடக்கும்” என்று வருத்தப்பட்டுப் பின்வாங்கினான் பகவான்.

சற்று படுத்து ஓய்வெடுக்கலாம் என்று முடிவு பண்ணி, ஆதிசே-ஷனைப் படுக்கையாக்கி சயனித்தான். படுத்தால், ஆதிசே-ஷன் “புஸ் புஸ்” என்று விஷத்தைக் கக்குகிறான்.
பார்த்தான் பகவான். “சரி நமக்கு இனி உதவுவார் ஒருத்தரும் இல்லை. காசிக்குப் போக வேண்டியதுதான்” என்று புறப்பட்டான்.

கருடாழ்வாரின் மேல் ஏறிப் போய்க்கொண்டிருந்தபோதே, பூரி என்கிற ஊரின் மேல் பறக்கையில் கீழே பூமியில் ஒரு பாம்பு ஊர்வது தெரிந்ததாம். அதைப் பார்த்த கருடன், “நாராயணா! கீழே என் ஆகாரம் போகிறது.. அதைச் சாப்பிட நான் போகிறேன்.. உன்னை இங்கே இறக்கி விடுகிறேன். நீ நடந்து போய்க் கொண்டேயிரு. நான் சாப்பிட்டு முடித்துவிட்டு வருகிறேன்” என்று பகவானை அப்படியே கைவிட்டு விட்டுப் போய்விட்டான்!

பகவானும் கருடாழ்வாரின் அந்த வார்த்தையைக் கேட்டு, “நம் நிலை இப்படி ஆகி விட்டதே” என்று தலையில் கை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டானாம்.
அப்படியே தன வீட்டுக் கஷ்டத்தை நினைத்து நினைத்து பகவான் கட்டையாகவே போய்விட்டானாம்!

இதுதான் பூரியிலே அவன் அப்படிக் காட்சியளிப்பதன் பின்னணிக் கதை.
இப்படியொரு கதை உருவானதே, வியஸனம் என்பது யாரையும் விட்டு வைக்காது என்பதை நமக்கு உணர்த்தி சமாதானம் செய்யத்தான்.
பகவத் சரித்திரங்களும், இதிகாசங்களும் வியஸனம் வந்தால் சிரமப்படாதே என்று சொல்கின்றன.

No comments:

Post a Comment