Thursday, 1 October 2020

திவசம் மற்றும் தர்ப்பணம் பற்றி விளக்கம். ..

திவசம் வேறு, தர்ப்பணம் வேறு. தர்ப்பணம் என்பது ஒவ்வொரு நாளும் எல்லோரும் செய்ய வேண்டிய புண்ணிய காரியம். சூரியன், வருணன், அக்கினி என எல்லா தேவர்களுக்கும் நீர்நிலைகளில் நின்று ஜலத்தை அள்ளி விட்டு 'ஆதித்யா தர்ப்பயாமி' என ஒவ்வொரு தேவர்களுக்கும் செய்வதே தர்ப்பணம். தர்ப்பணம் என்றால் 'திருப்தி செய்வது' என்று பொருள். நீரை அவர்களுக்கு அளித்து அருளைப் பெறுவது. ஆனால், அமாவாசை மற்றும் இறந்தவர்களின் திதி அன்று மட்டும் எள்ளும், நீரும் கலந்து இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். இந்த இரு நாட்களில் மட்டுமே இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்யவேண்டும். அதிலும் இதை ரத்த சம்பந்தம் கொண்டவர்கள் மட்டுமே செய்யவேண்டும்.

திவசம் என்றால் இறந்தவர்கள் எந்த மாதம் எந்த திதியில் இறந்தார்களோ, அந்த மாதம் அந்தத் திதியில் (பஞ்சமி என்றால் அந்த மாத

பஞ்சமி) பிராமணரை அழைத்து செய்யப்படும் ஒரு விரிவான சடங்கு. ஹோமம் வளர்த்து முதலில் தேவர்களை திருப்தி செய்ய வேண்டும். பின்னர் 3 தர்ப்பை புல்லில், இறந்து போனவர் மற்றும் அவர்களது முன்னோர்கள் என அனைவரையும் மானசீகமாக வரவழைத்து அவர்களின் மேல் பிண்டம் வைத்து உணவளிக்க வேண்டும். அந்த பிண்டத்தை பசுக்களுக்கு அளித்து பிராமணருக்கு அரிசி, காய்கறிகள், தட்சிணை அளித்து ஆசி பெற வேண்டும். பின்னர் படையல் இட்டு, காக்கைக்கு உணவிட்டு, அதன் பிறகே வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட வேண்டும். இதுவே திவசம் எனப்படுகிறது. இது வசதியுள்ளவர்கள் பண்ணக்கூடியது. வசதியில்லாதவர்கள் அந்தத் திதியில் நீர்நிலைகளுக்குச் சென்று எள்ளும் நீரும் தெளித்து தர்ப்பணம் கொடுக்கலாம்.

ஆனால் திவசமோ, தர்ப்பணமோ திதியைப் பார்த்து மட்டுமே தர வேண்டும். இருக்கும்போது நட்சத்திரம் என்பார்கள். அதாவது உங்களின் பிறந்த நாளை நீங்கள் பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டே கொண்டாடவேண்டும். மாசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்து இருந்தால் மாசி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாளன்றுதான் உங்கள் பிறந்த தினத்தைக் கொண்டாட வேண்டும் அதுவே நமது மரபு. அப்போதுதான் கடவுளின் பரிபூரண ஆசி உங்களுக்கு கிட்டும்.

அதைப்போலவே இறந்தவர்களுக்கு அவர்கள் இறந்து போன திதிதான் முக்கியம். அன்றைய தினத்தில் மட்டுமே அவர்கள் நம்மை நாடி வருகிறார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. அமாவாசை மற்றும் இறந்து போன திதியில் மட்டுமே அவர்கள் வருகிறார்கள். எனவே அதை விடுத்து அவர்கள் இறந்து போன தேதியை கணக்கிட்டு திதி கொடுப்பது வீணானதுதான். அவர்கள் பூமிக்கு வராத நாளில் அவர்களுக்கு உணவளிப்பது என்ன பயனைத் தரும்? ஒரு மாதம் என்பது இறந்து போனவர்களுக்கு ஒரு நாள், அந்த ஒருநாளில் அவர்கள் மறைந்து போன திதி அல்லது அமாவாசை தினம் மட்டுமே அவர்கள் திருப்தியைத் தேடி வருகிறார்கள். அந்த நாட்களில் மட்டுமே திவசம், தர்ப்பணம் போன்றவற்றை கொடுக்க வேண்டும்'' என்றார்.

''பொதுவாக ஒரு வருடத்தில் இத்தனை திவசம் கொடுக்கவேண்டும் என்று சாஸ்திரங்களில் உள்ளதா?'' என்று கேட்டோம்.

''இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை இறந்தவர்களின் திதியைக் கணக்கிட்டு கொடுப்பதுதான் திவசம் என்றாலும், இறந்து போனவர்களுக்கு ஓராண்டுக்குள் 16 முறை திவசம் கொடுக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஆன்மாவின் அங்கமான 16 அம்சங்களும் சொர்க்கத்தை அடைய உறவினர்கள் செய்யும் இந்த 16 திவசங்கள் அவர்களை திருப்திப்படுத்தி, அவர்கள் ஜன்மசாபல்யம் அடையச் செய்து விடுகிறது. திவசங்கள் கட்டாயமாக இறந்தவரது குடும்பத்தாரால்தான் செய்யப்பட வேண்டும். இறந்து போனவர்களின் 10-ம் நாள், 16-நாள் காரியங்கள், மற்றும் மாதாமாதம் ஒரு திவசம், 27-ம் நாள் ஒரு திவசம், 12-ம் மாதத்துக்கு முன்பு ஒன்று என மொத்தமாக 16 முறை திவசங்கள் செய்வது இறந்து போனவரின் ஆன்மாவை குளிரச்செய்து விடும்.

இறந்தவர்களின் ஆன்மா, அது மேற்கொள்ளும் யாத்திரை, அப்போது அவர்களுக்காக நாம் செய்ய வேண்டிய கைங்கரியங்கள் என எல்லாவற்றையுமே கருட புராணம் விளக்கமாகக் கூறுகிறது. ஆனால், கருட புராணத்தை வீட்டில் படிக்கவே கூடாது. இறந்தவர்கள் வீட்டில் மட்டுமே படிக்கலாம் என்பது நம்பிக்கை. எல்லோருமே இறந்தவர்களின் முதல் ஆண்டுக்குள் 16 முறை திவசம் கொடுப்பது நல்லது. அந்நிய நாட்டு பழக்க வழக்கங்களால் நாம் நிறைய மாறி விட்டோம், ஆனால் வாழும்போது நட்சத்திரம்; வாழ்ந்த பிறகு திதி என்பதே நம்முடைய மரபு. அதன்படியே வழிபாடு செய்து பித்ருக்களை மகிழ்வித்து அவர்களின் ஆசிகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வோம்'' என்றார்.

No comments:

Post a Comment