ஒரு காட்டில் ஆமையும், நத்தையும் நண்பர்களாய் இருந்தன. அவை இரண்டுக்கும் நீண்டகாலமாக, ஒரு மனக்குறை இருந்தது. தங்களால் வேகமாக நடக்கவோ, தாவிக் குதித்து ஓடவோ முடியவில்லை என்ற மனக்குறைதான் அது.
ஒருநாள், அவை இரண்டும் நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஓர் அழகிய வெள்ளை நிற முயல் தாவிக் குதித்து, ஓடி வருதைக் கண்டன.
"முயலே நில்!'' என்றது ஆமை.
முயல் நின்றது.
"நீ எப்படி இவ்வளவு வேகமாய் தாவிக் குதித்து ஓடுகிறாய்?'' என்று கேட்டது நத்தை.
"இது என்ன கேள்வி! உங்களுக்கு இருப்பதுபோல், என் முதுகில் கனமான ஓடு இல்லை. அந்தச் சுமை இல்லாததால், வேகமாக ஓடுகிறேன்!'' என்று சொல்லி விட்டு, முயல் அந்த இரண்டையும் இளக்காரமாகப் பார்த்தது.
"ஓஹோ! எங்களின் வேகக் குறைவுக்கு எங்கள் ஓடுதான் காரணமா?''
"ஆமாம்! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட்டால், என்னைப் போல் வேகமாக ஓடலாம். வேகமாக ஓடுவதில், ஓர் அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா... அனுபவித்துப் பாருங்கள்!'' என்றது முயல்.
ஆமைக்கும், நத்தைக்கும் அந்த இடத்திலேயே தங்கள் முதுகு ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.
அவற்றைக் கழற்ற முயன்றபோது, திடீரென புதர் மறைவில் ஏதோ அசையும் ஓசை கேட்டது.
ஆமையும், நத்தையும் ஆபத்தை உணர்ந்து, தங்கள் ஓடுகளைக் கழற்றும் முயற்சியைக் கைவிட்டன.
சட்டென, புதர் மறைவிலிருந்து ஓரு ஓநாய் வெளிப்பட்டு, முயலை நோக்கிப் பாய்ந்தது.
ஆமையும், நத்தையும், விருட்டென்று தங்கள் உடலை ஓடுகளுக்குள் இழுத்துக் கொண்டு, உயிர் பிழைத்தன.
ஓநாய் முயலைப் பிடித்தது.
சிறிது நேரம் சென்ற பிறகு ஓடுகளை விட்டு வெளியே வந்த ஆமையும், நத்தையும் முயலின் ரத்தத்தைப் பார்த்து, உறைந்து போயின.
தாங்கள் வேகமாய் ஓடுவதைவிட, உயிர் பிழைத்து வாழ்வதே முக்கியமானது என்பதை உணர்ந்தன. தங்கள் எதிரியிடமிருந்து காப்பாற்றிய தங்கள் ஓடுகளுக்கு அவை நன்றி கூறின.
No comments:
Post a Comment