Tuesday, 22 September 2020

பெண்கள் விரும்பும் ஆண்களின் ஜாதகம் எவ்வாறு இருக்கும்??

பெண்கள் விரும்பும் ஆண்களின் ஜாதகம் எவ்வாறு இருக்கும்?? எப்படிப்பட்ட அமைப்புள்ள ஜாதகம் கொண்டவர்களை பெண்கள் விரும்புவார்கள்?? எந்த ராசிக்காரர்களை பெண்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்??

பொதுவாக மிதுனம், கன்னி ராசியை லக்னமாக கொண்டவர்களை பெண்கள் மிகவும் விரும்புவார்கள்.. ஆனால் அதற்கு முன்னாடி மிதுன,கன்னி லக்ன அதிபதியான புதன் வலுத்து இருக்கவேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம்.

  .. இந்த லக்னங்களில்  பிறந்தவர்கள் அதிக புத்திசாலிகள்.. புத்திசாலிகளை யாருக்குத்தான் பிடிக்காது?? பொதுவாக மிதுன லக்னத்தவர்கள் சிரித்து பேசியே மற்றவரை மயக்கி விடுவார்கள்.. இந்த ராசிக்காரர்கள் சிலருக்கு சிரித்தால் கன்னத்தில் குழி விழும்.. மிதுன லக்னத்தை ராசியாக கொண்டவர்கள் ஒரு மாதிரியானவர்கள்.எப்படியும் பிழைத்து கொள்வார்கள் என்பதால் பிழைக்க தெரிந்த இவர்களை பெண்கள் மிகவும் விரும்புவார்கள்..

 பெண்கள் விரும்பும் பட்டியலில்அடுத்த இடத்தைப் பிடிப்பவர்கள் கன்னியை லக்னமாக கொண்டவர்கள்.. இவர்கள் மாதவன்,அப்பாஸை போன்று மீசை இல்லாமல் கொழுக் மொழுக் என்று இருப்பதால் இவர்களையும் பெண்கள் மிகவும் விரும்புவார்கள். பொதுவாக அந்த காலத்தில் மீசை வைத்து இருப்பதே வீரம் என்று அழைக்கப்பட்டது..
தற்போது வீரம் என்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதாலும் 
ஷாருக்கான் போன்றவர்கள் மீசை இல்லாமல்  திரையில் சாதித்து உள்ளதோடு அல்லாமல் அவருக்கு கோடிக்கணக்கான பெண் விசிறிகள் இருப்பதையும் நாம் காணமுடிகிறது...

கன்னியை லக்னமாக கொண்டவர்கள் கொஞ்சம் பெண் தன்மை கொண்டவர்களாக இருப்பதுண்டு.. அதற்கு பெயரே கன்னி ராசி.. அதன் அதிபதி புதனோ இரட்டை தன்மை உடையவர் என்பதையும் மறுக்க முடியாது.. கன்னியா லக்னத்தை கொண்டவர்கள் மிகவும் நைச்சியமாக , அழகாக, நகைச்சுவை உணர்வோடு , மிகவும் இனிமையாக பேசக்கூடியவர்கள் என்பதாலும்  இவர்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்..

நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வையும் , நிலத்தில் யார்க்கும் அஞ்சாத தன்மையை கொண்ட சிம்ம லக்னத்தை கொண்டு பிறந்த , சிம்மத்தின் அதிபதியான சூரியன் வலுத்து உள்ளவர்களை பெண்கள் மிகவும் விரும்புவார்கள்..இயல்பாகவே ஸ்ட்ரெய்ட் பார்வார்டு ஆன சிம்மத்தை குரு பார்த்து விட்டால் தன்னம்பிக்கை யுடன் , தலைமை பொறுப்பு, நிர்வாக திறமை உள்ள இவர்கள் பெண்களின் கண்ணை பார்த்து பேசுவதால் பெண்களுக்கு இவர்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. தலைமை பொறுப்புள்ள, சமூக அக்கறை உள்ள, நேர்மையான, நிமிர்ந்த நன்னடை, நன்னெறி கொண்ட எந்த ஆணைத்தான் பெண்களுக்கு பிடிக்காது?

எந்த லக்னமாக இருந்தாலும் லக்னாதிபதி வலுத்து, சந்திரனும் சுக்கிரனும் வலுவாக உள்ள ஜாதகர்களை பெண்கள் மிகவும் விரும்புவார்கள்.. ஏனென்றால் இவர்கள் பெண்களை மதிப்பவர்கள்.மனஉறுதி மிக்கவர்கள்..பெண்களை போற்றி பாதுகாப்பவர்களை, மதித்து நடப்பவர்களை, கண்ணியமாக நடத்துபவர்களை  எந்த பெண்ணுக்குத்தான் பிடிக்காது???

பொதுவாக சுக்கிரன் ஆட்சி, உச்சம்,மூலத்திரிகோணம் பெற்று, கேந்திர ,திரிகோணங்களில் ஆதிபத்திய விஷேஷத்துடன்,சனி, செவ்வாய், ராகு போன்ற பாவ கிரகங்களின் சேர்க்கை பார்வை போன்ற  தொடர்புகளை பெறாமல், குரு , புதன் போன்ற சுபக்கிரகங்களின் தொடர்பை பெற்று சுபத்தன்மையுடன் அமையப் பெற்றவர்கள்  பெண்களை மதித்து நடப்பவர்கள்.. கண்ணியம் மிக்கவர்கள்.
பெண்களை பாதுகாப்பவர்கள் என்பதால் இவருடன் இருந்தால் நமக்கு பாதுகாப்பு என்று கருதி  அனைத்து பெண்களும் இவர்களை நிச்சயமாக விரும்பவே செய்வார்கள்..

ஏழாம் இடத்தை , ஏழாம் அதிபதியை, சுக்கிரனை குரு பார்த்த அமைப்பு உள்ளவர்களை பெண்கள் மிகவும் விரும்புவார்கள்.. ஒருவருக்கு சுக்கிரன் தசை நடக்கும் போது அவருக்கு ஒரு பெண்ணின் நட்பு கிடைத்து அந்த நட்பு 
காதலாகி பின் கல்யாணத்தில் கண்டிப்பாக முடியும்..

ஒருவருக்கு ஏழரைச்சனியில் ஜென்ம சனி நடக்கும் போதும், ஏழரைச்சனியும் நடந்து ,சனி தசையில், சனி புக்தி அதாவது சுயபுக்தி நடக்கும் போதும் அந்த
காதல் தோல்வியில் முடியும்.. அந்த நேரங்களில் காதலிக்காமல் இருப்பது ரொம்ப ரொம்ப நல்லது.. அந்த காலத்தில் மனஅழுத்தம் ஏற்பட வேண்டும் என்பது விதி.. 

அதேபோல சுக்கிரன் சனி, செவ்வாய், ராகு,கேதுக்களால் கடுமையாக பாதிக்கப்படும்போது இவர்கள் பெண்களின் கண்ணை பார்த்து பேசமுடியாது என்பதால் பெண்கள் இவர்களை சரியான ஜொல்லு பார்ட்டி, இவனிடம் மாட்டக்கூடாது என்று சுக்கிரன் கெட்டவர்களை விட்டு காததூரம் ஓடிவிடுவார்கள்..

அதேபோல சுக்கிரன் பகை, நீசம் பெற்று ராகுவுடன் மிக நெருங்கி ,சனி, செவ்வாய் பார்வையை பெறும் போது இவர்களுக்கு தாம்பத்ய சுகத்தின் மேல் ஆர்வமே இருக்காது..

இரண்டாம் இடத்தில் சுபர் இருக்க , இரண்டாம் இடத்தை குரு பார்க்க , வாக்கு,புக்தி,வித்தை காரகனான புதன் வலுவாக இருக்க எந்த லக்னமாக இருந்தாலும், ராசியாக இருந்தாலும் அவர்களை எல்லாம் பெண்கள் மிகவும் விரும்பவே செய்வார்கள். ஏனென்றால் பெண்களுக்கு பேச்சு என்றால் அவ்வளவு ஒரு அலாதி பிரியம்..

மேஷ ராசி பெண்களுக்கு சிம்ம ராசி, விருச்சிக ராசியை சார்ந்த ஆண்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும்..  ரிஷப ராசியை சார்ந்த பெண்களுக்கு கடக ராசி மற்றும் துலாம் ராசியை சார்ந்த ஆண்களின் மேல் ஒரு ஈர்ப்பு மற்றும் ஒரு புரிதல் இருக்கும்.. மிதுனத்திற்கு கன்னியை ரொம்ப பிடிக்கும்..
கடகத்திற்கு , விருச்சிகம் மற்றும் தனுசு மேல் ஒரு காதல் எப்போதும் உண்டு..

சிம்மத்திற்கு மகரம் வசியமாகும்.கன்னி ராசி பெண்களுக்கு ரிஷப, மீனம் ஆண்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும்..
துலாம் ராசியும் மகர ராசியும், ஒன்றை ஒன்று ஈர்க்கும்.. விருச்சிக ராசி பெண்களுக்கு கடக ராசி மற்றும் கன்னி ராசி ஆண்களின் மீது ஒரு கவர்ச்சி ஏற்படும்... தனுசு ராசி பெண்களுக்கு மீன ராசி ஆண்கள் என்றால் அவ்வளவு இஷ்டம்.. ஏனென்றால் இருவரின் ராசி அதிபதிகளும் ஒருவர் ஆகவே வருவார்கள்.. அதாவது இவர்களின் ராசி அதிபதி குரு பகவான் ஆவார்..
அதேபோல மகரத்திற்கு கும்பம் மற்றும் மீனத்திற்கு மகரம் வசியமாக வரும்..

இந்த வசிய பொருத்தம் நல்லதா?? என்று நாம் நமக்குள்ளே கேள்வி எழுப்பி கேட்டோமே ஆனால் இந்த வசிய பொருத்தம் உள்ள ஆண் பெண் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் ஒரு மணிநேரம் பிரிய மாட்டார்கள்.. மிகவும் அன்னியோன்யமாக இருப்பார்கள்.
கிராமத்தில் அவள் வசியம்செய்துவிட்டாள் என்று பலர் சொல்வதை நாம் கேள்விப்பட்டு இருப்போம்.

இவர்கள் காலநேரம் இரவு பகல் என்றில்லாமல் எப்போதுமே அன்னியோன்னியமாக அதாவது சல்லாபத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பதால் அந்தப் பையனின் பெற்றோர்களுக்கு அந்த வீட்டுப் பெண்ணின் மீது மருமகள் மீது கோபம் வரும். முப்பது வருடம் கஷ்டப்பட்டு, அரும்பாடுபட்டு, பால் ஊற்றி, நெய் ஊற்றி வளர்த்த தன் பையனை மூன்றே நிமிடத்தில் தன் பக்கத்தில் ஈர்த்து விட்டாளே! தன் பையனை கபளீகரம் பண்ணிவிட்டாளே இந்தப் பெண் என்று அந்தப் பெண்ணின் மீது அந்த மருமகள் மீது பையனின் பெற்றோர் வெறுப்பை காட்டுவதை நாம் தினந்தோறும் அனுபவத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இவர்கள் விரைவில் தனிக்குடித்தனம் செல்வதையும் நாம் அனுபவத்தில் பார்க்கிறோம்..

ஒரு ஆடவனின் ஜாதகத்தில் ஏழாமிடம் வலுத்து, ஏழாம் இடத்து அதிபதி வலுத்து, சுக்கிரன் ஆட்சி ,உச்சமாக கேந்திர திரிகோணங்களில் அமைய,
நான்காம் இடம் ,நான்காம் அதிபதி, சந்திரன் அந்த ஜாதகத்தில் கெட்டுப் போக ஜாதகன் திருமணம் ஆனவுடன் தனிக்குடித்தனம் சென்று விடுவாள்.. இவனுக்கு தாயா அல்லது தாரமா என்ற பிரச்சினை வரும்போது இவன் தாரத்தின் பக்கமே நிப்பான்.ஏனென்றால் ஏழாமிடம் ,ஏழாமிடத்ததிபதி, சுக்கிரன் இவர்கள் மூவரும் மனைவியை குறிப்பவர்கள்... இவர்கள் மூவரும் காமத்திற்கு காரகம் மற்றும் பொறுப்பு வகிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
இவர்களுக்கு இரவானதும் மனைவியின் துணை தேவைப்படுமே., காமம் தேவைப்படுமே !அதற்கு மனைவி வேண்டுமே ?? தாயின் மீது பாசம் இருந்தாலும் தாயை பின்னொரு நாளில் சமாதானம் செய்து கொள்ளலாம் என்று முழுவதுமாக மனைவியின் பக்கம் சேர்ந்து விடுவார்கள்.இதெல்லாமே விதியின் விளையாட்டு என்றால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.. ஏழரைச்சனியில், அஷ்டமசனியில் உங்களுக்காக நடக்கும் இந்த தர்மயுத்தத்தில் நீங்கள் தாயாருடன் பகை ஏற்பட்டு , தாய்க்கும் மனைவிக்கும் இடையில் இடியாப்ப சிக்கலில் இருக்கும் நீங்கள் தாயுடன் பகை ஏற்பட்டு தனிக்குடித்தனம் செல்வீர்கள்.. இந்த தர்மயுத்தத்தில் மனைவியின் கையே ஓங்கி இருக்கும்..

பொதுவாக ஒரே ராசி மற்றும் திரிகோண ராசிகளைசேர்ந்த ஆண் பெண் இருவரும் காதல் கொள்கிறார்கள்.. இருவரும் ஒரே லக்னம் என்றாலும் விதி இவர்களை ஒன்று சேர்த்து விடுகிறது .ஒருவரின் லக்னம் இன்னொருத்தர் ராசி என்றாலும்,, இன்னொருத்தர் ராசி இவர்களின் லக்னம் என்றாலும் ஒருவருக்கு ஒருவர் பிடித்துவிடுகிறது.. சமசப்தமமான ராசிகளை சேர்ந்தவர்களும் திருமணம் எனும் பந்தத்தில் இணைகிறார்கள்.. இவர்களை விதி ஒன்று சேர்த்து விடுகிறது.

சம சப்தமராசிகள் என்று  சிம்மத்தையும், கும்பத்தையும் விதி இணைத்து வைத்தால் இவர்கள் இருவரும் நாயும், பன்றியும் போல அடித்துக் கொள்கிறார்கள்.. ஏனென்றால் இந்த ராசி அதிபதிகளான சூரியனும் சனியும் ஜென்மப் பகைவர்கள். இதற்கும் விதிவிலக்குகள் இருக்கவே செய்கிறது. ஏழாம் இடத்தை ஏழாமதிபதியை, சுக்கிரனை குரு பார்க்க பிறந்தவர்கள் ஒற்றுமையாக, சந்தோஷமாக வாழவே செய்வார்கள். இவர்கள் பகலில் அடித்துக் கொண்டாலும் இரவில் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள்..ஊடலுக்கு பின் வரும் கூடல் என்பதால் அது மிகவும் முக்கியத்துவம் பெற்று விடுகிறது..

ஏழாம் இடத்தை, ஏழாமதிபதியை, சுக்கிரனை குரு பார்க்க பிறந்தவர்கள் மனைவி வந்த பின்பு வாழ்க்கையின் முன்னேற்றத்தை அடைகிறார்கள்.. உயர்வை அடைகிறார்கள். இவர்களின் திருமணம் பெற்றோர்கள் பார்த்து நிச்சயம் செய்து, உறவுகள் போற்ற, மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத, ஆயிரம் ஆயிரம் ஆன்றோர்களும் நட்புகளும் அட்சதை தூவி வாழ்த்த, திருமணம் வெகு விமர்சியாக ஜாம் ஜாம் என்று நடப்பதையும் நாம் அனுபவத்தில் காண்கிறோம்..

பெண்ணின் ராசியும் ஆணின் ராசியும் சஷ்ட, அஷ்டமமாக அமையப்பெறும் ஜாதகர்கள் ஒருவர்மேல் ஒருவருக்கு ஈர்ப்பு ஏற்படுவதில்லை இது ஒன்றை ஒன்று கண்டிப்பாக விலக்கும்.. இதற்கும் கண்டிப்பாக விதிவிலக்குகள் உண்டு.. அது என்ன என்றால் இருவரின் ராசி அதிபதிகளும் ஒருவரே என்றால்
 இங்கே விதி விலக்கு பெறுகிறது..
உதாரணமாக பெண் மேஷராசி என்றால் ஆண் விருச்சிக ராசி யாக வரும் போது இருவரின் ராசி அதிபதிகளும் செவ்வாய் ஒருவரே என்பதால் இங்கு விதி விலக்கு கிடைக்கிறது‌.. ஆனால் துரதிர்ஷ்டவசமாக கன்னி ராசியை சார்ந்த பெண்களுக்கு மேஷ ராசியின் மீது ஈர்ப்பு வருவது இல்லை.மிதுன ராசியை சேர்ந்த பெண்களுக்கு விருச்சிக ராசியை சேர்ந்த ஆண்களின் மீது ஈர்ப்பு, காதல், லொட்டு லொசுக்கு வருவதேயில்லை.. இது ஏன் என்று நீங்களே சிந்தித்துப் பார்த்து, ஆராய்ந்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதேபோல யோனி பகை உள்ள ஆண்களை பெண்கள் விரும்புவதில்லை.. உதாரணமாக ரோகினி, மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் மகம் பூரம் நட்சத்திர ஆண்களை விரும்புவதில்லை..ஏனென்று நாம் கொஞ்சம் சிந்தித்து பார்த்தோமேயானால் ரோகினி, மிருகசீரிஷம் இரண்டும் ஆண் நாகம், பெண் சாரை என்று பாம்புகளின் யோனிகளாக வரும்.. மகம் பூரம் இரண்டும் ஆண்எலி, பெண்எலி என்று இரண்டும் எலியின் யோனிகளாக வரும்..
பாம்புக்கும்,எலிக்கும் ஜென்ம பகை என்பதால் இவர்கள் இருவரும் விதியின் வசத்தால் இணைந்து வாழ்க்கையை தொடங்கினால் யோனிப்பகை உள்ள காரணத்தால் தாம்பத்ய உறவில் சிக்கல் ஏற்பட்டு முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல கோர்ட் வாசலில் போய் இவர்களின் காதல் முறிந்து ப்ரேக் அப் ஆவதை பார்க்கிறோம்.

அதேபோல இரண்டு வருடங்களுக்கு முன்னாடி மூல நட்சத்திர பெண்மணியை காதலித்த பையன் அந்தப் பெண்ணின் மீது சந்தேகப்பட்டு, அந்தப் பெண் வேறு ஒரு பையனுடன் பேசுகிறார் என்று திட்டி அசிங்கப்படுத்தி, அந்த காதலும் பிரேக்கப் ஆனதை நான் பார்த்திருக்கிறேன்.. இந்த காதல் பிரேக் அப் ஆயிடும் என்று முன்னாடியே கணித்து சரியாக கூறினேன்..ஏழு வருட காதல் ஜென்ம சனியில் ஒரேநாளில் ஊற்றிக்கொண்டு விட்டது.. அந்த பையன் அந்தப் பெண்ணை திட்டியதோடு, கேவலமாக பேசியதோடு அல்லாமல் அவள் அம்மாவிடம் அவளை பற்றி தவறாக சொல்லி அவர் அம்மாவிடம் சண்டை போட்டதால் அந்த பெண் சரிதான் போடா என்று போயே விட்டாள்.. இவன் ஒரு வருடம் பைத்தியம் பிடித்து திரிந்தான்..

No comments:

Post a Comment